தென்காசி மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிக்கு 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா, மாவட்ட திட்ட அலுவலர் சரவணன் மற்றும் அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அரசு துறை அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கலெக்டர் விளக்கி கூறினார்.
பின்னர் கலெக்டர் சமீரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தல் தேதி அறிவித்த உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. தேர்தல் விதிகளின்படி அரசு அலுவலக கட்டிடங்கள் மற்றும் பொது இடங்களில் அரசியல் தலைவர்களின் விளம்பரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றை 48 மணி நேரத்திற்குள் நீக்கவேண்டும். இதேபோன்று அரசு அலுவலகங்களில் உள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் 24 மணி நேரத்துக்குள் நீக்கப்பட வேண்டும். கட்டணம் வேட்பாளர்களின் கணக்கில் சேர்க்கப்படும். கணக்கீடு செய்ய கணக்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு அமைதியாகவும், முறையாகவும் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகின்றன. தேர்தல் விதிகளை முறையாக கடைப்பிடிப்பதற்கும், இதனை கண்காணிப்பதற்கும் ஒரு தொகுதிக்கு 3 வீதம் 5 தொகுதிகளுக்கும் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 15 நிலை கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் தடை
தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பணியில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள், குழுக்கள் உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்ற உள்ளனர். அவசர உதவிக்காக 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு எண்கள் பொதுமக்களின் உதவிக்காக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த அவசர உதவி எண்களில் தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை பதிவு செய்யலாம். வாக்காளர்களை அச்சுறுத்தினால் அதுகுறித்தும் பதிவு செய்யலாம். வேட்பாளர் அல்லது வேட்பாளர்களின் வாகனங்களில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணமோ, பொருட்களோ கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ரூ.1 லட்சத்திற்கு மேல் கொண்டு சென்றால் பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளது. உரிய ஆவணங்கள் கொடுத்தால் உடனடியாக அவர்களை விடுவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் படையின் பணிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணமோ, பொருட்களோ கொடுத்தால் அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.
சோதனை சாவடி
தென்காசி மாவட்டத்தில் ஒரு தொகுதிக்கு 3 சோதனை சாவடி வீதம் 15 சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன. மேலும் இந்த மாவட்டம் கேரள மாநிலத்தின் எல்லையில் இருப்பதால் அங்கு சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் போன்ற மாவட்ட எல்லைகளிலும் சோதனை சாவடி அமைக்கப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்படுகிறது.
மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1884 ஆக உயர்ந்துள்ளது. கடந்த முறை குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வாக்குகள் எண்ணப்பட்டன. இந்த தேர்தலுக்கு 5 தொகுதிகளுக்கும் ஒரே இடத்தில் வாக்குகள் எண்ணிக்கை நடத்த திட்டமிடப்பட்டு யூ.எஸ்.பி. கல்லூரி வளாகம் தேர்வு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் தேர்தல் பணிக்காக தயார் நிலையில் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தென்காசி சட்டமன்றத் தொகுதி.. ஓர் சிறப்பு பார்வை