குற்றாலம் தேனருவி போனவர்கள் அங்கு தங்களுக்கு நடந்த சுவரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு Tenkasi Life முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தாம். வந்து குவிந்த பகிர்வுகளில் சில இங்கே..
Tamilselvan Thangapandi: 1980-ல் என்னுடைய 20 வயதில் தூத்துக்குடியிலிருந்து நண்பருடன் புல்லட் மோட்டார் சைக்கிளில் குற்றாலம் வந்து குளித்துவிட்டு கலைவாணர் திறந்தவெளி அரங்கில் சினிமா பார்த்த ஞாபகம். செண்பகாதேவி அருவி, தேனருவிக்கு கரடுமுரடான பாதையில் சென்று பயமின்றி குளித்து மகிழ்ந்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கிறது.
Sugirtharaj Azariah: அருவித் தண்ணீரில் தலை கொடுத்து குளிக்க முடியாத, தடாகத்தில் மட்டுமே குளிக்க முடிந்த ஆச்சரியமான அபாயகரமான அருவி.
Vijay Kumar: நிச்சயம் நண்பர்களுடன் செல்ல வேண்டிய இடம், நான் அங்கு சென்ற வருடம் 2003,2004,2006. மூன்று முறை சென்றுள்ளோம். இவற்றில் 90’s கிட்ஸ் அதிர்ஷ்டசாலிகள்.
Anver Dheen: 85-களில் நானும் என் மனைவியும் பாதி வழி போகையிலேயே விறகு சுமந்து வந்தவர்கள், ‘மேலே போக வேண்டாம் பாதை சீராக இல்லை. வழிநெடுக சாராய பாட்டில்களை உடைத்து போட்டிருக்கிறார்கள். மேலே குடிகாரபயல்கள் கலாட்டா வேறு போனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை’ என் சொன்னதால் பாதி வழியிலேயே திரும்பி விட்டேன்.
பாலமுருகன் ரா: இருபது வருடங்களுக்கு முன்பு ஒரு தடவை போய் இருக்கிறேன். எனக்கு நீச்சல் தெரியாததால் தேனருவியில் குளிக்க இயலவில்லை.
Murugan Ugans: தேனருவி, தண்ணீர் உறை நிலையில் உள்ளது போல் இருக்கும். என் நண்பன் சீனி அழைத்து சென்றான். மறக்கமுடியாத அருமையான அனுபவம்.
Gopalakrishnan SP: 1998 ஜுலை நான் காலேஜ்ல படிக்கும்போது நண்பர்களோட சென்று ஒரு முறை தேனருவி பார்த்திருக்கேன். தேனருவி செல்லும் பாதைகள்,தேனருவி கொட்டிய காட்சியை கண்ட போது ஹாலிவுட் படத்தின் பிரமிப்பு இருந்தது. மறக்க முடியாத இனிய அனுபவம்.
Mahesh Sankaran: நான் சிறுவயதில் 94ல் அங்கு என் பெற்றோரோடு சென்ற அனுபவம் எனக்கு உண்டு. செண்பகாதேவி அருவியில் துவைத்து குளித்து விட்டு தேனருவிக்கு செல்லும் வழியியே தேனீக்களின் இரச்சலோடு அருவியை பார்த்த அனுபவம் மறக்கமுடியாதது.
Ravi Vishwa: காலை 6 மணி. செங்கோட்டை மணி அய்யர் ஓட்டல் தயிர்சாதம் உளுந்த வடை வாங்கிக்கொண்டு குற்றாலம் கிளம்பினோம். நான் எனது மாமா நண்பர்கள் 9 மணிக்கெல்லாம் போய்விட்டோம். செம குளியல். அந்த நாளை வாழ்க்கையில் மறக்க மாட்டேன்.
Poovu Mannan: அந்த அனுபவத்தை சொல்ல ஒரு பதிவு போதாது. 4 தடவை போயிருக்கிறோம். அதில் இருதடவை மறுபிறப்பு. மீண்டும் மீண்டும் செல்ல துண்டும் இடம்.
Suresh: செண்பகாதேவி அருவியில் குளித்து விட்டு நான் உட்பட எனது கல்லூரி நண்பர்கள் 8 பேர் தேனருவி நோக்கி கரடு முரடான ஒத்தையடி பாதையில் நீளமாக நடந்து சென்று கொண்டு இருந்தோம். முன்னாள் சென்ற நண்பன் இரண்டு கைகளையும் umpire wide காட்டுவது போல் காட்டி எதுவும் பேசாமல் நின்று விட்டான். என்னவென்று எல்லோரும் முன்னாள் பாக்கும் போது சுமார் 10 அடி இருக்கும் ராஜ கருநாகம் போல எங்களை பார்த்து படம் எடுத்து நின்றது. ஓட வழியும் இல்லை, வாழ்கை முடிந்து விட்டது என்று நினைத்தோம், ஆனால் நாங்கள் ஏதும் செய்யாமல் அப்படியே நின்றதால் அந்த பாம்பு மெதுவாக எங்களுக்கு வழி விட்டு காட்டுக்குள் சென்றது. எப்படியாவது அந்த தேனருவியை பார்த்து விட வேண்டும் என்ற வெறி கடைசியில் வெற்றி.
Karthick Ramcn: நான் இருமுறை போயிருக்கிறேன். ஒரே வருத்தம் பாதை சரியாக இருந்ததில்லை. முதன் முதலாய் பார்த்த பொழுது பிரமிப்பாக இருந்தது. கண்ணாடி போல் தண்ணீரை முதல் தடவை அங்குதான் பார்த்தேன். தண்ணீரை குடித்த போது அது அவ்வளவு தித்திப்பாக இருந்தது.
Suresh: எனது நண்பருக்கு அறைகுறை நீச்சல்தான் தெரியும். உள்ளே போகும் போது அருவி அருகில் சென்று அங்கு இருந்த கல்லில் ஏறி விட்டான். பின்பு அதே தைரியத்தில் யாரிடமும் சொல்லாமல் மீண்டும் கரைக்கு வர முயற்சி செய்யும் போது பாதியில் மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீருக்கு அடியில் சென்று விட்டான். இதை கவனித்த நான் விரைந்து சென்று அவனுக்கு அடியில் நீந்தி சென்று அவன் பின் பக்கத்தை கையால் பிடித்து, வெறும் காலால் மட்டும் நீச்சல் அடித்து கரை வந்து சேர்த்தேன்.
அருவி விழும் சத்தத்தில் நான் கத்தியது யாருக்கும் கேட்க வில்லை. ஒரு வழியாக கரைக்கு கொண்டு வந்து விட்டேன். அறை மணி நேரத்திற்கு மேலாக யாரிடமும் பேச முடியவில்லை. எங்கள் இருவர் நெஞ்சும் அடைத்து விட்டது. இதெல்லாம் தவிர நாங்கள் இருவரும் உயிருக்கு போராடி கரை வரும் போது கரையில் இருந்த மற்றொரு நண்பன் தண்ணீரில் இருந்த ஒரு குட்டி மீனை காட்டி எவ்வளவு அழகா இருக்கு பாரேன் என்று சொன்னான். நான் அவன் முகத்தை பார்த்து சிரித்தேன். வேறு ஒன்றும் அவனை அப்பொழுது செய்ய என்னிடம் தெம்பு இல்லை.
இன்று வரை என் நண்பன் நீ தான்டா என் உயிரை காப்பாற்றினாய் என்று சொல்லும் போது எனக்கு சூப்பர் ஹீரோ மாதிரி feel ஆகும். இப்பொழுது கோவையில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிகிறான் மிக்க சந்தோசம்.
Madan Karthikeyan: நீண்ட தூர பயணம். கரடு முரடான பாதைகளை கடந்து பாறைகளில் தவழ்ந்து அங்கு சென்றவுடன் அருவியின் இரைச்சல் சத்தம் கேட்டது. வானுயர மலைகள் ஆர்ப்பரிக்கும் அருவி உற்று இன்னமும் மறக்க முடியாத நினைவுகள் என் மனதில் உள்ளது. உள்ளே சென்றவுடன் அருவியை நெருங்கும் போது மலை தேனீக்களின் ரீங்கார சத்தங்கள் எங்கு பார்த்தாலும் அவைகளின் வீடுகள். இன்னமும் பிரமிப்பாக உள்ளது.
அங்கு எப்போது செல்வோம் என்ற ஆர்வமும் ஆவலும் இன்றளவும் என் மனதில் உள்ளது. உள்ளே சென்றால் ஆபத்து வெளியிலேயே நின்று சாரலில் குளித்து விட்டு அதன் பிறகு வருகின்ற தண்ணீரிலும் குளித்துவிட்டு. மீண்டும் ஒரு பயணத்தை தொடங்கினோம். அடர்ந்த மலைகளுக்கு இடையே சங்கிலி மட்டும் இருந்தது. அதை பிடித்துக்கொண்டு ஏறி அந்த வனப்பகுதிக்குள் சென்று மேலே உள்ள கடைசி குற்றால தண்ணி தமிழக எல்லைக்குள் வரும் இடத்திற்கு சென்றோம். பயங்கரமான காற்று அங்கு அதிகமாக கிராஸ் வேலி புற்கள் தான் இருக்கின்றன. அதையும் தாண்டி அடர்ந்த பாதாளத்தை எட்டிப் பார்த்தோம். எங்களோடு வந்தவர் காண்பித்தார், அதுதான் கேரளா என்று. இன்னமும் மறக்க முடியாது திரில்லிங் அனுபவங்கள்.
Jeevan Fernando: ஒரு முறை மனோன்மனியத்தில் படிக்கும் சமயம் நண்பர்களோடு சென்றேன். செண்பகாதேவி அருவி தடாகத்தை தாண்டி மேலே செல்ல பாறைகளான பாலம் முன்னால் இருந்ததிற்கான அடையாளத்தோடு தூண்கள் மட்டுமே நின்றன. அதை தாண்டி சென்று தேனருவியை காணும் போது கிடைத்த சந்தோசம் அளவிட முடியாதது.
நெருக்கமான இரு மலைபாறைகள் இணையும் இடத்தில் விழும் இந்த அருவியின் நீர் வெண்மையான பனி மேலிருந்து கீழ் படர்ந்து போல தோன்றும். பாறை இடுக்குக்கு உள்ளே செல்லும் போது உடம்பில் ஊசி குத்துவது போன்ற சிலிர்ப்பு. நீரின் குளிர்தன்மை கூடுதலாக இருக்கும். அருவியை நெருங்க நெருங்க, அதிகபடியான குளீரால் என்னால் நெருங்கி சென்று பார்க்க முடியவில்லை.
நண்பர்கள் அருகில் சென்று வந்தனர். பாறைகளின் மேல் உச்சிகளில் அருவிக்கு அருகில் மிகப்பெரிய தேனடைகள் இருந்தது. காடுகளில் வசிக்கும் இனத்தவர் வேர்களை கயிராக திரித்து இறங்கி தேன் எடுத்த காட்சி பார்த்தது கூடுதல் சிறப்பு. பின் தேனருவி தொடங்கும் இடத்திற்கு செல்ல செங்குத்தான பாறைகளில், மலைகளில் உள்ள புற்களை ஆதாரத்தோடு சென்று பார்த்த போது, சிறிய ஓடை போன்ற தண்ணீர் அங்குள்ள குழியில் விழுந்து அவ்வளவு பெரிய நீர்வீழ்ச்சியை உருவாக்கியதை பார்த்த போது வியப்பாக இருந்தது.
திரும்ப வரும்போது மலைத் தூறல் வந்ததால் மிகவும் ஜாக்கிரதையாக கீழே இறங்கிய பின்னர் தான் உயிர் வந்தது. மேலிருந்து இறங்கும் போது கீழே பார்த்துக் கொண்டு வந்தால் மரணபயம் வந்து விடும். நண்பர்களோடு சென்ற போது கிடைத்த தைரியத்தில் சென்று வந்தேன், வயது 21, பயம் அறியா வயது. இப்போது மிகவும் உயரமான இடத்திற்கு சென்றாலே பயம் வந்து விடுகிறது. காலமாற்றம் வயது ஏற்றம் தரும் மாற்றம் அது.
இன்று நினைத்தாலும் சிலிர்ப்பை தரும். சில வருடங்களுக்கு பின்னால் செல்லும் போது செண்பகாதேவி அருவி செல்வதற்கு கூட மிகவும் கண்டிப்பு காட்டியதால், புதிய மற்றும் பழைய குற்றாலம், புலி அருவி சென்று திரும்பினேன். மானசீகமாக செண்பகா தடாகம், தேனருவி நினைத்து திரும்பினேன்.
இதையும் வாசிக்க: மாஞ்சோலை – அழகின் எல்லை இதுவோ!
நான் கேரளாவில் உள்ள எனது நண்பன் வீட்டிற்கு சென்னையிலிருந்து 12/12/2019 புறப்பட்டேன் மோட்டார் சைக்கிளில் 16 மணி நேரம் பயணத்தில் ஒரு அடியாக என் நண்பன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன் ஒரு மாத காலமாக அவன் வீட்டில் தங்கிக்கொண்டு கேரளாவை சுற்றித் திரிந்தேன் அனைத்து கண்டு ஆனந்தம் கொண்டேன் பின்பு என் நண்பன் வீட்டில் இருந்து புறப்பட்டேன் தனியாக புறப்பட்ட நாள் என்னுடன் என் நண்பன் ஒருவன் பயணத்தில் கலந்து கொண்டான். தென்மலை காட்டிற்குள் நானும் என் நண்பன் மட்டும் தனியாக பயணம் செய்துகொண்டிருந்தோம் இரவு நேரத்தில் ஓய்வு எடுக்கலாம் என்று ஒரு காட்டின் கூடாரம் ஒன்று அமைத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தோம் அப்போது ஒரு சட்டம் என்னவென்று பார்க்கும்போது ஒரு புலி ஒன்று கண்ணில் தென்பட்டது 500 மீட்டர் தூரம் இருந்தாலும் மனதில் ஒரு பயம் அந்த அனுபவத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை மரணத்தைக் நேருக்கு நேராக சந்தித்த ஒரு தருணம் அப்போது அந்தப் புலி எங்களை கண்டவுடன் மெதுவாக எங்களை நோக்கி வந்தது நானும் என் நண்பனும் பயத்துடன் கூடாரத்தில் சத்தமின்றி பயத்துடன் அமர்ந்திருந்தோம் பின்பு அந்த புலி காணவில்லை இரவு நேரம் அனைத்தும் உறங்காமல் கண் விழித்து கொண்டிருந்தோம் அதுவே என் சிறந்த அனுபவம்……