முதலீடுகளை ஈர்க்கும் முகேஷ் அம்பானி சாதித்தது எப்படி?

346

‘’எதையும் பெரியதாக யோசியுங்கள்; வேகமாக யோசியுங்கள்; முன்னோக்கி யோசியுங்கள்’’ என்ற சிந்தனை உடையவர் முகேஷ் அம்பானி. அந்த சிந்தனையை செயலாக்கி மற்றுமொரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் அவர்

கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.1,61,035 கோடி நிகர கடன் இருந்தபோது, 2021 ஆம் ஆண்டு மார்ச் 31க்குள் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து கடன்களும் அடைக்கப்படும் என்று பங்குதாரர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார் முகேஷ் அம்பானி. .

இச்சூழலில், கொரோனாவால் உலகப் பொருளாதாரமே உருக்குலைந்து கிடக்க, கடந்த இரு மாதங்களில் மட்டும் 11 வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சுமார் ரூ.1,15,693.95 கோடி முதலீட்டை ஈர்த்தது ரிலையன்ஸ் நிறுவனம். மேலும், ரிலையன்ஸ் உரிமங்கள் மூலம், ரூ.53 ஆயிரம் கோடி நிதி திரட்டியது இந்நிறுவனம். இந்த நிலையில் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே, வாக்குறுதி அளித்ததை போல தனது நிறுவனத்தின் மொத்த நிகர கடனையும் அடைத்துள்ளார் முகேஷ் அம்பானி.

மட்டுமின்றி, அந்நிய முதலீடுகளால் ரிலையன்ஸ் சந்தை மதிப்பு உயர்ந்ததை தொடர்ந்து, போர்ப்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார். போர்ப்ஸ் கணக்கின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 4.9 லட்சம் கோடி ரூபாய். அம்பானி எப்படி ரிலையன்ஸை கடனில்லாத நிறுவனமாக மாற்றினார்?

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனி சுமார் 5.4 லட்சம் கோடி ரூபாயை பல தொழில்களில் முதலீடு செய்தது. அதிலும் குறிப்பாக 3.5 லட்சம் கோடி ரூபாயை ரிலையன்ஸ் ஜியோவில் மட்டும் முதலீடு செய்தார்கள். மார்ச் 2020 கணக்குப்படி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த கடன் 3.36 லட்சம் கோடி ரூபாய். ரிலையன்ஸ் கையில் இருக்கும் பணம் 1.75 லட்சம் கோடி ரூபாய். ஆக மீதி இருக்கும் 1.61 லட்சம் கோடி ரூபாய் தான் நிகர கடன். இந்த 1.61 லட்சம் கோடி நிகர கடனைத் தான் அடைத்துக் காட்டுகிறேன் என களமிறங்கினார் அம்பானி.

ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸை ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து தொடங்கினார் அம்பானி. ஃபேஸ்புக், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் 9.99 சதவிகித பங்குகளை ரூ.43,574 கோடிக்கு வாங்கியது. ஃபேஸ்புக் போன்ற ஒரு உலகறிந்த புகழ்பெற்ற கம்பெனி ரிலையன்ஸில் முதலீடு செய்கிறது என தகவலறிந்து, உலக முதலீட்டாளர்களின் கவனம் ஜியோ பக்கம் திரும்பியுள்ளது. சில்வர் லேக், விஸ்டா ஈகுவிட்டி, ஜெனரல் அட்லாண்டிக், கே.கே.ஆர்., முபதலா, எல் கேட்டர்டன் உள்ளிட்ட பல பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் ரிலையன்ஸ் ஜியோவில் முதலீடு செய்தன.

ரிலையன்ஸ் ஜியோ கம்பெனியின் 24.7 சதவிகித பங்குகளை விற்று, மொத்தம் 1,15,693 கோடி ரூபாயை திரட்டி இருக்கிறார் முகேஷ் அம்பானி. இன்னும் 75.3 சதவிகித பங்குகள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வசம்தான் இருக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோவை தனி நிறுவனமாக, இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிட இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. இதன்மூலம் உலக அளவில் தொடர்ச்சியாக அதிக அளவிலான முதலீட்டைப் பெறும் நிறுவனமாக ஜியோ திகழ்கிறது.

தவிர ரிலையன்ஸ் வெளியிட்ட உரிமைப் பங்குகள் மூலம் ரூ. 53,124 கோடி சேர்ந்தது. எல்லாவற்றையும் சேர்த்துப் பார்த்தால் மொத்தம் 1.68 லட்சம் கோடி ரூபாய். இதனைத்தொடர்ந்து ரிலையன்ஸ் கடன் இல்லாத நிலையை எட்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் அம்பானி.

மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11 லட்சம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது. இந்தியாவில் முதல் முறையாக ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 11.19 லட்சம் கோடியைத் தொடுவது ரிலையன்ஸ் நிறுவனமாகத் தான் இருக்கும்.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனை, கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை என பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடந்தபோதும் கூட பங்குச்சந்தையில் ரிலையன்ஸின் பங்கு விலை தன் புதிய வாழ்நாள் உச்சமான 1,656 ரூபாயைத் தொட்டு இருக்கிறது.

சர்வதேச அளவிலான ஊரடங்கு நிலைக்கு மத்தியில் இத்தனை முதலீடுகளைப் பெற்றது பன்னாட்டு தொழிலதிபர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ”இது இந்தியாவின் டிஜிட்டல் திறன் மற்றும் ஜியோவின் தொழில் யுக்திக்கு கிடைத்த வெற்றி’ என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் முகேஷ் அம்பானி.
ரிலையன்ஸ் என்கிற மாபெரும் வணிக சாம்ராஜ்ஜியத்தின் தற்போதைய சக்கரவர்த்தியாக திகழும் முகேஷ் அம்பானியின் வெற்றிக்கதையை கொஞ்சம் திரும்பி பார்க்கலாம்.

1957-ஆம் ஆண்டு முகேஷின் தந்தை திருபாய் அம்பானி அப்போது ஏமனில் சிறிய அளவிலான தொழில் செய்து கொண்டிருந்தார். முகேஷ் பிறந்த ஓராண்டிற்குள் ஏமன் நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பங்கள் காரணமாக திருபாயின் தொழில் மிகக்கடுமையான பாதிப்பைச் சந்தித்து. அதன் காரணமாக உடனடியாக இந்தியா திரும்பிய திருபாய் இந்தியாவியேயே தொழில் தொடங்க முடிவு செய்தார்.

மும்பையின் மஸ்ஜித் பந்தர் பகுதியில் அமைந்திருந்த 350 சதுர அடி அளவிலான சிறிய அறை தான் இன்றைக்கு இந்தியாவின் மிகப்பெரும் வணிக சாம்ராஜ்யமாக திகழும் ரிலையன்ஸின் முதல் செங்கல். அப்போது அந்நிறுவனத்தின் பெயர் ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன். தன்னுடைய உழைப்பின் காரணமாகவும் தொழில் உத்திகள் காரணமாகவும் படிப்படியாக உயர்ந்தார் திருபாய். தொழில் விரிவடைந்தது. செல்வம் குவியத் தொடங்கியது.

ஒரு விஷயத்தில் திருபாய் மிகவும் தெளிவாக இருந்தார். தன்னுடைய செல்வச்செழிப்பான நிலை தன் குழந்தைகள் வளரும் விதத்தை எந்தவிதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பதுதான் அது. அதன் காரணம் மிகவும் எளிமையானது.

ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்தவர் திருபாய். படிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும் குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பதின்ம வயதிலேயே ஏமனுக்கு வேலைத்தேடி சென்றவர் அவர். வாழ்வில் வெல்வதற்கான உந்துசக்தியாக திருபாய்க்கு அமைந்தது அவருடைய தொடக்ககால வாழ்வின் வறுமை. அதன் காரணமாகவே பெரிதான கனவுகளை உருவாக்கி அது நிறைவேறும் வரை ஓயாமல் உழைத்து வாழ்வில் வெற்றிபெற திருபாயால் முடிந்தது. தன்னுடைய குழந்தைகளை செல்வச்செழிப்பில் வளர்க்க திருபாய் விரும்பாததன் காரணமும் அதுவே. முகேஷ் அம்பானி அப்படியொரு கட்டுப்பாட்டில் வளர்க்கப்பட்டவர்.
1977-ம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவத்தை பொது நிறுவனமாக அறிவித்தார் திருபாய். அதன் ஒரு பங்கின் விலை பத்து ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அவர்களில் பெரும்பாலோர் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நடுத்தர மக்கள். உலகளவில் அதிக பங்குதாரர்களை கொண்ட நிறுவனமாக ரிலையன்ஸ் வளர்ச்சிப் பெற்றது.

அச்சமயத்தில மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திராகாந்தி தலைமையிலான அரசு ஒரு முக்கிய முடிவெடுத்தது. பாலியஸ்டர் இழை நூல் தொழிலில் ஈடுபட தனியார் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஜவுளித் தொழில் இருந்து பாலியஸ்டர் தொழிலில் இறங்க முடிவெடுத்தார் திருபாய்.

அதற்காக தன்னுடைய மூத்த மகன் முகேஷ் அம்பானியின் கல்வியை பாதியில் நிறுத்த முடிவெடுத்தார். அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை படித்துக் கொண்டிருந்த முகேஷ் இந்தியா திரும்பினார். ரிலையன்ஸ் நிறுவனம் பாலியஸ்டர் தொழிலில் கால்பதித்தது. அதன்பிறகு முகேஷ் அம்பானி தன்னுடைய கல்வியை நிறைவு செய்யவில்லை. முழுநேரமாக ரிலையன்ஸ் நிறுவனத்தை கவனிக்கத் தொடங்கினார்.

அதன்பின் ரிலையன்ஸ் கமர்ஷியல் கார்ப்பரேஷன் என்ற பெயர் ரிலையன்ஸ் டெக்ஸ்டைல்ஸ் என்ற பெயரில் இயங்கியது. பின்னர் அது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என மாற்றப்பட்டது.

ரிலையன்ஸ் வளர்ந்துகொண்டிருந்த சமயத்தில் ஏற்பட்ட வியாபார தடங்கல்கள், அரசியல் சவால்கள், போட்டியாளர்களின் கவிழ்ப்பு முயற்சிகள் அனைத்தையும் சமாளிக்க தன் தந்தைக்குப் பக்கபலமாக இருந்தார் முகேஷ். உலகின் சிறந்த ஐந்து தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவாரனார். மகனின் உழைப்பில் அசந்துபோய் திருபாய் அம்பானியே, முகேஷின் நீட்டா தலால் உடனான காதல் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தார் என்பது சுவராஸ்யமான தனிக்கதை.

1995-ம் ஆண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகரலாபம் ரூ.1,000 கோடி. இதன் காரணமாக சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனங்களின் பட்டியலில் முதன்முதலில் இடம்பெற்ற இந்தியா நிறுவனம் என்ற பெருமையை பெற்றது ரிலையன்ஸ்.

டெலிகாம், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் என ரிலையன்ஸ் குழுமத்தின் கிளைகள் விரிவடைந்தன. இன்றுவரை இந்தியாவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ரிலையன்ஸ் வசமே உள்ளது.
2002-ம் ஆண்டு திருபாய் அம்பானி தன்னுடைய 69-வது வயதில் பக்கவாதம் காரணமாக காலமானார். ரிலையன்ஸ் நிறுவனம் யார் பெயரிலும் உயில் எழுதப்படாமல் விடப்பட்டதால் சகோதரர்கள் மத்தியில் சொத்து தகராறு உடனடியாகத் தொடங்கியது.

திருபாய்க்குப் பிறகு ரிலையன்ஸ் குழுமத்தை நிர்வகிக்கப் போகிறவர் முகேஷ் அம்பானிதான் என்று அனைவரும் நினைத்திருந்த தருணத்தில், வீட்டுக்குள் இருந்து கலகம் செய்தார் முகேஷின் தம்பி அனில் அம்பானி. ரிலையன்ஸின் கோட்டையில் விரிசல் விழ ஆரம்பித்தது.

சலசலப்புகளுடன் நின்ற மகன்களுக்கிடையே சொத்தை திறம்பட பிரித்துக்கொடுத்தார் தாய் கோகிலா பென். தன் சகோதரருக்காக தன் உரிமைகளைப் பகிர்ந்துகொண்டு பெரிய சரிவு எதுவும் ஏற்படாமல் ரிலையன்ஸை காப்பாற்றினார் முகேஷ்.

90 ஆயிரம் கோடி மதிப்பிலான ரிலையன்ஸ் என்கிற மாபெரும் சாம்ராஜ்ஜியம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐ.பி.சி.எல்., கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகியவை முகேஷ் அம்பானி வசம் ஒப்படைக்கப்பட்டது. ரிலையன்ஸின் கட்டுமான நிறுவனம், நிதி நிறுவனம் ஆகியவை அனில் அம்பானியிடம் ஒப்படைக்கப்பட்டது. திருபாய் அம்பானிக்குப் பிறகு ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகமாக மாறிப்போனார் முகேஷ் அம்பானி.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவில் இணைய சேவை என்பது மிகவும் அரிதானது, விலையுயர்ந்தது. ஒரு ஜிபி அளவிலான இணைய சேவைக்கு கட்டணமாக 200 ரூபாய் வரை வசூலித்துக் கொண்டிருந்தன இணைய சேவை நிறுவனங்கள்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழ் என்ற வார்த்தைக்குக்குள் அடக்கி விட முடியாத நிலை உள்ளது. மாதம் 150 ரூபாய்க்கும் குறைவான செலவில் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் இணைய சேவையும் தரப்படுகிறது. இதன் பின்னால் இருப்பது ஒரு நிறுவனர். இன்னும் தெளிவாகச் சொன்னால் பின்னணியில் இருந்தவர் ஒற்றை மனிதர். முகேஷ் திருபாய் அம்பானி என்ற முழுப்பெயர் கொண்ட முகேஷ் அம்பானி தான் அவர். ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிபர்.

ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்தவுடன் அந்தத்துறையில் புரட்சி நடந்தது என்று கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகள் அல்ல. தொடங்கிய 83 நாட்களில் ஐந்து கோடி சந்தாதாரர்களை பெற்றது ஜியோ. சேவை தொடங்கிய ஓராண்டுக்குள் 12.5 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோ சேவையில் இணைந்தனர். இணைய பயன்பாட்டில் அமெரிக்காவையும் முந்தி முதலிடம் பிடித்தது இந்தியா. அச்சமயத்தில் ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவையில் முன்னணியில் இருந்து வந்தன. இந்த மூன்றாண்டு காலகட்டத்தில் இந்நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி, தொலைத்தொடர்பு சந்தையில் முதலிடம் வகிக்கிறது ஜியோ.

தொலைத்தொடர்பு துறை, கம்யூனிகேஷன்ஸ், ஐ.பி.எல். கிரிக்கெட் அணி, காப்பீடு நிறுவனம், பெட்ரோல் நிலையங்கள், ஊடகங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள் என ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் அம்பானி தொட்டதெல்லாம் ஜெயம்தான்.

இவ்வளவு செல்வங்கள் குவிந்த பின்பும் தனக்கு பிடித்த உணவகம் மும்பை மைசூர் கபே என்று பிடித்த உணவு இட்லி சாம்பார் என்றும் ஒருமுறை குறிப்பிட்டிருக்கிறார் முகேஷ் அம்பானி.

முகேஷ் அம்பானியின் மீதும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் மீதும் எவ்வளவு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் இந்தியத் தொழில்துறையின் சமகாலச் சாதனையாளர்களில் முக்கியமானவர் அவர் என்பதை மறுக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here