மக்களிடம் கடுமை காட்ட வேண்டாம்: தென்காசி எஸ்.பி. அட்வைஸ்!

சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை என்கிற ஆதங்கங்கள் பரவலாக ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் பொதுமக்களுடன் நல்லுறவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து காவல்நிலைய அதிகாரிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் நீட்சியாக. தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி ஆய்வாளர்களுக்கான திறன் மேம்பாட்டு குறித்து சிறப்பு வகுப்பு நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் தலைமையில் நடைபெற்றது.

உதவி ஆய்வாளர்கள் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பது பற்றியும், புகார் மனுக்களை விசாரிக்கும் முறை பற்றியும், காவல்நிலைய ஆவணங்களை பராமரிப்பது குறித்தும், காவல்நிலையப் பணிகளை சட்டப்படி மட்டுமே மேற்கொள்ள வேண்டியது தொடர்பாகவும், குற்றவாளிகளை கைது செய்யும்போது உச்சநீதிமன்ற கட்டளைகளை கடைபிடிக்க வேண்டியது தொடர்பாகவும் உள்ளிட்ட பல அறிவுரைகளை எடுத்துரைத்தார்.

பின் உதவி ஆய்வாளர்களின் நிறை, குறைகளையும் கேட்டறிந்தனர். காவல்துறை பொதுமக்களின் நண்பன் என்பதை நிரூபிக்கும் வகையில் நமது செயல்பாடு இருக்கவேண்டும்; பொதுமக்களிடம் கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here