ஆப்ரிக்கா நாடுகள், ஆச்சரியமான இயற்கை வளங்களையும், அதிசயமான வன உயிர்களையும் கொண்ட அழகு பூமி. தான்சானியா மற்றும் கென்யா ஆகிய இருநாட்டு எல்லையில் உள்ள காடுகளும் அப்படித்தான் பிரமிப்பூட்டுகின்றன. சுமார் 15 லட்சம் காட்டு மாடுகள், 600 கிலோமீட்டர் தூரம், ஒரே கூட்டமாக இடம்பெயரும் ஒரு பிரமாண்டமான இயற்கை நிகழ்வு நடக்கிறது அங்கு.
தான்சானியாவில் உள்ள செரங்கட்டி தேசியப் பூங்காவும், கென்யாவில் உள்ள மசாய்மாரா தேசியப் பூங்காவும் இருநாட்டு எல்லைப்பகுதியில் ஒன்றோடொன்று இணைந்து அமைந்திருக்கும் பெரிய காடுகள் ஆகும். இந்த காடுகளுக்கு இரண்டு சிறப்புகள் உண்டு. ‘தி பிக் ஃபைவ்’ எனப்படும் ஐந்து பெரும் விலங்குகளான யானைகள், காண்டாமிருகம், சிங்கம், சிறுத்தை, காட்டெருமைகளை சர்வசாதாரணமாக காணலாம். மற்றொன்று, வைல்ட் பீஸ்ட் எனப்படும் ஒருவகை காட்டு மாடுகள் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான அளவில் இடம்பெயரும் நிகழ்வு, ஆப்ரிக்காவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றாகவும் சேர்க்க பரிசீலிக்கப்பட்டு வருகின்றது.
செரங்கட்டி மற்றும் மசாய்மாரா காடுகள், இந்தியக் காடுகளைப் போல் அடர்ந்த மரங்களை கொண்டவை அல்ல. மரங்களற்ற மிகப்பரந்த புல்வெளி கொண்ட காடுகள். எனவே வைல்டு பீஸ்ட், வரிக்குதிரை, மான் போன்ற பாலூட்டி விலங்குகள் அங்கு அபரிமிதமாக காணப்படுகின்றன. செரங்கட்டி பூங்காவில் மட்டும் சுமார் 15 லட்சம் வைல்ட் பீஸ்டுகள் உள்ளன. இத்தனை விலங்குகளுக்கும் 14,763 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலான செரங்கட்டி காடுகள் உணவுத்தேவையை பூர்த்தி செய்துவிடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் தான்சானியாவில் கோடைக்காலம் துவங்கிவிடும். செரங்கட்டி பூங்கா வறண்டுவிடும். அதேசமயம் இதேக்காலக்கட்டத்தில் கென்யாவில் பரவலாக மழைப்பொழிவு இருக்கும். எனவே வைல்ட் பீஸ்டுகள் மசாய்மாரா நோக்கி உணவுக்காக இடம்பெயர்வது வழக்கம்.
15 லட்சம் வைல்ட் பீஸ்டுகளுடன், 2 லட்சம் வரிக்குதிரைகள், 3 லட்சம் மான்கள் என கிட்டத்தட்ட 20 லட்சம் விலங்குகள் பிரம்மாண்டமாக மசாய்மாரா நோக்கி படையெடுத்துச் செல்லும் நிகழ்வு கானுயிர் உலகில் மாபெரும் அதிசயமாக பார்க்கப்படுகிறது. உலகில் வேறு எந்த உயிரினமும், வேறெந்தப் பகுதியிலும் இவ்வளவு எண்ணிக்கையில் இடம்பெயர்வதில்லை.
வைல்ட் பீஸ்டுகள் வாழ்க்கையில் இந்த இடப்பெயர்வு ஒரு கடினமான போராட்டக் காலம். இந்த நீண்டப் பயணத்தில் அத்தனை ஆபத்துக்கள் உண்டு. நீர்நிலைகள், பள்ளத்தாக்குகள், சேறு, கரடுமுரடான பாதைகளை கடந்து செல்ல வேண்டும். இடப்பெயர்வை எதிர்பார்த்து வரிசைக்கட்டி காத்திருக்கும் சிங்கம், சிறுத்தை, ஓநாய், கழுதைப்புலி ஆகிய வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பிக்க வேண்டும். மரணப்பொறி விரித்து எதிர்நோக்கியிருக்கும் முதலைகள் நிறைந்த ஆபத்தான நதிகளை நீந்திக் கடக்க வேண்டும். இடப்பெயர்வின்போது, கிட்டத்தட்ட வைல்ட் பீஸ்ட் உள்ளிட்ட ஒன்றரை லட்சம் விலங்குகள் வேட்டையாடப்பட்டும், காயங்களினாலும், நெரிசல்களில் சிக்கியும், பசி தாகத்தால் சோர்வடைந்தும் உயிரிழக்கின்றன.
பொதுவாக யானை போன்ற வனவிலங்குகள் இடம்பெயரும்போது குறிப்பிட்ட ஒரு யானையின் தலைமையின்கீழ் செல்லும். ஆனால் வைல்ட் பீஸ்டுகள் எந்தவொரு தலைமையும் இல்லாமல் மந்தை மந்தையாக இடம்பெயர்கின்றன. ஒரு மந்தை கூட்டத்தில் குறைந்தது 50 ஆயிரம் வைல்ட் பீஸ்டுகள் இருக்கும். ஒவ்வொரு மந்தையும் இரண்டு கி.மீ., இடைவெளிவிட்டு பின்தொடர்கின்றன.
உணவுத் தேடலும், இடம்பெயரும் உள்ளுணர்வும் தான் வைல்ட் பீஸ்டுகளை வலசை செல்லத் தூண்டுகிறது. மேலும் மழை பொழியும் திசையையும், பசும் புல்வெளி வாசனையையும் தெரிந்துகொண்டு அதை நோக்கி பயணம் போவதாக வன உயிரின ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த இடப்பெயர்வு பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செரங்கட்டி – மசாய்மாரா இடையே நடந்து வருவதாகவும் கூறுகின்றனர், மசாய்மாரா காடுகளில் வாழ்ந்துவரும் மசாய் பழங்குடி மக்கள்.
சுமார் 600 கி.மீ., பயணம் செய்து மாசாய் மாரா சென்றடையும் வைல்ட் பீஸ்டுகள் அக்டோபர் மாதம் வரை முகாமிட்டு உணவு தேடும். நவம்பரில் தான்சானியாவில் பருவமழை பெய்யத் தொடங்கியதும், செரங்கட்டியை நோக்கி அதே போராட்டங்களோடு வலசை திரும்புகின்றன.
வைல்ட் பீஸ்டுகளின் இந்த மாபெரும் இடப்பெயர்வை காண்பதற்காக உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்துக் கொடுக்கிறது கென்யா அரசு. இதன்மூலம் அந்நாட்டிற்கு சுற்றுலா வருமானமும் கணிசமாக கிடைக்கிறது. டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராஃபிக் உள்ளிட்ட சர்வதேச சேனல்கள் இடப்பெயர்வை முழுவதும் படம்பிடித்து ஆவணப்படங்களாக தயாரித்து வெளியிடுகின்றன.
வைல்ட் பீஸ்ட் பசு மாட்டைப் போல் சாதுவான விலங்கு. முழு வளர்ச்சியடைந்த ஒரு வைல்ட் பீஸ்டின் சராசரி உயரம் நான்கரை அடி, எடை 270 கிலோ. அதிகபட்சம் 13 ஆண்டுகள் உயிர் வாழும். ஒரு மணி நேரத்தில் சுமார் 80 கி.மீ. ஓடமுடியும். ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வைல்ட் பீஸ்டுகள் கன்றுகளை ஈன்றெடுக்கும் காலம். இந்த மாதங்களில் நாளொன்றுக்கு 50 ஆயிரம் கன்றுகள் பிறக்கின்றன. வைல்ட் பீஸ்ட் வலசை போகும் பாதைகளில் அளவுக்கு மீறி சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதாக அந்நாட்டு வன உயிரின ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.