குற்றாலத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செண்பகாதேவி அருவி அருகில், மிகவும் பழமை வாய்ந்த செண்பகாதேவி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். பௌர்ணமி காலங்களில் இந்த கோயிலுக்கு வந்து, ஒரு நாள் இரவு தங்கி, அம்மனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வழிபாடு செய்வது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்ட இருந்தன. தற்போது கோயில்கள் திறக்கலாம் என்று அரசு உத்தரவிட்டிருக்கும் நிலையில், வனத்துறையினர் செண்பகாதேவி கோயிலுக்கு வர தடை விதித்துள்ளனர்.
இன்று பௌர்ணமி என்பதால் பக்தர்கள் செண்பகாதேவி கோயிலுக்கு சென்று வழிபடலாம் என்று எதிர்பார்த்திருத்த போது வனத்துறையினர் தடை விதித்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், ”கடந்த சில வாரங்களுக்கு முன்பு மெயின் அருவி பகுதியில் இருந்து செண்பகாதேவி அருவி பகுதிக்கு செல்லும் வழியில் வனத்துறையில் பணியாற்றி வந்த வேட்டைத் தடுப்புக் காவலர் பணியில் இருந்த போது ஒற்றை காட்டு யானை அவரை தாக்கி மிதித்துக் கொன்றது. மேலும் வனவிலங்கு நடமாட்டம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பை கருதி அங்கு செல்வதற்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தினந்தோறும் கோவிலுக்கு சென்று பூஜைகள் நடத்தி வரும் அர்ச்சகருக்கும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றனர்.
இதையும் படிக்க:குற்றாலத்தில் குளியல் எப்போது?