தூத்துக்குடியில் ஒரு ராணுவ கிராமம்!

983

இந்தியாவின் தென்கோடி முனையில் இருந்து, வடகோடியில் இருக்கும் போர்முனைக்கு வீட்டுக்கு ஒருவரை ராணுவ வீரராக உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறது ஒரு ஆச்சரியக் கிராமம்.

திருநெல்வேலி – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் இருக்கும் பொட்டலூரணி விலக்கில் இருந்து வடக்கு நோக்கி சென்றால் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் வருகிறது செக்காரக்குடி. கடந்த 65 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ராணுவ வீரர்களாக உருவாக்கி ஆர்ப்பாட்டமின்றி வீற்றிருக்கிறது இந்த வீரம் விளைந்த மண்.

கிட்டத்தட்ட அனைத்து வீடுகளிலும், குறைந்தது ஒரு ராணுவ வீரர் இருக்கிறார். சில குடும்பங்களில் தாத்தா, தந்தை, மகன் என தலைமுறை தலைமுறையாக வாரிசுகளை ராணுவத்திற்கு அனுப்பி வருகிறது. சில வீடுகளில் ஓரே குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ராணுவத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

சண்முகம்பிள்ளை – வெள்ளையம்மாள் என்ற தம்பதியினர், தங்களுடைய மகன்கள் நான்கு பேரை ராணுவத்துக்கு அனுப்பி வைத்திருப்பதாக கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். வெள்ளையம்மாள் கூறுகையில், ‘’எங்களுக்கு மொத்த ஆறு மகன் பிள்ளைங்க. மாணிக்கம், காசிராஜன் என்கிற ரெண்டு பையங்க மிலிட்டரில இருக்காங்க. கருப்பசாமி, தங்கராஜ் என்கிற ரெண்டு பையங்க சி.ஆர்.பி.எஃப்.ல இருக்காங்க. ஒரு மகன் போலீசா இருக்கிறான்.

டிகிரி முடிச்சிட்டு, அவங்களே ப்ராக்டீஸ் பண்ணி, ராணுவத்துக்கு அப்ளே பண்ணி சேர்ந்திட்டாங்க. எல்லா அவங்களோட சொந்த முயற்சிதான். இதுநாள் வரைக்கும் என் பிள்ளைங்கள நினைச்சு கவலைப்பட்டது இல்ல. ஆனா இந்த புல்வாமா தீவிரவாதிகள் தாக்குதல்ல 40 பேர் பலியானதுக்கு அப்புறம் மகன்கள நினைச்சு கொஞ்சம் பயம் வர ஆரம்பிச்சிருக்கு. ஒவ்வொரு வாட்டியும் பையங்க போன்ல இருந்து ‘கால்’ வரும்போதெல்லாம் பக்கு பக்குன்னு இருக்கும். ‘ஹலோ’ன்னு அவங்களோட வாய்ஸ் கேட்கிறப்பதான் நிம்மதி பெருமூச்சு வரும்.

ஒவ்வொரு வாட்டியும் பேசுறப்ப ‘பாத்து இருய்யா’ன்னு சொல்லுவேன். ‘இங்க ஒரு பிரச்சினையும் இல்லம்மா.. நல்லாதான் இருக்கேன்.. அப்படியே உசுரு போனாலும் அது நாட்டுக்காக தானம்மா.. அதெல்லாம் பெருமம்மா’னு சொல்லுவாங்க’’ என்கிறார் வெள்ளையம்மாள்.

செக்காரக்குடி கிராமத்தில் பிறக்கும் ஆண்களை ராணுவத்திற்கு அனுப்பி அழகு பார்க்கும் போக்கு இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்தே துவங்குகிறது. செக்காரக்குடியில் நன்குடி வெள்ளாளர் எனும் சாதிப்பிரிவினர் பெருமளவில் வசிக்கின்றனர். இவர்கள் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் பலம்வாய்ந்த போர்ப்படை சிப்பாய்களாகவும், களரிப்பயிற்று எனும் தற்காப்புக் கலையில் சிறந்து விளங்குபவர்களாகவும் அறியப்பட்டவர்கள். யுத்தக் களத்தில் கடைசிவரை தீரத்தோடு நின்று போராடுபவர்களாக மன்னர் அரசுகளின் அபிமானத்தை பெற்றவர்கள் . அதன் நீட்சியாகவே இரண்டாவது உலகப்போரில் இந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் பங்கேற்றதாகச் சொல்கிறார்கள் செக்காரக்குடிவாசிகள்.

இன்றும் ராணுவம், துணை ராணுவம், கடற்படை, காவல்துறை பணிகளில் இம்மக்கள் அதிகளவில் பொறுப்பு வகிக்கிறார்கள். ராணுவத்தில் சேருவதற்கான உடல்வாகு, உயரம் இயற்கையாகவே கொண்டிருப்பதாலும், தேர்வு பெறுவதற்கான சூட்சுமங்களை முன்னோரிடம் இருந்து அறிந்து வைத்திருப்பதாலும் எளிதாக தகுதி பெற்றுவிடுகின்றனர். ஆண்களை ராணுவத்துக்கு அனுப்புவதும், பெண்களை ராணுவ வீரர்களுக்கு மணம் முடித்துக் கொடுப்பதும் இவ்வூரின் வழக்கம். மேலும் மணமகனுக்கு பெண் வீட்டார் சீதனமாக வீடும் கொடுத்து அனுப்பி வைக்கின்றனர்.

1954 முதல் 1975 வரையிலான காலத்தில் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அதே ஊரைச் சேர்ந்த 85 வயதான சுப்பையா பிள்ளை நம்மிடம் கூறும்போது, ‘’இந்திய சீனப் போர் (1962), இந்தியா பாகிஸ்தான் போர் (1965), வங்காள தேச விடுதலைப் போர் (1971) என மூன்று முக்கியப் போர்களில் பங்கேற்றவன் நான்.

எல்லைப் பிரச்சினை காரணமாக மூண்ட இந்திய சீனப் போர், ஒரு மாதத்தில் முடிவுக்கு வந்தது. இந்தியா – பாகிஸ்தான் போர் காஷ்மீர் பிரச்சினைக்காக இரண்டாவது முறையாக உருவானது. இப்போர் ஐந்து மாதங்கள் தொடர்ந்தது. மேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடையே வங்காள தேச விடுதலைப் போர் வெடித்தபோது, கிழக்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியா களமிறங்கியது. இப்போரின் முடிவில்தான், கிழக்கு பாகிஸ்தான் வங்காள தேசமாக தனிநாடு பெற்றது’’ என இந்த தள்ளாத வயதிலும் போர் நடைபெற்ற ஆண்டுகளையும், போர் குறிப்புகளையும் இம்மி பிசகாமல் சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார்.

தொடர்ந்து அவர், ‘’ராணுவத்தையும் நாட்டையும் என்னை மாதிரி யாரும் நேசிச்சிருக்க முடியாது. இப்பவும் ‘அட்டேன்சன்..’ என்கிற மேஜரோட குரல் என் காதுக்குள்ள எதிரொலிக்குது. போர்ல என்னோட பங்களிப்புகாக ராணுவப்படை தளபதியிக்கிட்ட இருந்து மெடல் எல்லாம் வாங்கி இருக்கேன். ராணுவப் பணி ஒரு பெருமைவாய்ந்த பணி. நாட்டுக்காக உழைச்சேன்னு சொல்றதுல எவ்வளவு பெருமை தெரியுமா?’’ என நினைவுகளில் மெச்சுகிறார் சுப்பையா பிள்ளை.

செக்காரக்குடியைச் சேர்ந்த அய்யம்பெருமாள், ‘’இரண்டாவது உலகப்போர் துவங்குன காலத்துல இருந்தே செக்காரக்குடில இருந்து ராணுவத்துக்கு அதிகமா போயிட்டு இருக்காங்க. அப்பா மிலிட்டரிக்காரரா இருப்பாரு, அவங்க சொந்தகாரங்க யாராவது மிலிட்டரிக்காரங்களா இருப்பாங்க. அவங்கள பார்த்து பார்த்து வளர்றவங்களுக்கு மிலிட்டரி ஆர்வம் இயல்பாகவே தொத்திக்கிறது. சின்னப் பசங்கக்கிட்ட கூட, ‘படிச்சு முடிச்சிட்டு என்னவாக போறா’ன்னு கேட்டா, ஆர்மில சேரப்போறேன்னுதான் சொல்வாங்க. பத்தாம் வகுப்பு முடிச்ச உடனே ராணுவத்துல சேர்றதுக்கு ப்ராக்டிஸ் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. வேலைக்கு போற முதல் சாய்சே ராணுவம்தான். அது கிடைக்கலானா மட்டும்தான் வேற வேலைக்கு போவாங்க. அந்தளவுக்கு ராணுவம்னா எங்க ஊர் பசங்களுக்கு அவ்வளவு ஆர்வம். இத்தனைக்கும் ப்ராக்டிஸ் பண்ண தேவையான சாதனங்களோ, பயிற்சி பண்ண தனியே மைதானமோ கிடையாது. இருக்கிறத பயன்படுத்தி தகுதிய வளர்த்துக்கிறாங்க.

ராணுவத்துக்கு இணையா துணை ராணுவத்துலயும் நிறைய பேர் சேர்றாங்க. ராணுவத்துல இருந்து ரிட்டையர்ட் ஆனவங்களுக்கு பென்சன் உண்டு. ஆனா 2004-ஆம் ஆண்டுக்கு பிறகு சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் மாதிரியான துணை ராணுவ வீரர்களுக்கு பென்சன் கிடையாது. இவங்களுக்கும் பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்தினாங்கனா, ஆர்மில சேர விரும்புற இளைஞர்களுக்கு அது பெரிய ஊக்கமா இருக்கும்’’ என்கிறார் அவர்.

செக்காரக்குடி இளைஞர்களுக்கு இந்திய ராணுவத்தின் மீதான பற்றும், ராணுவத்தில் சேரவேண்டும் என்கிற துடிப்பும் இயல்பாகவே ஒட்டிக்கொண்டிருக்கிறது. ராணுவத்தில் சேருவதற்கான உடல்தகுதியை மேம்படுத்த தினமும் உடற்பயிற்சிகள் செய்துவருகின்றனர்.

‘’ஆர்மில சேரணும் என்கிறது என்னோட சின்ன வயசுல இருந்தே இருக்கிற கனவு. இப்ப சமீபத்துல காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல்ல நம்ம ராணுவ வீரர்கள் பலர் இறந்தாங்க. இந்த மாதிரி நிகழ்வுகள் எல்லாம் ராணுவத்துல சேரணும் என்கிற எங்க ஆர்வத்துக்கு முட்டுக்கட்டையா நில்லாது. எங்க சொந்தக்காரங்க நிறைய பேர் ராணுவத்துல குண்டடிபட்டு இறந்துருக்காங்க. ஊனமாகி இருக்காங்க. ‘நாட்டுக்காக உயிர் இழக்கிறது கொடுத்த வைச்ச சாவு’ன்னு பெரியவங்க எங்கள சொல்லி வளர்ப்பாங்க. அதனால சாவ பத்தி எங்களுக்கு பயமில்ல.

டெய்லி குறைஞ்சது ரெண்டு மணிநேரம் ப்ராக்டீஸ் பண்ணுவோம். சனி ஞாயிறுகள்ல நாள் முழுக்க ப்ராக்டீஸ் பண்ணுவோம். இன்னும் ஒரு வருஷத்துல ராணுவத்துல சேர்ந்திடுவேன் என்கிற நம்பிக்கை இருக்கு. எல்லையில நின்னு நாட்டை காக்க ஆர்வத்தோடு இருக்கிறேன்’’’ உறுதியுடன் சொல்கிறார் பயிற்சியில் ஈடுபட்டு வரும் இளைஞரான மகாராஜா.

‘’ராணுவத்துல சேரணும் என்கிறது என்னோட ஒரே இலக்கு. முன்னாடி ராணுவத்துல சேர்றதுக்கு உடல்தகுதி தேர்வு மட்டும் போதுமானதா இருந்தது. அதனால சுலபா ராணுவத்துக்கு தேர்வானாங்க. ஆனா இப்ப உடல்தகுதித் தேர்வு போக, எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வுலயும் பாஸ் பண்ணனும். தவிர எழுத்துத்தேர்வு ஆங்கிலம், இந்தி மொழியில மட்டும்தான் நடத்துறாங்க. இதனால சமீப வருஷமா எங்க ஊர்ல இருந்து ராணுவத்துல சேர்றது குறைஞ்சுப் போச்சு. உடம்பு ஃபிட்டா இருந்தும் ராணுவத்துல சேர முடியலயேன்னு கஷ்டமா இருக்குது. எழுத்துத்தேர்வு வேண்டாம்ன்னு சொல்லலா. தமிழ் மொழியிலயும் வைக்கணும்னுதான் சொல்றேன்’’ என்கிறார் மற்றொரு இளைஞரான முத்துக்குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here