எமனுக்கு எமன் | ஓய்வு பெறும் அண்டர்டேக்கர்

438

WWE எனும் மல்யுத்தக் களத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கோலேச்சி வந்த தி அண்டர்டேக்கர் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் லட்சக்கணக்கான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் நினைவலைகளில் மூழ்கியுள்ளனர்.

தி அண்டர்டேக்கர். 90-களில் பிறந்தவர்களை பரவசப்படுத்திய மல்யுத்த கலைஞன். அவரது பெயரைக் கேட்டாலே மல்யுத்த போட்டிகளை ரசிக்கும் அனைத்து தரப்பினரையும் திகில் கலந்த ஆர்வம் தொற்றிக் கொள்ளும்.

அரங்கத்தில் திடீரென விளக்குகள் அனைத்தும் அணைய, மணிச்சத்தம் போன்ற ஒரு திகிலான தீம் மியூசிக் ஒலிக்க, அடுத்த சில நொடிகளில் மீண்டும் விளக்குகள் ஒளிர்ந்ததும் மேடையை நோக்கினால் அன்டர்டேக்கர் சட்டென்று நிற்பார். இதன் மூலம் அண்டர்டேக்கர் வருகையை உணர்ந்து ரசிகர்கள் ஆர்ப்பரிப்பார்கள். அனுமானுஷ்யமான இந்த காட்சி உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டது. WWE-ல் அண்டர்டேக்கருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 90’s கிட்ஸ்கள்தான் அண்டர்டேக்கரின் முக்கிய ரசிகர்கள்.

நுழைவு வாயிலில் இருந்து ரிங்கை நோக்கி அன்டர்டேக்கர் வரும் பாணி த்ரில்லராக இருக்கும். உயிர் குடிக்க வரும் எமனைப் போல் மெல்ல மெல்ல ரிங்கை நோக்கி அவர் நடந்துவரும் காட்சியும், கருவிழிகளை மறைக்கும் ஆக்ரோஷமான பார்வையும் கழுத்தை கிழிப்பது போன்ற மேனரிசமும் போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் கலக்கத்தை தரும்.

அஸ்தி கலசத்தை உதவியாளர் சுமந்து செல்ல, வீழ்ந்தவர்களை சவப்பெட்டியில் ‘டெட்மேன்’ அடைக்கும் காட்சிகளை ரசிகர்கள் எளிதில் மறந்துவிட முடியாது. இடுகாட்டு சித்தனாக காட்டிக் கொண்டாலும் அவ்வப்போது ஸ்போர்ட்ஸ் பைக்கிலும் புல்லட் பைக்கிலும் வருவதும் அன்டர்டேக்கரின் வாடிக்கை.

இடி, மின்னலுடன் வருகை, கையசைத்தால் தீப்பிடிக்கும் அரங்கம், சவப்பெட்டிக்குள் அடிக்கடி சென்று வருவது, இரவு நேரத்தில் இடுகாட்டில் நிற்பது என குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் திகிலூட்டும் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அண்டர் டேக்கர். இவருக்கு இறப்பு இல்லை, 7 உருவங்கள் உண்டு என்ற பல்வேறு வதந்திகள் 90’s கிட்ஸ்களின் மத்தியில் பேசப்பட்டது. இதனால் இவருக்கு டெட்மேன் என்ற பெயரும் ரசிகர்களால் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அண்டர்டேக்கரை வீழ்த்தவே முடியாது என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையும் அப்போது இருந்தது. அவரது மோதலும் விறுவிறுப்பாக இருக்கும்

மார்க் வில்லியம் கால்வே என்ற இயற்பெயருடைய அன்டர்டேக்கர் 1986-ம் ஆண்டு முதல் WCW மல்யுத்தப் போட்டிகளில் பங்கேற்றப் பின் 1990-ம் ஆண்டில் WWE-ல் சேர்ந்ததும் உலகின் கவனத்தை ஈர்த்தார். 90-களின் தொடக்கத்தில் சாட்லைட் சேனல் வருகைக்குப் பின் இந்திய ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்தார்.
இதனிடையே, அவரின் வாழ்கை குறித்த ஆவணப்படம் ஒன்று ‘அண்டர் டேக்கர் தி லாஸ்ட் ரெய்ட்’ என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதன் இறுதிப்பகுதியில் தன் இனி ரெஸ்ட்லராக பயணத்தை தொடரப் போவதில்லை என்றும் தான் சாதிக்காதது எதுவும் இல்லை என்ற மனநிறைவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சி முடிந்ததும் ட்விட்டரில் Thank You Taker என WWE பதிவிட்டது. அதையடுத்து ரசிகர்கள் உணர்ச்சிப்பெருக்கில் ட்விட்டரில் தங்கள் கருத்துக்களை உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.

தனது ஒய்வு குறித்துப் பேசிய அன்டர்டேக்கர் ஒரு பாதையின் இறுதி வரை செல்லும் முன்னர் அது எவ்வளவு அழகான பயணம் என்பதை உங்களால் உணரவே முடியாது. எனக்கு பிடித்த வகையில் தான் நான் செயலாற்றினேன். அப்படியே விலகவும் போகிறேன். எனக்கு இன்னொரு வாழ்க்கை உள்ளது. அதை நான் அனுபவிக்க வேண்டும். என் கடும் உழைப்பினால் கிடைத்த பலனை அனுபவிக்க வேண்டும் என உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

ஆம் உண்மைதான். கண்டங்களை கடந்து மக்களை மகிழ்வித்த கலைஞன் ஒய்வு எடுக்க வேண்டும். வாழ்த்துக்கள் அன்டர்டேக்கர் என ட்விட்டரில் நினைவலைகள் வலைபாய்ந்துக் கொண்டிருக்கிறது.

WWW போட்டியின் ஒரு பகுதியாக ஆண்டுக்கு ஒருமுறை ‘ரெஸில்மேனியா’ என்ற ஒரு பிரமாண்டமான ஈவென்ட் நடத்தப்படுகிறது. உலகம் முழுதும் இருந்து லட்சக்கணக்கான பேர் கூடி கண்டுகளிக்கும் மாபெரும் திருவிழா அது. அடுத்த வருட ஷோவுக்கு இந்த வருடமே டிக்கெட் தீர்ந்துவிடும். அந்தளவிற்கு மிகப்பிரபலம். அந்த ரெஸில்மேனியா போட்டியில் 25 முறை வென்று, அதிகமுறை வெற்றிப் பெற்றவர் என்ற ரிக்கார்டு அண்டர்டேக்கர் வசமிருந்தது. இன்னரும் சொல்லப்போனால் ரெஸில்மேனியா என்றாலே அது அண்டர்டேக்கருக்காக நடத்தப்படும் ஈவென்ட்.

எப்போதும் அன்டர்டேக்கர் என்றாலே மர்மம் தான். அவரின் ஓய்வு குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே பேசப்பட்டு வந்தன. ஒவ்வொரு ரெஸில்மேனியா போட்டிக்குப் பின்பும் அவர் ஓய்வு பெறுவார் எனக் கூறப்படும். ஆனால் இடையே சில போட்டிகளிலும் ஆண்டு முடிவில் ரெஸில்மேனியா போட்டியிலும் ஆடுவார் அன்டர்டேக்கர்.

அப்படித்தான் 2017-ம் ஆண்டு ரெஸில்மேனியா போட்டியில் தனது அடையாளங்களான கோர்ட்டையும் தொப்பியையையும் வீசிவிட்டு விடைபெற்றார். ஆனால் அடுத்த சில மாதங்களுக்குப் பின்பு மீண்டும் வந்தார் அன்டர்டேக்கர். ஆனால் 2017-ம் ஆண்டுக்குப் பின்பு அண்டர்டேக்கர் WWE போட்டிகளில் பங்கேற்பதை குறைத்துக் கொண்டார் என்றே கூற வேண்டும். அதற்கு வயோதிகமும் ஒரு காரணம் என்ற பேச்சும் இருக்கிறது. இந்நிலையில் இப்போது திட்டவட்டமாக தனது ஓய்வை அறிவித்துள்ளார் அன்டர்டேக்கர்.

6 அடி 10 அங்குலம் உயரம் கொண்ட அன்டர்டேக்கர் தனது கல்லூரிப் பருவத்தில் கூடைப்பந்து வீரராக இருந்தார். இவர் 3 முறை ஹெவிவெயிட் சாம்பியன், 6 முறை டாக்டீம் சாம்பியன் மற்றும் ராயல் ரம்புள் போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளார்.

சுமார் 35 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக விளங்கிய அன்டர்டேக்கர் ரெஸில்மேனியா நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்தார். ப்ராக் லெஸ்னர் மற்றும் ரோமன் ரைம்ஸ் ஆகிய இருவர் மட்டுமே கடும் போராட்டத்திற்குப் பின், வயது ஐம்பதைக் கடந்த அன்டர்டேக்கரை சமீபத்தில் வீழ்த்த முடிந்தது.
போட்டிக்குப் பிறகு கதறி அழுததாக ரோமன் ரைம்ஸ் குறிப்பிட்டது சாகப் போட்டியாளர்களிடம் அவருக்கு இருந்த மரியாதையை உணர்த்தியது. சில மாதங்களுக்கு முன் ஏ.ஜே. ஸ்டைல்ஸை வீழ்த்திய போட்டியே கடைசிப் போட்டியாக அன்டர்டேக்கருக்கு அமைந்து விட்டது. கடைசிப் போட்டியில் அவரிடம் வீழ்ந்தது மிகப்பெரிய கவுரவம் என ஸ்டைல்ஸ் கூறியுள்ளார்.

ரிங்கில் தான் அவர் பார்ப்பதற்கு டெரர். ஆனால் நிஜத்தில் அவர் மிகவும் உதவும் குணம் கொண்டவர். அண்டமையில் கொரோனா பாதிப்பு காரணமாக உணவுக்காக கஷ்டப்பட்டவர்களுக்காக நிதி சேகரித்து அவர்களுக்கு உதவியுள்ளார்.

ஒரு நெகட்டிவ் கேரக்டர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்க முடியும் என்பதை தனது கதை சொல்லும் நடையிலான உத்தி மூலம் உலகிற்கு உணர்த்தியவர். எனினும் WWE சேர்மன் வின்ஸ் மக்மஹோனுக்கு பிரச்சினை என்றால் தான் மீண்டும் வர வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் தி அன்டர்டேக்கர் எனும் இந்த ‘டெட்மேன்’.

இதையும் படிக்க: முதலீடுகளை ஈர்க்கும் முகேஷ் அம்பானி சாதித்தது எப்படி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here