மூங்கில் மரத்தில் 40 ஆண்டுகள் கழித்து ஒருவித நெல்மணிகள் காய்க்கிறது!
‘பசுமை தங்கம்’ என புகழப்படும் மூங்கில் மரம் புல் வகையைச் சேர்ந்ததாகும். 40-60 ஆண்டுகள் வரை வாழக்கூடிய மூங்கில், ஒரு நாளில் மட்டும் 100 செ.மீ., உயரம் வரை வளரக்கூடியவை. இப்படியாக ஒரு மூங்கில் அதிகப்பட்சமாக 15-20 செ.மீ., அகலத்தையும், 25-30 மீட்டர் உயரத்தையும் கொண்டிருக்கும். இதன் தூர் பக்கவாட்டில் பரவிக்கொண்டே போகும். பூமியில் ஆக்சிஜனை அதிகளவு வெளியிடும் மரங்களில் இதுவும் ஒன்று.
மூங்கில் மரங்கள் காட்டு யானைகளின் உணவு ஆதாராகமாகவும், வாழிடமாகவும் திகழ்கிறது. உலகம் முழுவதும் 1200க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்கின்றன. தமிழகத்தில் தட்டை மூங்கில் மற்றும் கல் மூங்கில் அதிகளவில் காணப்படுகின்றன. தற்போது முள்ளில்லா மூங்கில் வளர்ப்பு பிரபலமடைந்து வருகிறது.
மூங்கில் மரத்தில் 40-60 ஆண்டுகளில் ஒரே ஒரு முறை வெளிர்மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கின்றன. மூங்கில் பூ பூத்தால் அது முற்றி விட்டது என்று அர்த்தம். இந்த பூவிலிருந்துதான் நெல் மணிகள் காய்க்கின்றன. அத்துடன் மூங்கில் இறந்து விடுகின்றது. இந்த நெல் மணிகள் தான் ‘மூங்கில் நெல்’ என அழைக்கப்படுகிறது.
மலையும் மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தில் மூங்கில் அரிசி, தேன் போன்றவை பழங்கால மனிதர்களின் முக்கிய உணவாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பல்வேறு பழங்குடியின மக்கள் மூங்கில் நெல்லை உணவுக்காகவும், மருந்துக்காவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். மூங்கில் நெல் பற்றிய குறிப்புகள் புறநானூறு நூலில் உள்ளன. மூங்கில் நெல், பலா, வள்ளிக்கிழங்கு, மலைத்தேன் ஆகியவை உழவரால் உழப்படாமலேயே விளையக்கூடிய உணவுப்பொருட்கள் என்று புறநானூறு கூறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலையில் இன்றளவும் மூங்கில் நெல் அதிகமாக கிடைக்கிறது. அங்குள்ள மலைவாழ் மக்கள் மூங்கில் நெல்லை சேகரித்து விற்பனை செய்வதாகக் கூட செய்திகள் வெளிவந்துள்ளன.
அந்த காலத்தில் காடுகளின் ஒரு பகுதியாக மூங்கில் இருந்துது. தற்போது மூங்கில் கம்பிலிருந்து பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுவதால், அவை அளவுக்கு அதிகமாக வெட்டப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டு வருகின்றன. மூங்கில் மரம் ஆயுள் முடிவதற்குள் வெட்டப்பட்டு விடுவதால், மூங்கில் நெல் கிடைப்பது தற்போது அரிதாகி விட்டது. காட்டு யானைகள் அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வருவதற்கு மூங்கில் பரப்பு குறைந்ததும் ஒரு காரணமாகும்” என்கிறார், பளியர் பழங்குடியினத்தை சேர்ந்த செல்லையா.