நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையில் மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைகிறது ஆர் டி ஐ யில் அதிர்ச்சி தகவல்.

947

தென்காசி திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது இரண்டு மாவட்டங்களை மட்டுமல்லாது இரு மாநிலங்களை இணைக்கும் மிக முக்கிய நெடுஞ்சாலையாகும்.

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தென்காசி மற்றும் கேரளா செல்லும் வாகனங்கள், சிமெண்ட், மரம், ஓடு, காய்கறிகள் மற்றும் பல்வேறு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

குற்றாலம் மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில், சபரிமலை போன்ற ஆன்மீக தலங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த நெல்லை தென்காசி நெடுச்சாலையை தான் பயன்படுத்துகின்றன.

மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், ராணி அண்ணா கல்லூரி மற்றும் பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளும், தொழில்நுட்பக் கல்லூரிகளும், கலைக் கல்லூரிகளும், பள்ளிக்கூடங்களும் இந்த சாலையில் அமைந்துள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் வைத்திலிங்கபுரத்தை சார்ந்த சமூக ஆர்வலர் மாரியப்பன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பல்வேறு கேள்விகளை மாநில நெடுச்சாலை துறையிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அதற்கு கோட்ட பொறியாளர் பாலசுப்பிரமணியன் அளித்த பதிலில், நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை திட்ட மானது 430.71 கோடிகள் மதிப்பீட்டில் உலக வங்கி மற்றும் தமிழக அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறது.
இந்த நான்கு வழிச்சாலை திட்டம் 2015 ம் ஆண்டு மே 29 அன்று ஒப்புதல் மற்றும் அறிவிக்கப்பட்ட தேதியாகும்.

பணிகள் முடிக்க இலக்கு :

இ பி சி 14 ( பொறியியல் கொள்முதல் கட்டுமானம் ) பழைய பேட்டை 5.000 கி மீட்டரில் இருந்து ஆலங்குளம்27.700 கி மீட்டர் வரை இந்த ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது. மற்றும் இந்தப் பகுதியில் பணிகள் முழுவதும் முடிப்பதற்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் 2 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இ பி சி 15 ( பொறியியல் கொள்முதல் கட்டுமானம் ) ஆலங்குளம்27.700 கி மீட்டரில் இருந்து ஆசாத் நகர் 50.600 கி மீட்டர் வரை இந்த ஆண்டு பிப்ரவரி 24 ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது.
மற்றும் இந்தப் பகுதியில் பணிகள் முழுவதும் முடிப்பதற்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பணிகள் காலவரையறை: மொத்தம் 18 மாதங்களில் இந்த நான்கு வழிச்சாலை பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கிய நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

பழையபேட்டை முதல் ஆலங்குளம் வரை 7.62 சதவீத பணிகளும், ஆலங்குளம் முதல் ஆசாத்நகர் வரை 1.8 சதவீத பணிகளும் முடிவடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரச்சனை ஏதுமில்லை:

இந்த நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை பணிகளுக்கு பிரச்சனைகள் ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுங்கச்சாவடி :

நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை திட்டத்தில் மாறாந்தை யில் சுங்கச்சாவடி அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எத்தனை வருடங்களுக்கு சுங்கச்சாவடி செயல்படும் என்ற கேள்விக்கு தகவல் இல்லை என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.

கிராமப்பகுதிகளில் 35 மீட்டர் அகலத்திலும்,
நகரப் பகுதிகளில் 25 முதல் 28 மீட்டர் அகலத்திலும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பாலங்கள் :

சிறிய பாலங்கள் 79 இடங்களிலும் பெரிய பாலங்கள் ஆலங்குளம் மற்றும் பாவூர்சத்திரம் ரயில்வே கேட்ட என இரண்டு இடங்களில் அமைக்கப்படுகிறது.

ஆலங்குளத்தில் அமைய இருக்கும் பாலமானது 200 மீ நீளத்திலும், பாவூர்சத்திரம் ரயில்வே பாலம் 990 மீ நீளத்திலும் அமைக்கப்பட இருக்கிறது.

பாவூர்சத்திரம் ரயில்வே கேட்டில் அமைய இருக்கும் ரயில்வே பாலமானது விரைவில் தொடங்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 31க்குள் இந்தப் பாலம் கட்டி முடிக்கப்படும் எனவும், பெரிய பாலங்களின் மதிப்பீடு நான்கு வழிச் சாலையின் மொத்த மதிப்பீட்டில் உள்ளடக்கியதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை பராமரிப்பு:
நெல்லை தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்த தேதியிலிருந்து ஐந்து ஆண்டுகள் சாலைப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மரங்கள்:

இந்த நான்கு வழிச் சாலையின் மொத்த நீளமான 45.6 கி மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் மரங்கள் நடப்பட இருக்கின்றன.

இவ்வாறு தகவல் அறியும் உரிமைச்சட்ட பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் மாரியப்பன் கூறுகையில், தென்காசி மாவட்டத்தில் பெரும்பாலும் போதிய அடிப்படை வசதி மருத்துவ வசதி இல்லாததால் மக்கள் திருநெல்வேலி செல்ல இரவு பகல் பாராமல் எந்த நேரமும் இந்த சாலையை பயன்படுத்துவதால் மாறாந்தை யில் அமைக்கப்படும் சுங்கச்சாவடியை தமிழக அரசு கைவிட வேண்டும்.
தென்காசி திருநெல்வேலி மாவட்ட எம் எல் ஏ மற்றும் எம்பிக்கள் உடனடியாக அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்த சுங்க சாவடி அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.

ஆலங்குளம் பகுதிக்கு மேற்கில் மெதுவாக பணிகள் நடைபெறுகிறது. இதனை வேகப்படுத்த வேண்டும்.

சாலை தரமாக அமைக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here