பைக் வாங்கலயோ பைக்!

6866

தென்காசி-ஆலங்குளம் சாலையில் ஜோராக விற்பனையாகும் பழைய இருசக்கர வாகனங்கள்!

”அண்ணே இந்த டிவிஎஸ் எக்ஸ்.எல் எவ்ளோ.. எண்ணனே இவ்ளோ சொல்லுதிய.. சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்பா..’’ என ஒரு ரேட் பேசி, வாங்கல், விற்கல் சுமூகமாக முடிகிறது. தென்காசி – ஆலங்குளம் சாலையில் தேங்காய் வியாபாரம் போல் நடக்கிறது பழைய இரு சக்கர வாகனங்கள் விற்பனை.

தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் மட்டும் சுமார் 300 பழைய பைக் கடைகள் உள்ளன. புதிய வாகனங்களின் விற்பனைக்கு நிகராக பழைய பைக்குகள் வியாபாரம் இங்கு அமோகமாக நடக்கிறது. குறைந்த விலையில் கிடைப்பதால், இங்குள்ள கடைகளில் எப்பொழுதும் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும். பட்ஜெட்டுக்கு ஏற்ப டிவிஎஸ்-50 இல் இருந்து புல்லட் வரை எல்லா பைக்குகளும் கிடைக்கின்றன.

விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரளாவிலிருந்தும் ஏராளமான பைக் பிரியர்கள், தங்களுக்கு பிடித்த பைக்குகளை வாங்கிச் செல்ல தென்காசி – ஆலங்குளம் சாலையில் உள்ள பைக் சந்தைகளுக்கு வருகின்றனர். சரியான ஆவணங்களுடன் வாகனங்களை வாங்கிச் செல்கின்றனர். ரூ. 5000-இல் துவங்கி, ரூ. 50 ஆயிரம் வரைக்கும் பைக்குகள் கிடைக்கின்றன. ஹோண்டா, டி.வி.எஸ்., ஹீரோ, யமஹா, பஜாஜ், ராயல் என்பீல்டு, சுசூகி போன்ற அனைத்து பைக் நிறுவனங்களின் பழைய வாகனங்களையும் இங்குள்ள கடைகளில் வாங்க முடிகிறது.

‘’விவசாயிகள், பால்காரர்கள், சிறுகுறு வியாபாரிகள், டெலிவரி பையன்கள், மார்க்கெட்டிங், குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கிறவங்க புதிய வண்டியைக் காட்டிலும், செகண்ட் ஹேண்ட் வண்டிகளைத்தான் விரும்பி வாங்குறாங்க. கேரளா பக்கத்துல இருக்கிறதால அங்க இருந்தும் பைக் வாங்க நிறைய பேர் வர்றாங்க. அவங்க புல்லட், ஸ்பெலண்டர் பைக்குகளை அதிகளவில் வாங்கிட்டுப் போறாங்க. தவிர, சந்தையில் அறிமுகமாகி சில மாதங்களே ஆனா புது மாடல் பைக், ஸ்போர்ட்ஸ் டைப் பைக்குகளை கூட இங்க வாங்கலாம். சந்தையை விட்டு நின்றுபோன ஸ்கூட்டர், பஜாஜ் பல்சர் 200 என்.எஸ், சுஸூகி மேக்ஸ் 100 போன்ற வண்டிகளும் இங்கு கிடைக்கின்றன’’ என்கிறார் தென்காசியில் பழைய பைக் கடை வைத்திருக்கும் சாமுவேல்.

பழைய இரு சக்கர வாகனங்கள் எந்தளவுக்கு வாங்க வருகிறார்களோ, அந்தளவுக்கு விற்கவும் வருகிறார்கள். விபத்தில் சிக்கிய வாகனங்கள், புதிய வாகனங்கள் மீதான மோகம் போன்ற காரணங்களால், பழைய வாகனங்கள் இங்கு அதிகளவு விற்பனைக்கு வருகின்றன. மேலும் நீதிமன்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், வாகனக் கடன் செலுத்தாத வாகனங்களை இவர்கள் ஏலத்தில் எடுத்து விற்பனைக்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

வாகனத்தை விற்க வருபவர்களிடம் ஒரிஜனல் ஆர்.சி புக், இன்சூரன்ஸ் ஆகியவற்றை சரிபார்த்து, வாகனக் கடன் நிலுவையில் இருக்கிறதா என்பதையும் பார்க்கிறார்கள். வாகனக்கடன் இருந்தால் வண்டிகளை ஏற்பதில்லை. திருட்டு பைக் பிரச்சினை, ஏதேனும் வில்லங்கத்திலிருந்து தப்பிக்க, விற்க வருபவரின் முகவரி அடையாளச் சான்று நகலையும் வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

‘’தென்காசி-ஆலங்குளம் சாலையில் 30 வருஷத்துக்கு முன்னாடி ஒன்றிரண்டு கடைகள் தான் இருந்துச்சு. இப்ப கிட்டத்தட்ட 300 பைக் கடைகள் இருக்கும். உரிய ஆவணங்களை சரிபார்த்த பிறகுதான் பைக்குகள் வாங்குவோம். சந்தேகப்படும்படியான வாகனங்களை எங்க சங்கத்துல உள்ளவங்க எடுக்குறது இல்ல. இதனால் இதுவரைக்கும் திருட்டு பைக் பிரச்சினை இங்க வந்தது இல்ல.

பைக் மாடல், தயாரித்த ஆண்டு, எவ்வளவு தூரம் ஓடியிருக்கு, பைக்கின் தோற்றம், எஞ்சின் கண்டிஷன் இதைப் பார்த்துதான் வண்டிக்கு விலை நிர்ணயிப்போம். வர்ற வண்டிகள பழுது நீக்கி, சேதமான பாகங்களை மாற்றி, வாட்டர் வாஷ் பண்ணிதான் விற்பனைக்கு வைப்போம். இதுக்காகவே ஒவ்வொரு கடையிலும் சிறிய அளவுல சர்வீஸ் ரூம் வைச்சிருக்கோம். வாங்கிய விலை, சர்வீஸ் செலவு போக, வாங்கிய தொகையோட ரூ. 5000 கூடுதலா சொல்லி விற்போம். பேரம் பேசி 1000-1500 ரூபாய் குறைச்சி எடுத்துட்டு போவாங்க. ஒரு வண்டியை வித்தா 4000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு ரெண்டு மூனு வண்டிகள் விற்கும். இந்த பகுதிகளில் மட்டும் நாளொன்றுக்கு 500 பைக்குகள் வரையும் விற்பனையாகுது. ஸ்பெலண்டர், பஜாஜ் டிஸ்கவர், பிளாட்டினா பைக்குகள் வண்டிகள் அதிகளவு விற்பனையாகும். இந்த வண்டிகள்ல மைலேஜ் அதிகம், குறைந்த பராமரிப்பு போதும் என்கிறதால இந்த பைக்குகளுக்கு அதிக கிராக்கி’’ என்கிறார், நெல்லை மேற்கு பொதிகை மாவட்ட இரு சக்கர வாகன விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் எம்.பி. ராமராஜா.

பழைய இருசக்கர வாகன சந்தைகள் மூலம் தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. கடை அலுவலகம், வாகன சர்வீஸ், ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்ந்த பணிகள் உள்பட பல்வேறு பணிகள் மூலம் ஐநூறுக்கும் மேற்பட்டோர் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பைப் பெற்று வருகின்றனர்.

பைக் மாத்தினிங்னா பேரு மாத்திடுங்க!

புது வண்டி வாங்கும்போது, அதன் நிறுவனம் பதிவுக்குத் தேவையான அனைத்து விவரங்களையும் தயார் செய்து கொடுத்து விடும். நாமும் நேரடியாக அதன் உரிமையாளர் ஆகிவிடுகிறோம். ஆனால், 75 சதவீதம் பேர், பழைய வண்டியை வாங்கும் போது, அதன் உரிமையை நமது பெயருக்கு மாற்றம் செய்வதில்லை. பெயர் மாற்றம் செய்யாமல் வாகனங்கள் இயக்குவது, 1988 மோட்டார் வாகன சட்டப்படி குற்றம். இதற்கு அபராதம் விதிக்கவும் வழிவகை உள்ளது. மேலும் வண்டியை வாங்கியவர் பெயர் மாற்றம் செய்யாமல், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வண்டியை ஓட்டிக் கொண்டு வரும் காலகட்டத்தில் ஏதாவது விபத்து ஏற்பட்டால், அதற்கு வாகனக் காப்பீடு இருந்தாலும், இழப்பீடு பெற முடியாது.

எனவே பழைய வாகனத்தை வாங்கியவர், அவர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு ஆர்.சி புக், இன்சூரன்ஸ் ஆகியவற்றுடன் சென்று அதற்குரிய படிவங்களை நிரப்பி, உரிமை மாற்றம் செய்து, ஆர்.சி. புத்தகத்தை தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பின்பு பெயர் மாற்றம் செய்த ஆர்.சி. புத்தகத்தை காண்பித்து இன்சுரன்ஸ் பாலிசியிலும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here