நெல்லையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ. 50 க்கு விற்பனை

1166

உணவகங்கள் திறப்பு, சுபநிகழ்ச்சிகளால் நுகர்வு அதிகரிப்பு
நெல்லையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு
கிலோ ரூ. 50க்கு விற்பனை

ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் அனைத்து உணவகங்கள் செயல்பட தொடங்கியதாலும், திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வழக்கமான உற்சாகத்துடன் நடைபெறுவதாலும் தேங்காய் விலை ஏறுமுகமாக உள்ளது.

அன்றாட உணவில் தேங்காய் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவியதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.
உணவகங்கள் எதுவும் செயல்படவில்லை. இதேபோல் திருமணம் போன்ற சுபநிகழ்வுகளும் நடைபெறவில்லை. இதனால் தேங்காய் உள்ளிட்ட முக்கிய காய்கனிகளின் அன்றாட தேவை கணிசமாக குறைந்தது. இவற்றின் விலையும் சரிந்தன.

சில்லறை விற்பனையில் கடந்த செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் வரை ஒரு கிலோ தேங்காய் ரூ 30 முதல் ரூ 35 வரை விற்பனையானது. மொத்த வியாபாரிகளும் ஒரு கிலோ ரூ 25 வரை குறைத்து கொடுத்தனர்.
இந்த நிலையில் செப்டம்பருக்கு பின்னர் தமிழகத்தில் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமண மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்சிகளும் நடக்கத் தொடங்கி விட்டன.

தடையற்ற போக்குவரத்தும் நடைமுறையில் உள்ளதால் உணவகங்களிலும் வாடிக்கையாளர்கள் வருகை வழக்கம் போல் அதிகரித்துள்ளது. இது போன்ற காரணங்களால் உணவு பொருட்களின் நுகர்வு அதிகரித்துள்ளதையடுத்து காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய காய்கனிகளின் தேவை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் இருந்து தேவைக்கு குறைவாகவே தேங்காய் வரத்து உள்ளது. இதன் காரணமாக தேங்காய் விலை கடந்த இரு வாரங்களாக அதிகரித்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி நெல்லையில் ஒரு கிலோ தேங்காய் சில்லறை விலையில் ரூ 50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனை கடைகளில் கிலோ ரூ 40 க்கு உணவகங்களுக்கும், சில்லறை வியாபாரிகளுக்கும் வழங்குகின்றனர்.
தேங்காய் வரத்து மீண்டும் அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு உள்ளதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்கு இதேநிலை நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here