இயற்கைக்கு ரொம்ப பக்கமாய்… மாஞ்சோலை பயணம்..

2587

மானுடர்களுக்கு மொத்தம் ஏழு பிறவி என்பார்கள். எனக்கு இதில் முரண்பாடு உண்டு. ஒவ்வொரு பயணங்களுக்குப் பின்னும் புதுப்பிறவி உண்டு என்பது என் கருத்து. நான் அப்படித்தான். ஆனால் எனக்குப் பெரிதாகப் பிறவிப்பயன் கிடைக்கவில்லை. அலுவல் நிமித்தம் காரணமாக பயணங்கள் பெரிதாக அமையவில்லை. சுத்த நெல்லைக்காரனான எனக்குத் தாமிரபரணி நீர்தான் ஆதாரம்.

ஓகே. விஷயத்துக்கு வருகிறேன். சொர்க்கத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன்; கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், எங்கள் ஊருக்குப் பக்கத்திலேயே ஒரு சொர்க்கம் இருக்கிறது என்பது, போன ஆண்டு டிசம்பர் மாதம்தான் எனக்குத் தெரிய வந்தது. அட ஆமாங்க, அதுதான் நான் மாஞ்சோலை எனும் சொர்க்க பூமிக்குப் பயணப்பட்ட நாள். பிறவிப்பயனை மொத்தமாக அனுபவித்த அந்த சுகத்தை எனக்குத் தெரிந்த அளவில் பகிர்கிறேன்.


வண்டியை விட்றா சம்முவம்!

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மலையடிவாரத்திலிருந்து சுமார் 3,500 அடி உயரத்தில் இருக்கும் ஒரு சொர்க்கத்தின் கீற்றுதான் இந்த மாஞ்சோலை. ஓர் ஞாயிறு அதிகாலை மாஞ்சோலைக்கு ஸ்கெட்ச் போட்டோம். சோம்பல் முறிக்கக்கூட நேரமில்லை. `எட்றா சம்முவம் வண்டியை’ என்று எங்கள் மொத்த சமூகமும் கிளம்பியது. ஃபியட் புன்ட்டோ கார்தான் எங்கள் கார். அம்பாசமுத்திரம் வழியாக மணிமுத்தாறு மலையடிவாரத்தில் புன்ட்டோவை நிறுத்தி, ஓர் இஞ்சி டீ. 50 கிமீ பயணத்துக்குப் பின் மணிமுத்தாறு செக் போஸ்ட்டில் கையெழுத்து.

மாஞ்சோலையில் நாம் தங்க வேண்டும் என்றால் முந்தின நாளே அம்பாசமுத்திரம் வனச்சரகம் அலுவலகத்தில் முறையாக அனுமதி வாங்க வேண்டும். சிம்பிள்தான். ஆதார் கார்டை முன்கூட்டியே நான் இணைத்திருந்தேன்.

போற வழியில்தான் மணிமுத்தாறு அருவி. ஹோவென்று அழகாய் ஆர்ப்பரித்துக் கூப்பிடும் அருவியில், கால் நனைக்காமல் இருக்க கல் மனசு இருந்தால்தான் சாத்தியம். மணிமுத்தாறு அருவியில் முத்து முத்தான நீரை உடலில் வாங்கியபடி, தலை நிமிர்ந்து பார்த்தால், ஏதோ ஒரு ஜென் நிலை கிடைக்கிறது. சில இடங்களில் தரை வழுக்கல் இருக்கிறது; கவனம். அதிகப்பிரசிங்கத்தனமாக இல்லாமல், அரசு சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் எப்படிப் போனோமா, அப்படியே திரும்பலாம். கூடவே குரங்குகளிடமும் கவனம். பிரேக்ஃபாஸ்ட்டுக்கு முண்டியடிக்கின்றன வானரங்கள்.


ஈர உடம்போடே புன்ட்டோ கிளம்பியது. இது ஒரு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. புலி, யானை, நரி, கரடிகளின் ஏரியாவில் இருந்தோம். இரவு நேரங்கள் என்றால் விலங்குகள் தரிசனம் நிச்சயம் என்றார்கள் செக்போஸ்ட்டில். பகலில் நாங்கள் பார்க்கவில்லை. அது எங்களைப் பார்த்திருக்கலாம். ஆனால் மயில்களின் டான்ஸ் பார்த்தோம்.

பொதுவாக காட்டுக்கு என்று மொழி உண்டு. அது, அமைதி. ரொம்ப அமைதியாகச் சத்தம் போட்டது காடு. இந்த நேரத்தில் காருக்குள் இளையராஜாவாகவே இருந்தாலும் தடா போடுவதுதான் ரசனையின் அடுத்த படி. காட்டுப்பாதை செம போதை ஏற்றியது. மரக் கீற்றுகளுக்குள் வீசும் சூரியக் கதிரொளி, தேயிலைப் பெண்கள், தேன் கூடுகள், மலைப்பாம்பு போல் வளைந்து நெளியும் பாதை – என அப்படியொரு விஷுவல். ஆளாளுக்கு கேமரா மேன் ஆனோம். ஆனந்த விகடன் பகுதி சொல்வனத்துக்குப் பயன்படுத்தலாம் போல. ஆனால், போகப் போக எங்கள் கார் திணறியது. அப்புறம்தான் தெரிந்தது – சாலையே இல்லாத சாலை அது.


இன்னும் 20 கிமீ பயணம்தான். போகப் போக போன் சிக்னல் காலியானது. BSNL மட்டும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை கிடைத்தது. அப்புறம் அதுவும் அவுட். செல்ஃபோன் நச்சரிப்புக்கு பதில் நம் காதுகளுக்கு சில்வண்டுகளின் ஓசையும், மலைத் தேனீக்களின் ரீங்காரமும் எங்களைப் பின் தொடர்ந்து ரம்மியத்தையும் பீதியையும் தந்தது. இயற்கை உலகுக்குள் நுழைந்து விட்டோம் என்பதற்கு அதுதான் முதற் சமிக்ஞை.

செல்லும் வழியெங்கும் தேயிலைத் தோட்டங்கள். கொஞ்ச தூரத்தில் புன்ட்டோவை ஓரங்கட்டினோம். செருப்பைக் கழற்றிவிட்டு வெறும் காலில் பனி அடர்ந்த புல்வெளியில் காலை வைத்தோம். காலில் பட்ட ஈரம் நம் இதயம் வரை தொட்டது. இரண்டு மயில்கள் மெதுவாக சாலையை கடந்தன. மேலிருந்து கீழே பார்த்தால், அம்பாசமுத்திரம் குட்டிச் செல்லமாக மின்னியது.

விலங்குகள் ஏரியா.. பார்த்துப் போங்க!

திரும்பவும் கார் பயணம். ஒரு முக்கியமான விஷயம். இங்கு பைக் அனுமதி கிடையாது. விலங்குகளில் ரோடு கிராஸிங்குக்காக இந்தப் பாதுகாப்பு. யானைகள் நடமாடும் ஏரியா என்பதால், ஒவ்வொரு வளைவிலும் மெதுவாக ஹார்ன் அடிக்க வேண்டும் என்றார்கள். மேல போகப் போக க்ளைமேட் மாறிக் கொண்டே இருந்தது. மழை பெய்தது; பனி கொட்டியது; எதிரே என்ன இருக்கு என்றே தெரியவில்லை. ஏப்ரல் to ஜூலை வரை இதமான தட்பவெப்பம் இருக்குமாம். பிற மாதங்களில் பனி, மழை, சாரல், குளிர் காற்று அதிகமாக இருக்கும். ஜெர்க்கின், கோட், ஸ்வெட்டர் முக்கியம். காலுக்கு ஷார்ட்ஸெல்லாம் சான்ஸே இல்லை.

போகும் வழியில் ஒரு கோல்ஃப் கிரவுண்ட் அமானுஷ்ய அழகாகத் தெரிந்தது. இங்கே அட்டைப்பூச்சிகள் அதிகம் என்பதால், காரை விட்டிறங்க கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. மாஞ்சோலை எஸ்டேட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் வீடுகள் அழகாக அடுக்கி வைக்கப்பட்ட தீப்பெட்டி மாதிரி இருந்தன. மாஞ்சோலை வேற லெவலில் மனசுக்குள் உட்கார்ந்து கொண்டது.

மாஞ்சோலைக்கு மேலே காக்காச்சி, ஊத்து, அப்புறம் சின்னச் சின்ன ஊர்களைக் கடந்து கடைசியா குதிரைவெட்டி போனோம். அதுதான் உச்சி. இங்கே எல்லோருக்கும் அனுமதி கிடைக்காது. புன்ட்டோவைப் பார்க் செய்துவிட்டு ரூமுக்குப் போனோம். லக்கேஜ்களை ரூமில் வைத்துவிட்டு, வெளியில் இருக்கும் டவரில் ஏறினோம். அவ்வளவு பனி மூட்டம். மேலிருந்து கழுகுப் பார்வையில் மணிமுத்தாறு அணை, அப்படியே இடப்பக்கம் பார்த்தால் 40 கி.மீ தூரத்தில் இருக்கும் காரையாறு அணை அழகாகத் தெரிந்தது. டவரிலிருந்து கீழிறங்கி வந்ததும் இரண்டு அழகான மயில்கள் நம்மைக் கண்டு மிரளாமல் பழகியது, சில்லிட்ட அனுபவம்.


இந்த இயற்கையைக் கையெடுத்துக் கூப்பத்தான் தோன்றியது. திருநெல்வேலிக்காரன் என்பதில் எனக்குப் பெருமைதான். மாஞ்சோலை, அதில் முக்கியக் காரணம்.

மாஞ்சோலை… என்ன கவனிக்கணும்?

மாஞ்சோலை வெறும் தேயிலைத் தோட்டமோ, சுற்றுலாத் தலமோ மட்டுமன்றி, இது புலிகள் சரணாலயம் அடங்கிய பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. கல்லிடைக்குறிச்சியைத் தாண்டி மலை ஏற ஆரம்பித்ததும், மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தையும் அருவியையும் தாண்டி மாஞ்சோலை செல்ல வேண்டும். இங்கே செல்ல, அம்பாசமுத்திரம் புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். இங்கு ப்ளாஸ்டிக், மது போன்றவற்றுக்குத் தடா. “உள்ளே மிருகம் பறவைகள்லாம் நிறைய இருக்கும், காரில் பாட்டுப் போடாதீங்க’’ என்று கூறித்தான் பாதுகாவலர்கள் அனுப்பி வைக்கிறார்கள். காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி ஆகிய இடங்களில் தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ளன. இதை நம்பி 1,200 ஆயிரக்கணக்கானோர் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். இங்கும் சிறப்பு அனுமதி அவசியம்.

மாஞ்சோலையில் தங்க வேண்டும் என்றால், உணவுக்கு முன்பே ஆர்டர் கொடுக்க வேண்டும். குளிர்காலங்களில் பனி, மழை, மேக மூட்டம் ஆகியவை செம சில்! கார்களில் மட்டுமே செல்ல முடியும். பைக்குக்கு அனுமதி இல்லை. ஆனால், திருநெல்வேலியிலிருந்து செல்லும் அரசுப் பேருந்துகளில் செல்லலாம். மாலை திரும்பி விட வேண்டும்.

நன்றி: மோட்டார் விகடன் டீம்

இதையும் படியுங்கள்: மாஞ்சோலை – அழகின் எல்லை இதுவோ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here