தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் கிராமக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்கள் மீது இவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர்.
காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் மனு அளித்தால் எதிர்மனுதாரரை காவல் நிலையத்துக்கு நேரில் வரவழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்துவார்கள். சில புகார்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்றும் விசாரணை நடத்துவதும் வழக்கம்.
ஆனால், எல்லா புகார்களுக்கும் காவல்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்துவதில்லை. ஒவ்வோர் ஊருக்கும் ஒரு காவலர் வீதம் தினமும் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்ற நடைமுறை இருந்தாலும் இந்த நடைமுறை பெரும்பாலான இடங்களில் செயல்படுத்தப்படவில்லை.
இதனை தென்காசி மாவட்டத்தில் முழு வீச்சில் செயல்படுத்த தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தென்காசி மாவட்டத்தில் கிராமக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருந்து வந்த புகார்கள் மீது நேரில் சென்று விசாரணை செய்யும் நடைமுறையும் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கிராமக் காவலர் என்ற அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் 895 கிராமக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நகராட்சிப் பகுதிகளில் எல்லை அதிகமாக இருக்கும் என்பதால் அருகருகே உள்ள சில வார்டுகளுக்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சில ஊர்களை உள்ளடக்கிய பேரூராட்சிப் பகுதிகள் உள்ளன. அந்த இடங்களுக்கு ஒவ்வொரு ஊருக்கும் ஒரு காவலர் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு நியமிக்கப்பட்ட காவலர்கள் அனைவரும் தினமும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள் அல்லது ஊர்களில் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள்.
அத்துடன், ஊரில் உள்ள பலதரப்பட்ட மக்களிடமும் நட்புடன் பழகி, ஊரில் நடக்கும் சம்பவங்கள் உள்ளிட்டவை குறித்து தெரிந்து வைத்திருப்பார்கள். மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள பழைய குற்றவாளிகளின் செய்பாடுகள், சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் போன்றவற்றையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தினமும் காவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களுக்குச் செல்வதால், பொதுமக்களுடன் நல்லுறவு ஏற்படும். சிலர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளிப்பதை விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்கள், தங்கள் ஊரில் நடக்கும் சட்டவிரோத செயல்பாடுகள், குற்றச் சம்பவங்கள் குறித்து கிராமக் காவலர்களிடம் தெரிவிக்க வாய்ப்பு உள்ளது.
குற்றவாளிகளுக்கும் அச்ச உணர்வு இருக்கும். மேலும், காவல் நிலையத்துக்கு புகார் அளிக்கச் சென்றால் காவல்துறையினருக்கு பணம் கொடுக்க வேண்டியது இருக்கும், காவல் நிலையங்களுக்கு செலவு செய்ய வேண்டியது இருக்கும் என்ற சந்தேகத்தின் காரணமாகவும் பலர் புகார் அளிக்க வருவதில்லை.
புகார்கள் மீது நேரில் சென்று விசாரணை நடத்துவதால் வெளிப்படைத் தன்மையும், நம்பகத்தன்மையும் ஏற்படும். பொதுமக்களுக்கும் காவல்துறையினர் மீது நம்பிக்கை ஏற்படும். இதனால் குற்றங்களைத் தடுப்பது மட்டுமின்றி பொதுமக்களுடனும் நல்லுறவு ஏற்படும். சிறு சிறு சம்பவங்களுக்காக காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் அலைந்து, காத்துக்கிடக்க வேண்டிய அவசியமும் இருக்காது” என்றார்.
இதையும் படிக்க: குறைகளை வாட்ஸ்-அப் பண்ணுங்க – தென்காசி கலெக்டர்
நன்றி: தி இந்து தமிழ்