பாவூர்சத்திரம் சந்தை மட்டன் சாப்பாடு..

தொழிற்சாலையைப் போல பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது அந்த உணவகம். பத்துக்குப் பத்து அறையில் கூலிங் ஆஸ்பெஸ்டாஸ் சீட் இறக்கி, அதனுள்ளே நாற்காலி போட்டிருக்கிறார்கள். ஒரு பக்கம், ஈயக் குண்டானில் சாதத்தை வடித்து வடித்து, வைக்கோல் நிரப்பப்பட்ட ஓலைப்பாயில் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் சட்டிகளில் கறிக்குழம்பு கொதித்துக் கொண்டிருக்கிறது. பகல் 11 மணிக்கெல்லாம் இருக்கைகள் நிறைந்துவிடுகின்றன. கரைவேட்டிக்காரர்கள் முதல் தொழிலாளர்கள் வரை எல்லோரும் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

தென்காசி சட்டசபை தொகுதி 2021: உங்கள் வாக்கு யாருக்கு?
Vote

நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டுக்கு எதிரில் இருக்கிற, ‘சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டலில்’தான் இந்தக் காட்சி. முன்னர் இந்த உணவகத்துக்குப் பெயர், ‘கூரைக்கடை.’ பனை ஓலைக் கொட்டகையில் இயங்கியதால் அந்தப் பெயர். இப்போது கொஞ்சம் முகம் மாறியிருக்கிறது. ஆனால், சுவையும் பாரம்பர்யமும் மாறவில்லை.

ஐந்தாண்டுகளில் தென்காசி எம்.எல்.ஏ.வாக செல்வ மோகன்தாஸ் பாண்டியனின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
Vote

100 ரூபாய்தான். அன்லிமிடெட் மட்டன் சாப்பாடு. கேட்கக் கேட்க கறிக்குழம்பு ஊற்றுகிறார்கள். ஒரு கிண்ணம் நிறைய மட்டன் தருகிறார்கள். குலதெய்வக் கோயில்களில் கிடா வெட்டி பூசை போடும்போது போடுவார்களே… படைப்புச் சாப்பாடு, அதே ருசி. எலும்பையும் கறியையும் போட்டு ஒரே குழம்பாக திரட்டிவிடுகிறார்கள். ரத்தக் குடல் பொரியலும், வெங்காயத் தயிர் பச்சடியும் சைடிஷாகத் தருகிறார்கள். தேவைப்பட்டால் ஒரு கிண்ணம் புளிரசமும் வாங்கிப் பருகலாம்.

ஐந்தாண்டுகளில் கடையநல்லூர் எம்.எல்.ஏ.வாக முகம்மது அபூபக்கரின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
Vote

நெல்லையிலிருந்து குற்றாலம் செல்லும் பாதையில் இருக்கிறது பாவூர்சத்திரம். சாரல் நேரத்தில் குற்றாலம் செல்லும் சுற்றுலா வாகனங்களால் இந்த உணவகம் இருக்கும் சாலை நிறைந்து விடுகிறது. மிதமான உப்பு, உறைப்போடு ரசம்போல கறிக்குழம்பை ஊற்றிப் பிசைந்து, கிராமத்து மட்டன் சாப்பாட்டை சாப்பிடுகிற அனுபவத்துக்கே பலர் இந்த உணவகத்தை நாடி வருகிறார்கள்.

ஐந்தாண்டுகளில் ஆலங்குளம் எம்.எல்.ஏ.வாக பூங்கோதையின் செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?
Vote

கண் முன்னால், குண்டாச்சட்டியில் கறி கொதித்துக்கொண்டிருக்கிறது. அந்தக் காட்சியே, பசியைத் தூண்டிவிடுகிறது. சட்டிக்குள்ளிருந்து துண்டுகளை அள்ளி வந்து சோற்றில் கவிழ்க்கிற மனோஜ்குமார், பேராசிரியர் வேலையை உதறிவிட்டு உணவகத்துக்கு வந்தவர். கடையில் கல்லாப்பெட்டிகூட இல்லை. பணத்தை வாங்கி பனியனுக்குள் போட்டுக் கொள்கிறார்.

‘சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டலு’க்கு 50 ஆண்டுகால வரலாறு உண்டு. ஞாயிற்றுக்கிழமை வி.கே.புரம், சனிக்கிழமை அம்பாசமுத்திரம், வியாழக்கிழமை பாவூர்சத்திரம், புதன்கிழமை தென்காசி… என தினம் ஓர் ஊரில் சந்தை நடக்கும். அந்த ஊர்களில் எல்லாம் பனையோலைக் குடிசை ஒன்றைக் கட்டிவைத்துக்கொண்டு, சந்தைக்கு வரும் தொழிலாளர்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் மட்டன் சாப்பாடு சமைத்துப் போடுவார் மனோஜ்குமாரின் அப்பா லிங்கதுரை.

ஒருகட்டத்தில், பிற பகுதிகளைவிட பாவூர்சத்திரத்தில் வரவேற்பும் தேவையும் அதிகமிருக்கவே, இங்குள்ள கூரைக்கடை நிரந்தரமாகிவிட்டது. கூரைக்கடை, கான்கிரீட் கட்டடமாக மாறியதும் ‘சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டல்’ என்றாகிவிட்டது.

தொடக்கத்தில் சந்தைக்கு வரும் தொழிலாளர்கள்தான் வாடிக்கையாளர்கள். வஞ்சனை இல்லாமல் பரிமாறி, மனதுக்கு நிறைவாக உபசரிப்பதால் படிப்படியாக வளர்ந்து விட்டது உணவகம். இப்போது தொலைதூரத்தில் இருந்தெல்லாம் மதிய உணவு நாடி இங்கு வருகிறார்கள்.

11 மணிக்கு சாப்பாடு தயாராகிவிடும். விவசாயத் தொழிலாளர்கள் மூன்று மணிக்குத்தான் வேலை முடித்துச் சாப்பிட வருவார்கள் என்பதால், நான்கு மணி வரை சாப்பாடு வைத்திருக்கிறார்கள். கடைசி நிமிடம் வரை கறிக்குழம்பு தீக்கங்கிலேயே இருக்கிறது. சுடச்சுட சாப்பிடலாம். ஐந்து மணிக்கெல்லாம் பாத்திரங்களைக் கழுவி அடுக்கிவிட்டு, கிளம்பி விடுகிறார்கள்.

பலர் தினமும் சாப்பிட வருவதால், வித்தியாசத்துக்காக வெள்ளி, செவ்வாய் மட்டும் மட்டன் சாப்பாட்டுக்கு விடுமுறை. வெள்ளிக்கிழமை ஒரு கப் சிக்கன் வித் சாப்பாடு. செவ்வாய்க்கிழமை பொரித்த மீன், குழம்போடு சாப்பாடு. 80 ரூபாய்தான்.

“கோயில்ல போடுற படைப்புச் சாப்பாடு மாதிரிதான் இருக்கும். பட்டை, லவங்கமெல்லாம் பயன்படுத்துறதில்லை. வீட்டுல திரிச்ச மிதமான வத்தல், மல்லி மசாலா மட்டும்தான். ஃபிரிட்ஜ், மிக்ஸி மாதிரி எந்த உபகரணங்களும் ஹோட்டல்ல வெச்சுக்கிறதில்லை. இந்தப் பகுதியில, ஆட்டிறைச்சிக்குப் பேர்போன ஊரு அடைக்கலம் பட்டி. அங்கிருந்து தெளிவான மட்டன் வாங்குறோம். சுவைக்குக் காரணம், மட்டன்தான். அப்படியே ஒரே குழம்பா திரட்டிருவோம். வேம்பு, புளி விறகுல கங்கு நெடுநேரம் நிக்கும். குழம்பு கடைசிவரைக்கும் அடுப்புலேயே இருக்கும். நேரமாக ஆக ருசி கூடும்’’ என்கிறார் மனோஜ்குமார்.

சாப்பாடு ஒரு பக்கம் பரபரக்க, இன்னொரு பக்கம் குழம்பு விற்பனை சூடு பறக்கிறது. 10 ரூபாய் வாங்கிக்கொண்டு சட்டி நிறைய குழம்பு ஊற்றிக் கொடுக்கிறார்கள். பீஸோடு வேண்டுமென்றால் 60 ரூபாய்.

குற்றாலம் செல்பவர்கள் மதிய உணவுக்கு சந்தை மட்டன் சாப்பாடு ஹோட்டலுக்குச் செல்லலாம். வயிற்றுக்குப் பாதகமில்லாத, அசல் தென்மாவட்ட அசைவ உணவின் ருசிக்கு உத்தரவாதம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here