மாஞ்சோலை உலா.. இதுவரை பயணித்திராத பாதைகளின் வழியாக..

மாஞ்சோலை. பள்ளிப் பருவம் முதல் நான் அறிந்த பெயர். காரணம், எங்கள் மாவட்டத்திற்கு உள்ளேயே ஒரு பகுதி அது. பழைய திருநெல்வேலி மாவட்டம்; கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நாங்கள் தென்காசி மாவட்டம்.

சங்கரன்கோவிலைச் சேர்ந்த பல தொழிலாளர்கள், மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்த்தனர். அவர்களது பிள்ளைகள், சங்கரன்கோவில் அரசுப் பள்ளியில் படித்தார்கள். தேயிலைத் தோட்ட வாழ்க்கை பற்றி அவர்கள் சொல்வதைக் கேட்டு இருக்கின்றேன். எனவே, மாஞ்சோலைக்குச் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற வேட்கை, அப்போதே எனக்குள் இருந்ததில் வியப்பு இல்லை.

ஆனால், அதற்கான வாய்ப்பு இதுவரை அமையவில்லை. எனவே, நானாக ஏற்படுத்திக் கொண்டு, மாஞ்சோலை பயணத்தையும் முடித்து விடுவோம் எனத் தீர்மானித்தேன்.


மாஞ்சோலை.. இந்தப் பெயர், தமிழகம் அறிந்த ஒன்று. ஆனால், கொடைக்கானல் ஊட்டி போல இது சுற்றுலா மையம் அல்ல. காரணம், இன்று வரையிலும், இது தனியார் நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளது. தேயிலைத் தோட்டங்களுக்காகப் புகழ்பெற்றது. அதற்காக மட்டும் அல்ல; அந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக திருநெல்வேலியில் நடந்த போராட்டத்தைக் கட்டுப்படுத்தக் காவல்துறை மேற்கொண்ட தாக்குதலில் இருந்து தப்பிக்க தாமிரபரணி ஆற்றில் குதித்த 17 பேர் உயிர் இழந்த நிகழ்வுகள் வேதனைக்கு உரியவை; தமிழக அரசியலில் மாறாடு வடுக்கள்.

எப்போதாவது மாஞ்சோலை போக வேண்டும் என்ற எண்ணம் வரும். ஆனால் பேருந்து வசதிகள் கிடையாது. இன்றைக்கும் கூட அப்படித்தான். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பேருந்துகள்தான் சென்று வருகின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை, சொந்த வேலையாக சங்கரன்கோவில் சென்று இருந்தேன். அதை முடித்துக்கொண்டு, மாஞ்சோலைக்குச் சென்று வருவது எனத் திட்டம் வகுத்தேன்.


நண்பர் எஸ்.ஆர்.எம். வேதநாயகம், சுரண்டையில் இருப்பதாக முகநூலில் பதிவு எழுதி இருந்தார். பயணங்களில் ஆர்வம் மிக்கவர். என்னோடு, மலேசியா மற்றம் ஐரோப்பாவின் 9 நாடுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்றவர். எனவே, அவரைத் தொடர்பு கொண்டேன். மாஞ்சோலை பயணத்திட்டத்தைப் பற்றிக் கூறினேன்.

‘அண்ணே, நான் கார் ஏற்பாடு செய்கின்றேன்; காரில் போவோம்’ என்றார். அதற்கான ஏற்பாடுகளைச் செய்தோம். அம்பை நண்பர் முத்துசாமியிடம் கேட்டேன்.

‘தனியார் கார்களுக்கு இன்னமும் தடை நீடிக்கின்றது; அம்பாசமுத்திரத்தில் இருந்து பேருந்தில் சென்று வரலாம்’ என்றார் அம்பை முத்துசாமி.

உடனே வேதநாயகத்திடம், காரில் போக முடியாது என்கிறார்கள்; காலையில் ஓடிக்கொண்டு இருந்த பேருந்தை இப்போது நிறுத்தி வைத்து இருக்கின்றார்கள்; 12 மணிக்கு அம்பையில் இருந்து புறப்படுகின்ற பேருந்தில் மேலே சென்று சேர 3 மணி ஆகும்; அரை மணி நேரம் கழித்து, அதே பேருந்தில் திரும்பி வர வேண்டும்; அல்லது, 3 மணி நேரம் கழித்து மற்றொரு பேருந்தில் திரும்பி வரலாம்; ஆனால், சாலை குண்டும் குழியுமாக இருக்கின்றது என்று முத்துசாமி சொல்கின்றார்; எனவே, நாம் வேறு ஒரு நாளில் மாஞ்சோலை சென்று வருவோம்’ என்றேன்.

உடனே பதறிய வேதநாயகம், அண்ணே, நான் சுரண்டைக்கு வந்திருந்தேன். இரண்டு நாள்களில் சென்னை திரும்பி விட்டேன். மீண்டும் நாளை மாலை புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு வர முன்பதிவு செய்து இருந்தேன்.

ஆனால், நீங்கள் மாஞ்சோலைக்கு அழைத்தீர்கள். உங்களோடு சுற்றுகின்ற வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று கருதி, இன்றே புறப்பட்டு வந்து கொண்டு இருக்கின்றேன். எனவே, நாம் கண்டிப்பாகப் போயாக வேண்டும் என்றார். எனவே, பயணம் தவிர்க்க முடியாதது ஆகி விட்டது.

சனிக்கிழமை காலையில், சங்கரன்கோவிலில் இருந்து புறப்பட்டேன். அக்கா மகன் அரவிந்த் உடன் வந்தார். சுரண்டை வேலன் உணவகத்தில் காலை உணவை முடித்துக்கொண்டு, ஆலங்குளம் வழியாக அம்பை சென்று சேர்ந்தோம். முப்பது ஆண்டுக்கால நண்பர் முத்துசாமி அவர்களுடைய மகன், சுந்தர்ராஜன் வரவேற்றார். அவர் ஒரு கணினிப் பொறியாளர். கொரோனா முடக்கத்தின் காரணமாக, அம்பையில் வீட்டில் இருந்து பணி புரிகின்றார்.


‘பகல் 12.30 மணிக்குத்தான் மாஞ்சோலை பேருந்து புறப்படும்’ என்றார். 12.30 மணிக்குப் பேருந்து வந்தது. உடனே நிரம்பி விட்டது. எங்களைப் போலவே நீண்ட நேரமாகக் காத்திருந்த மக்கள், மூட்டை முடிச்சுகளுடன் ஏறினார்கள். பேருந்தின் நடைவழி முழுமையும், அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட பல பொருள்களை மூடையாக அடுக்கி வைத்து விட்டனர். அவற்றின் மீது ஏறித்தான் நடக்க வேண்டும். தயக்கமாக இருந்தது. ஆனால், அவர்கள் யாரும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் ஏறி நடந்ததால், நாங்களும் ஏறி நடந்தோம். பேருந்து உடனே புறப்பட்டு விட்டது.

ஆனால், வழக்கம்போல, கல்லிடைக்குறிச்சியில் ஓட்டுநர், நடத்துநர் உணவுக்காக நிறுத்தினார்கள். அதன்பிறகு, மணிமுத்தாறு சோதனைச் சாவடியைக் கடந்து, பேருந்து மேலே ஏறத் தொடங்கியது. அண்மையில் பெய்த மழையில், மணிமுத்தாறு அணை நிரம்பி வழிகின்றது.

கடல் போலத் தண்ணீரைப் பார்த்த மகிழ்ச்சியில் மனம் நிறைந்தது. இதே பகுதியில் பாபநாசம், அகத்தியர் அருவி எல்லாம் அருகில்தான் இருக்கின்றன. அம்பையில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனவே, பள்ளி மாணவனாக இருந்த காலம் முதல் இங்கே வந்து போகின்றேன்.

இதே மலையின் மற்றொரு இடத்தில், காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு ஒருமுறை வந்து சென்றது நினைவுக்கு வந்தது. ஓடத்தில் அணையைக் கடந்து, அந்தப்புறம் சென்று, பாணதீர்த்தம் அருவியில் குளித்து இருக்கின்றேன்.


‘மாஞ்சோலையை உள்ளடக்கிய தேயிலைத் தோட்டங்கள் எல்லாம், தமிழக அரசின் வனத்துறை பொறுப்பில் இல்லை; களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உள்ளே இருக்கின்றது’ என்றார்கள். களக்காடு அருகே மலையில் நம்பி கோவிலுக்குச் சென்று வந்ததும் நினைவுக்கு வந்தது.

இது 21 ஆம் நூற்றாண்டு. எந்த ஒரு இடத்திற்குச் செல்வதாக இருந்தாலும், அது தொடர்பாக, யூ ட்யூபில் ஏதேனும் காணொளிகள் பார்க்கக் கிடைக்கின்றதா? எனத் துழாவினேன். ஐந்தாறு காணொளிகள் கிடைத்தன. பார்த்தேன்.

1999ஆம் ஆண்டு நடைபெற்ற திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுத் தாக்குதல் காணொளிகளும் காணக் கிடைத்தன. அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது.

காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்திற்கு எடுத்துக்காட்டு இந்தக் காணொளி. கைக்குழந்தைகளுடன் ஆற்றுக்கு உள்ளே குதித்த பெண்களையும் விடாமல் விரட்டித் தாக்குகின்றார்கள். அப்படி, நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் ஆற்றுக்கு உள்ளே தண்ணீரில் மூழ்கித் தத்தளிக்கின்ற காட்சியைப் பார்த்து அதிர்ச்சியாக இருக்கின்றது. அவர்களுள் 17 பேர் உயிர் இழந்தார்கள். மனம் வலித்தது.

பல இளைஞர்கள் இப்பொழுது பயணங்களில் ஆர்வம் கொண்டு சுற்றி வருகின்றார்கள். தமிழில் நிறைய காணொளிகளும் பதிவு செய்கின்றார்கள். அப்படி, மாஞ்சோலைக்குப் பயணித்த இளைஞர்கள் பதிவு செய்த காணொளிகள் சிலவற்றைப் பார்த்தேன். சில நிமிடங்கள் கூடத் தொடர்ச்சியாகப் பார்க்கவே முடியவில்லை. கேமராவைக் கையில் வைத்து ஆட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்.

மூன்று காணொளிகளில் வெறுமனே காட்சியை மட்டும் காட்டிக் கொண்டே போகின்றார்கள். யாரோ ஒரு தம்பி பேசிக் கொண்டே வருகின்றார். பாதி தமிழ், பாதி ஆங்கிலம் பேசுகின்றார். கடைசி வரை அவரது முகத்தைக் காண்பிக்கவே இல்லை. இதை, பயணக் காணொளியாகக் கருத முடியாது. உயிரோட்டமே இல்லை.

மேலும், இவர்களுடைய பயணங்களில் உள்ளூர் மக்கள் ஒருவரைக் கூடச் சந்தித்துப் பேசுவது இல்லை.எந்த இடத்திற்குச் சென்றாலும் அங்கே வாழ்கின்ற மக்களுடன் பேசிப் பேசி, அவர்களிடம் கேள்விகள் கேட்டுப் பதிவு செய்ய வேண்டும். அதுதான் பயணம்.

நாங்கள் பயணித்த பேருந்து, மணிமுத்தாறு கடந்து மலையின் மேலே ஏறத் தொடங்கியபோதுதான், மாஞ்சோலை இன்றுவரையிலும் ஏன் தனிமைப்பட்டுக் கிடக்கின்றது என்கின்ற உண்மை புரிந்தது.

மாஞ்சோலை செல்கின்ற பாதை, ஒரு வழிச் சாலை என்றுகூடச் சொல்ல முடியாது; குண்டு, குழிகளின் மீதுதான் பயணம். அரை வழிதான் இருக்கின்றது. குத்தகைக் காலம் முடிய இருப்பதால், அந்த நிறுவனம் சாலையைப் புதுப்பிக்கவில்லை.

அரசுப் பேருந்துகள் ஊர்திகளைத் தவிர, வேறு தனியார் யாரும் இந்தப் பாதையைப் பயன்படுத்துவது இல்லை. அதற்குப் பெரும் பணம் செலவழிக்க அவர்கள் விரும்பவில்லை. எனவே, இருப்பதை வைத்து ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். கல்லிடைக்குறிச்சியில் இருந்து மாஞ்சோலை கடந்து, மேலும் 18 கிலோ மீட்டர்கள் பயணித்து, ஊத்து என்ற இடம் வரைக்கும் சென்றோம். மொத்தம் 45 கிலோமீட்டர்கள்தான். ஆனால், இரண்டரை மணி நேரம் ஆயிற்று. அப்படியும் இப்படியும் ஆடி, குலுக்கி எடுத்து விட்டார்கள்.

வயிறு முட்டச் சாப்பிட்டு இருந்தால், வாந்தி எடுப்பது உறுதி. எனவே, இந்தச் சாலையில் பயணிப்பவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அது மட்டும் அல்ல; அரை வழிச் சாலைதான் என்பதால், இருபுறங்களிலும் உள்ள காட்டுச் செடிகள், சாலையை ஒட்டி நெருக்கமாக இருக்கின்றன. இடைவெளி இல்லை. ஆனால், தனியார் பொறுப்பில் உள்ள சாலை என்பதால், வெளியாட்கள் யாரும் உள்ளே நுழைந்து, மரங்களை வெட்டிக் கொண்டு போக முடியவில்லை. எனவே, காடுகள் பாதுகாப்பாக இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருக்கின்றது.

ஆனால், இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே இந்த மலையில் ஏறி, பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி, பல நூறு புலிகளைக் கொன்று, இங்கே தேயிலையைப் பயரிட்ட ஆங்கிலேயர்களை நினைத்துக் கோபம் வந்தது.

இந்த மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்தான், தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருகின்றது. மேற்கு மலைத் தொடரில், அடர்ந்த காடுகளை எல்லாம் ஆங்கிலேயர்கள் அழித்தது, தேயிலைத் தோட்டங்களை அமைத்தார்கள். எனவே, மழைப்பொழிவு குறைந்தது. அந்த மலையில் உலவிக்கொண்டு இருந்து நூற்றுக்கணக்கான புலிகளை, காட்டு யானைகளை தொலைவில் இருந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்கள்.

அப்படிச் செத்த புலியின் உடல் மீது காலையும், துப்பாக்கியையும் வைத்துப் படம் பிடித்துத் தங்கள் வீடுகளில் பெருமையாக மாட்டிக் கொண்டார்கள்.

ஒரு புள்ளி விவரக் கணக்கின்படி, 1900 ஆம் ஆண்டில், இந்தியாவில் ஒரு லட்சம் புலிகள் இருந்தன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, 1500 தான். அதன்பிறகு, புலிகளைக் காப்பதற்கு அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக, இப்போது அந்த எண்ணிக்கை 3500 ஆகி இருக்கின்றது. மலைகளையும், காடுகளையும் பாதுகாப்பதற்காக இயற்கை வைத்த காவலன்தான் புலிகள்.

அடர்த்தியான காடுகளுக்கு உள்ளேதான் உலவும். எனவே, புலிகளின் எண்ணிக்கை பெருகினால்தான், காடுகளைப் பாதுகாக்க முடியும். இதே மேற்கு மலைத் தொடரில், குற்றாலம், செண்பகா தேவி, தேனருவி, செங்கோட்டை கடந்து புளியறைக் அருகில் கும்பா உருட்டி அருவி, குண்டாறு அணைகளில் குளித்து இருக்கின்றேன்.

இப்போது கொரோனா முடக்கத்தால், அனைத்து அருவிகளிலும் கடந்த எட்டு மாதங்களாகத் தடை விதித்து விட்டார்கள். ஆனால், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே, செண்பகாதேவி, தேனருவிப் பாதையை அடைத்துவிட்டார்கள். எனவே, அந்தப் பகுதிகளில் இப்போது காடுகள் அடர்த்தியாக வளர்ந்து இருப்பதாகச் சொன்னார்கள்.

குற்றாலம் பரணி லாட்ஜ் உரிமையாளர் அண்ணாச்சி ராஜாராம் பாண்டியன் அவர்களை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தபோது, அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. தம்பி, எனக்கு 75 வயது ஆகின்றது. என் வாழ்நாளில் ஒரே ஒருமுறை, அண்மையில்தான் குற்றால மலை மேலே ஒரு புலி வந்து நிற்பதைப் பார்த்தேன். ஊர்க்காரர்கள் சொன்னதால், நானும் வேகமாகச் சென்றேன். ஒரு பாறையில் சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தது, பிறகு உள்ளே போய்விட்டது என்றார்.

புலி அருவி என்ற பெயரில் ஒரு அருவியும் உண்டு. ஆனால், இப்போது அங்கே புலிகள் கிடையாது.

3.30 மணி அளவில், ஊத்து சென்று சேர்ந்தோம். அங்கே, மைனா தேநீர்க் கடையில், நாங்கள் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் கொடுத்து, எங்களுக்காகக் கோழிக்கறி சமைத்து வைத்து இருந்தார்கள்.
நல்ல பசி. அவ்வளவு ருசி.

கொல்லிமலை பயணத்தின்போது, அங்கே செம்மேடு வசந்தமாளிகை உணவகத்தில் நாட்டுக்கோழி சாப்பிட்டது நினைவுக்கு வந்தது. அது ஒரு சுவை என்றால், இது வேறு ஒரு சுவை.

தமிழ்நாட்டில் ஊட்டி, கொடைக்கானல் இரண்டுமே, கடல் மட்டத்தில் இருந்து 7000 அடிகள் உயரத்தில் இருக்கின்றன. மேகமலை 1500 அடி, கொல்லிமலை 3500 அடி. அதுபோல இந்த மாஞ்சோலை 3500 அடிகள் உயரத்தில் இருக்கின்றது.

ஊத்து வருகின்ற வழியில் காக்காச்சி என்ற இடத்தில், சமதளமான ஒரு பெரிய புல்வெளியைப் பார்த்தேன். அது, ஆங்கிலத் துரைகள் கோல்ஃப் ஆடுவதற்காக அமைத்த களம் என்பது தெரியவந்தது. இவ்வளவு உயரத்தில் இவ்வளவு பெரிய வெட்ட வெளி என்றால், அவர்கள் விளையாடுவதற்காக, இங்கே ஓங்கி வளர்ந்து இருந்த எத்தனை ஆயிரம் மரங்களை வெட்டித் தள்ளி இருப்பார்கள் என்பதை நினைத்து அதிர்ச்சி அடைந்தேன்.


ஆனால், ஒரு ஆறுதல், கொடைக்கானல், ஊட்டி போல, இங்கே ஒரு சதுர அடி நிலத்தைக் கூட யாரும் விலைக்கு வாங்க முடியாது; காரணம், இப்போது இது புலிகள் காப்பகம் என்ற செய்தி, மனதுக்கு ஆறுதல் அளித்தது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில், சென்னையில் படித்துக்கொண்டு இருந்த சிங்கம்பட்டி ஜமீன்தார், ஒரு கொலை வழக்கில் சிக்கினார்.

அந்த வழக்குக்கு ரூபாய் மூன்று இலட்சம் வரையிலும் செலவு ஆயிற்று. எனவே, மாஞ்சோலைப் பகுதியில் 8000 ஏக்கர் நிலத்தை, பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனிக்கு, 99 ஆண்டுக் குத்தகைக்கு எழுதிக் கொடுத்தார். இரயத்துவாரி நிலங்கள் அனைத்தும் அரசு உடைமை ஆக்கப்பட்டபிறகும், தமிழ்நாட்டு அரசுடன் அந்த உடன்படிக்கையைப் புதுப்பித்துக்கொண்டு, அந்த நிறுவனம் தொடர்ந்து தேயிலை விளைவித்து வருகின்றது.

அந்த உடன்படிக்கை, வருகின்ற 2028 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வருகின்றது. அதன்பிறகு இந்தத் தேயிலைத் தோட்டங்கள், தமிழ்நாடு அரசின் டேன் டீ பொறுப்பில் வந்து விடும்.

ஊத்துக்கு மேலே குதிரைவெட்டி தேயிலைத் தோட்டம் உள்ளது. பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி குறித்த தகவல்களை, இணையத்தில் துழாவினேன்.

இது, 1863 ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தில், வாலேஸ் சகோதரர்களால் தொடங்கப்பட்டது. அவர்கள் 1840 ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் வணிகம் செய்து வந்தார்கள். அதன்பிறகுதான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.

இந்தியாவில் பட்டியல் இடப்பட்ட இரண்டாவது நிறுவனம் இது. முதலில் பர்மாவில் தேயிலைத் தோட்டங்களை அமைத்தார்கள். பர்மா, தாய்லாந்து நாடுகளில் தேக்கு மரங்களை வெட்டி விற்று வந்தார்கள். அதன்பிறகு தென் இந்தியாவுக்கு வந்தார்கள்.

1880 களில், இங்கிலாந்து பங்குச் சந்தையில், இது முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக இருந்தது. இந்தியா விடுதலை பெற்ற பிறகு, விசாஞ்சி குடும்பத்தினர் இந்த நிறுவனத்தை விலைக்கு வாங்கி விட்டார்கள். அதன்பிறகு, பிசிஎல் ஸ்பிரிங்ஸ் என்ற நிறுவனத்திற்குக் கைமாறி, கடைசியாக, வாடியா சகோதரர்கள் வாங்கி விட்டார்கள். அது ஒரு பார்சி நிறுவனம்.

மருத்துவம், கல்வி என்பதெல்லாம் இந்த மலையில் வசிக்கின்ற தொழிலாளர்களுக்குக் கனவுதான். எனவே, மூன்று தலைமுறைகளாக இங்கே வேலைபார்த்து வருகின்ற தொழிலாளர்களின் பிள்ளைகள், இப்போது கீழே உள்ள கல்லூரிகளுக்கு வந்து படித்துப் பட்டம் பெற்று, சென்னை, பெங்களூருக்கு வந்து வேலை பார்க்கின்றார்கள். அவர்கள் மீண்டும் மாஞ்சோலைக்கு வர மாட்டார்கள். எனவே, இப்போது மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளில், தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

அத்துடன், தேயிலை பறிப்பதற்கும் புதிய கருவிகள் அறிமுகம் ஆகி விட்டன. எனவே, தொழிலாளர்களின் தேவையும் குறைந்து வருகின்றது.

வேதநாயகத்தின் நண்பர் கடையநல்லூர் கம்பனேரி ஜெகவீரபாண்டியன், இந்தப் பயணத்தில் எங்களோடு சேர்ந்து கொண்டார்.

மணிமுத்தாறு கடந்து மாஞ்சோலைக்கு வருகின்ற வழியில் இடையில் வனப்பேச்சி அம்மன் கோவிலைப் பார்த்தோம். அங்கே இரண்டு முறை வந்து இசைக் கச்சேரி நடத்தி இருப்பதாகச் சொன்னார். எந்தவிதமான இடையூறுகளும் இல்லை என்பதால், இங்கே பாடும்போது நாம் எழுப்புகின்ற இசை, மிகத் துல்லியமாகக் கேட்கும். அப்படிப் பாடுவது ஒரு தனி இன்பம் என்றார்.

எங்கள் பயணத்திற்கு உதவியாக, வேதநாயகம் முன்கூட்டியே தீபா சாகர் என்ற தம்பியை வரவழைத்து இருந்தார். அவர், மாஞ்சோலையில் பிறந்து வளர்ந்தவர். இப்போது ஓட்டுநராக இருக்கின்றார். அவருடைய நண்பர் மணியும் உடன் வந்தார். பி.காம் முடித்துவிட்டு, சட்டம் படிக்க விண்ணப்பித்து இருக்கின்றார்.

அம்பாசமுத்திரம் மின்சார வாரியத்தில் பணிபுரிகின்ற நண்பர் கிருஷ்ணன், எங்களோடு சேர்ந்து கொண்டார். அம்பையில் இருந்தாலும் கூட, மாஞ்சோலைக்கு வருவது இதுவே முதன்முறை என்றார். இரண்டரை மணி நேரப் பயணம் என்பதால், நண்பர் முத்துசாமி, பொரித்த கோழித்துண்டுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் வாங்கித் தந்தார். நண்பகல் வேளை பசி ஆற்றுவதற்கு உதவியாக இருந்தது.

1981-84 பசும்பொன் தேவர் கல்லூரியில், பி.காம் பட்ட வகுப்பில் என்னுடன் படித்த டொமினிக், அவரது தங்கை கரோலின், மாஞ்சோலையில் பிறந்து வளர்ந்தவர்கள். அண்மையில், கொரோனா முடக்கத்தின்போது, முகநூல், வாட்ஸ் அப் வழியாகத் தொடர்புகளைப் புதுப்பித்துக் கொண்டோம்.

அவர்களிடம் மாஞ்சோலை பற்றிக் கேட்டேன்.

டொமினிக் சொன்னார்: ‘’என் அப்பா மதுரைக்காரர். 1955 ஆம் ஆண்டு, மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பள்ளியில் ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்ததால், அங்கே சென்றார். 1961 இல் திருமணம். நானும், என் இரண்டு தங்கைகளும் அங்கேதான் பிறந்தோம்.

தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில்தான் வீடு. ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள்தான். பலத்த காற்று வீசும். எனவே, கூரை பறந்து போகாமல் இருக்க, மேலே மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து இருப்பார்கள். மழைக்காலங்களில், இடைவிடாமல் மழை பொழியும். ஐந்தாம் வகுப்பு வரை நாங்கள் தோட்டப் பள்ளியில்தான் படித்தோம்.

அதுவரையிலும், தொழிலாளர் குடியிருப்புகளுக்கு மின்சாரம் கிடையாது. எனவே அதன்பிறகு, எங்களை அப்பா கீழே விடுதிகளில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்து விட்டார்.

மாஞ்சோலையில் கோவில், சர்ச், மசூதி எல்லாம் இருக்கின்றது. திருவிழாக்கள் நடக்கும். பொதுத் திடலில் திரை கட்டி, சினிமா போடுவார்கள். நாள்தோறும் நள்ளிரவு 2 மணிக்கு, திருநெல்வேலியில் இருந்து மாஞ்சோலைக்கு ஒரு பேருந்து புறப்படும்.

அது, காலை ஏழு மணிக்கு மாஞ்சோலை வந்து சேரும். அதன்பிறகு, கல்லிடைக்குறிச்சிக்கு வரும். மீண்டும் பிற்பகலில் மாஞ்சோலைக்கு வரும். அங்கிருந்து புறப்பட்டு, திருநெல்வேலி வந்துவிடும். அந்த ஒரு பேருந்துதான் ஓடிக்கொண்டு இருந்தது.

திருநெல்வேலி நடேசன் நிறுவனம்தான், மாஞ்சோலை தேயிலைத் தோட்டச் சரக்குகளைக் கையாண்டு வந்தனர். எனவே, அவர்களுடைய சரக்கு ஊர்தி ஒன்று நாள்தோறும் வந்து போகும். அதிலும் ஆட்களை ஏற்றிக்கொண்டு வருவார்கள்.

இப்போது மாஞ்சோலையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது என்றார்.

கரோலின் சொன்னார்: நான் திருநெல்வேலியில்தான் ஒரு கல்லூரியில் பட்ட வகுப்பில் சேர்ந்தேன். ஒரு விடுமுறை அறிவித்தார்கள்.

அப்போது விடுதிப் பொறுப்பாளர், என்னைக் கொண்டு வந்து, பேருந்து நிலையத்தில் ஒரு கடைக்காரரின் பொறுப்பில் ஒப்படைத்து, ‘‘இரவு இரண்டு மணிக்கு மாஞ்சோலைப் பேருந்தில் இவளை ஏற்றி அனுப்பி விடுங்கள்’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

நான் அந்தப் பேருந்தில் ஏறி மாஞ்சோலைக்குச் சென்றேன். அப்பாவுக்குக் கடும் கோபம் வந்து விட்டது. நான் கல்லூரி விடுதியில்தானே உன்னைச் சேர்த்து இருந்தேன்; அந்த ஆசிரியை எப்படி உன்னை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து, ஒரு கடைக்காரரிடம் விட்டுவிட்டுப் போனார்? என்று கேட்டவர், கல்லூரிக்கு வந்து, முதல்வருடன் சண்டை போட்டு, டி.சி. வாங்கி விட்டார்.

அப்போது அண்ணன் டொமினிக், தேவர் கல்லூரியில் படித்ததால், என்னையும் அங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டார் என்றார்.

இந்தப் பயணத்தில் எங்களுடன் வந்திருந்த அம்பை நண்பர் கிருஷ்ணன், மின்சார வாரியத்தில் பணிபுரிகின்றார். மலையை ஒட்டிய புறம்போக்கு நிலங்களில் விவசாயம் செய்கின்றவர்கள், மின்சார வேலி அமைத்து, யானைகளைக் கொன்று வருவது குறித்துச் சொன்னார். கடந்த வாரம் கூட ஒரு கர்ப்பிணி யானை சிக்கி உயிர் இழந்தது என்று சொன்னபோது, அதிர்ச்சியாக இருந்தது. வேலியில் 12 வாட் மின்சாரம் இருந்தால் போதும்; அதை யானை தொட்டால் மெலிதான அதிர்ச்சி ஏற்படும். அதன்பிறகு விலகிச் சென்று விடும்.

ஆனால், இவர்கள் திருட்டுத்தனமாக இணைப்பு கொடுப்பதால், அதிக அழுத்த மின்சாரம் பாய்கின்றது. அதைத் தொடுகின்ற யானைகள் இறந்து விடுகின்றன என்றார்.

மாஞ்சோலைப் பயணப் படங்களை முகநூல் தளத்தில் பகிர்ந்து இருந்தேன். அதன் பின்னூட்டத்தில், ஆராய்ச்சிபட்டி தம்பி அல்லிதுரை, தான் மாஞ்சோலைப் பயணம் மேற்கொண்டபோது எடுத்த படங்களைப் பதிவு செய்து இருந்தார். அவரை அழைத்துப் பேசினேன். அவர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையில் பணிபுரிகின்றார்.

மாஞ்சோலை பற்றிப் பல தகவல்களைத் தந்தார். மாஞ்சோலைக்கு மேலே கோதையாறு அணைக்கட்டு உள்ளது. அங்கே நீர்மின் நிலையம் உள்ளது. அதற்கான காவல் பணியில், மூன்று இடங்களில் 90 நாள்கள் இருந்தேன். அங்கிருந்து கீழ் கோதையாறு அணைக்கு, ஒரு இழுவைத் தொடரித் தடம் உள்ளது. மின்வாரியப் பணியாளர்கள் மட்டும்தான் அதில் பயணிக்க முடியும். பாதுகாப்புப் பணியின்போது நானும் பயணித்து இருக்கின்றேன் என்றார்.

அந்தப் படங்களையும் அனுப்பி இருந்தார். அங்கே அப்படி ஒரு தொடரித் தடம் இருப்பது எனக்கு இப்போதுதான் தெரிய வந்தது.

90 நாள்கள் இருந்தாலும் கூட ஒரு புலியைக் கூடப் பார்த்தது இல்லை; ஓரிரு கரடிகள், காட்டு மாடுகள், மிளாக்கூட்டத்தைப் பார்த்து இருக்கின்றேன். இரவு நேரங்களில் செந்நாய்கள் ஊளையிடும். அடர்ந்த காட்டுப் பகுதி என்பதால், இரவு நேரங்களில் கும்மிருட்டாக இருக்கும். காரையாரில் இருந்து சேர்வலாறு வரையிலும், சுமார் ஆறு கிலோ மீட்டர் நீளத்திற்குப் பாறைகளைக் குடைந்து, குகை அமைத்து, அதன் வழியாகத் தண்ணீர் கொண்டு செல்கின்றார்கள் என்றார்.

அதேபோலத்தான், முல்லைப்பெரியாறு அணையிலும்கூட, பென்னி குயிக் குகை வழி அமைத்து இருக்கின்றார்.

நாலுமுக்கு என்ற இடத்தில் இருந்து ஒரு தனிப்பாதை பிரியும். அந்த வழியாகத்தான் குதிரைவெட்டி எஸ்டேட்டுக்குப் போக வேண்டும். அங்கே ஒரு கண்காணிப்புக் கோபுரம் கட்டி இருக்கின்றார்கள். அதன்மீது ஏறி நின்று பார்த்தால், அங்கிருந்து மணிமுத்தாறு அணையின் முழுத்தோற்றத்தையும், அதைக் கடந்து நெடுந்தொலைவு பார்க்கலாம் என்றார்.

கண்ணகி கோவில் அருகே நின்று, முல்லைப்பெரியாறு அணையை முழுமையாகப் பார்த்த காட்சி நினைவுக்கு வந்தது.

அதேபோல, களக்காட்டில் இருந்து தம்பி துரை அழகர் அழைத்தார். சில தகவல்களைச் சொன்னார்.

அப்பர் கோதையாறு என்பது மேல் அணை. அங்கிருந்து சாலை வழியாக, கீழ் கோதையாறு அணைக்கு வருவதாக இருந்தால், நாகர்கோவில், பணகுடி, களக்காடு, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை, நாலுமுக்கு வழியாக சுமார் 200 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும்.

ஆனால், மேல் கோதையாறு அணையில் இருந்து கீழ் கோதையாறு அணைக்கு இழுவைத் தொடரி (விஞ்ச்) ஓடுகின்றது. இது, தமிழ்நாடு மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தண்டவாளத்திற்கு இடையே முள்பற்கள் உள்ளன. சுமார் 500 மீட்டருக்கு ஒரு தளம் என்கின்ற வகையில் 4 பிரிவுகளாக உள்ளது. ஒவ்வொரு தளத்திலும் மாற வேண்டும்.

கோதையாறு அணையில் இருந்து சுமார் 9 கிலோமீட்டர் லோயர் டேம். இரண்டு அணைகளுக்கும் இடையே சுமார் 4 கிலோ மீட்டர் குகை வரியாக நீர் மேலே எடுத்துச்செல்லப்பட்டு, அதன்பின் வெளியே குழாய் மலம் கொண்டு செல்லப்படுகின்றது. சுமார் 40 மெகா வாட் மின்சாரம் இங்கிருந்து கிடைக்கின்றது.

விஞ்ச் செல்கின்ற வழியில், பெரிய குட்டியாறு அணை, சின்னக்குட்டி ஆறு அணை உள்ளன. இந்த இடங்களிலும் கூட சில படங்களின் காட்சிகள் படம் பிடித்து இருக்கின்றார்கள். முதன்மை அணையைக் கடந்தால், முத்துக்குளிவயல் பகுதி சாலை தொடங்குகின்றது.

அப்பர் கோதையாறு செல்ல வேண்டும் என்றால், மாஞ்சோலை வழியாகத்தான் போக வேண்டும். ஆனால், இப்பகுதி கன்னியாகுமரி மாவட்டம் ஆகும். இங்கு, நாகர்கோவில் நாடாளுமன்றம் மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு, ஒரு வாக்குச் சாவடியும் உண்டு. அங்கே 15 வாக்காளர்கள்தான்.

அதற்கென, குமரி மாவட்டத்தில் இருந்து தேர்தல் அலுவலர்கள், நெல்லை மாவட்டம் வழியாகப் பயணித்துத்தான் வருவார்கள். காரணம், இப்பகுதி முழுமையும் இப்போது புலிகள் காப்பகமாக, பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது.

மாஞ்சோலைக்கு அடுத்து, காக்காச்சி உள்ளது. அதுதான், இப்பகுதியின் உயரமான சிகரம் ஆகும். இங்கே ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய கோல்ஃப் விளையாட்டுத் திடல் உள்ளது. காக்காச்சியில் இருந்து செங்கல்தேரிக்கு டிரெக்கிங் வழி இருக்கின்றது. இங்கிருந்து அப்பர் கோதையாறு, ஊத்து, குதிரைவெட்டி சாலை பிரிகின்றது. குதிரைவெட்டியில் காடுகள் துறையின் தங்கும் விடுதி உள்ளது.

இங்கே உள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்தால், பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் தெரியும்.

இப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தவிர, வேறு யாரும், காடுகள் துறையின் ஒப்புதல் பெறாமல் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல முடியாது என்றார் துரை அழகர்.

இதுபோல, மாஞ்சோலைக்குச் சென்று வந்த மேலும் சில தோழர்கள், சில வரிப் பின்னூட்டங்கள் எழுதி இருக்கின்றார்கள். அங்கே போய் தங்க முடியுமா? என்று பல தோழர்கள் கேட்டு இருக்கின்றார்கள். அங்கே சுற்றுலா விடுதிகள் இல்லை.

ஒரு தோழர், அதை சுற்றுலா மையமாக அறிவித்து, அரசு பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டு இருக்கின்றார்.

இல்லை; கூடாது; ஒரு போதும் கூடாது. அது புலிகள் வாழிடம். காடு காடாகத்தான் இருக்க வேண்டும். அங்கே மனிதன் ஊடுருவினால் இயற்கை அழிவுதான். இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாஞ்சோலைப் பயணத்தின் நிறைவாக, ஊத்து தேயிலைத் தோட்டப் பகுதிகளில் மூன்று மணி சுற்றித்திரிந்தோம். நண்பர்கள் அனைவரையும், பல இடங்களில் நிற்க வைத்து, பல கோணங்களில் படம் பிடித்தேன்.

அழகான படங்கள் கிடைத்தன. அவர்களுக்கு அளவற்ற மகிழ்ச்சி. மாலை ஆறு மணி ஆகி விட்டது. பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

மீண்டும் மைனா தேநீர் கடையில், அப்போதுதான் பொரித்த இனிப்பு அரிசி அப்பம் கிடைத்தது. ருசித்துச் சாப்பிட்டேன். அடுத்து சுடச்சுடத் தேநீர் கிடைத்தது. குளிருக்கு இதமாக இருந்தது. அங்கே கூடி இருந்த தொழிலாளர்கள், அதைவிடச் சூடாக அரசியல் பேசிக்கொண்டு இருந்தார்கள், அவர்களிடம் எங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு ஒரு காணொளி பதிவு செய்தேன்.

அந்தக் கடைக்கு அடுத்த ஒரு சிறிய கட்டடம்தான் ஊத்து அஞ்சலகம். அங்கே 27 ஆண்டுகளாக வேலை பார்க்கின்ற இராஜசேகர் அவர்கள், எங்களை அன்போடு வரவேற்றுப் பேசினார். அதற்கு அடுத்து ஒரு சிறிய மசூதி இருக்கின்றது. 15 முஸ்லிம் குடும்பங்கள் இருப்பதாகச் சொன்னார்கள்.

மாலை ஆறு மணி ஆகி விட்டது. கடுங்குளிர் வாட்டத் தொடங்கியது. குளிர்காப்பு உடைகள் இல்லை; அம்பையில் காதுப்பட்டி வாங்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். வாங்கவில்லை.

குளிர் கூடியதால், அருகில் இருந்த சிறிய பேருந்து நிலையக் கட்டடத்திற்குள் சென்று உட்கார்ந்தேன். தோட்டத் தொழிலாளர்கள் ஐந்தாறு பேர், தங்கள் ஊர்க் கதைகளைப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் அனைவரும், திருநெல்வேலி அருகே மானூர் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள்.

6.30 மணி அளவில் பேருந்து வந்தது. மலையில் ஏறும்போது, பின் இருக்கையில் கடைசி வரிசையில் உட்கார்ந்து இருந்தோம். இந்த முறை, ஓட்டுநருக்கு அருகில் முன் இருக்கையில் உட்கார்ந்து கொண்டோம்.

ஓட்டுநர், நமது அம்பை நண்பர் கிருஷ்ணனுக்கு நண்பர். அவரோடு பேசியதில் பல தகவல்கள் கிடைத்தன. அவர் இந்த வழியில் கடந்த ஏழு ஆண்டுகளாக பேருந்து ஓட்டிக் கொண்டு இருக்கின்றார். அதற்கு முன்பு, ஐந்து ஆண்டுகள் ஓட்டி இருக்கின்றார். இடையில் வேறு பணிமனை. ஒட்டுமொத்தமாக 12 ஆண்டுகள் மாஞ்சோலை தடத்தில் பேருந்து ஓட்டுகின்றார்.

திரும்பி வரும்போது, நாலு முக்கு பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் நிறுத்தினார்கள். அங்கே சிலர் தேநீர் அருந்தினார்கள். அடுத்து, மாஞ்சோலையில் நிறுத்தினார்கள். நாங்கள் அங்கே தேநீர் பருகினோம். ஒரு இடத்தில், மிளா எனப்படும் காட்டு மான்கள் உலவிக் கொண்டு இருப்பதைக் காண்பித்தார்.

இந்த வழியில் பேருந்து ஓட்டுபவர், உலகிலேயே பொறுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளுள் ஒருவர் என உறுதியாகச் சொல்லலாம்.

இரு சக்கர வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், ஒரேயொரு இரு சக்கர வாகனம், இருட்டுக்கு உள்ளே பேருந்தை முந்திச் சென்றது. அவர் இந்தப் பகுதியில் வனத்துறையின் அதிகாரியாகப் பணிபுரிகின்றாராம். அந்த இருட்டுக்கு உள்ளே, தனியாக டூவிலர் ஓட்டுவதற்குத் துணிச்சல் வேண்டும். அவரை எண்ணி வியப்பாக இருந்தது.

9.30 மணிக்கு கல்லிடைக்குறிச்சி வந்து சேர்ந்தோம். அங்கே ஒரு ஆட்டோ பிடித்து, அம்பாசமுத்திரம் வந்து சேரும்போது, 10 மணியைக் கடந்து விட்டது. உணவகங்கள் மூடி விட்டார்கள். சாலையில் நின்றுகொண்டு இருந்தோம். அந்த வழியாகச் சென்ற ஒரு குவாலிஸ் வண்டி எங்களைப் பார்த்து நின்றது.

நண்பர் அருண் இருந்தார். அவர் என் முகநூல் பதிவுகளை வரி விடாமல் வாசித்து வருபவர். நாங்கள் மாஞ்சோலை போகின்ற தகவல் அவருக்குத் தெரியும். எனவே, எங்களைப் பார்த்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டார்.

ஒரு அந்திக்கடையில் இரவு உணவு வாங்கித் தந்தார். இனி நீங்கள் தென்காசிக்குச் செல்லப் பேருந்துகள் குறைவாகத்தான் இருக்கின்றன.

அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கூட ஆகும்; நானே உங்களைத் தென்காசி வரை கொண்டு வந்து விடுகின்றேன்; அண்ணனோடு பேசிக்கொண்டே வந்தால் நேரம் போவது தெரியாது என்றவர், நாங்கள் மறுத்தும் விடவில்லை.

வண்டியில் இருந்த குடும்பத்தினரை வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுவிட்டு வரும்படி ஓட்டுநரிடம் சொன்னவர், விடாப்பிடியாக எங்களைத் தென்காசி ஆனந்தா தங்கும் விடுதி வரையிலும் கொண்டு வந்து சேர்த்துவிட்டு விடைபெற்றார்.

அவருக்கும், இந்தப் பயணத்தில் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

அருணகிரியின் முகநூல்

இதையும் படிக்க: மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் வாழ்க்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here