தென்காசி விருதுநகர் வழித்தடம் 1927 ஆண்டு மீட்டர்கேஜ் ஆக தொடங்கப்பட்டு பின்னர் 2004 ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த வழித்தடத்தில் பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில் ஆகிய மூன்று ரயில்கள் சென்னைக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
கொரோனா ஊரடங்குக்கு முன்வரை இந்த வழித்தடத்தில் செங்கோட்டை மதுரை இடையே மூன்று ஜோடி பயணிகள் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் பிப் 2020 ல் பெங்களூருவில் நடைபெற்ற ரயில்கள் கால அட்டவணை சந்திப்பின்போது, தென்னக ரயில்வே சார்பாக வண்டி எண் 56365/56366 குருவாயூர் – புனலூர் பயணிகள் ரயில் மற்றும் வண்டி எண்56733/56734 மதுரை – செங்கோட்டை பயணிகள் ரயில் ஆகிய இரு ரயில்களையும் ஒன்றாக இணைத்து குருவாயூர் மதுரை எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரே விரைவு ரயிலாக இயக்க முன்மொழிவு செய்யப்பட்டது.
குருவாயூர் புனலூர் ரயில் புதிதாக இயக்கப்பட்ட போது நடைபெற்ற விழாவில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் கேரள எம்பிக்கள் இந்த ரயில் புனலூர் செங்கோட்டை ரயில் பாதைகள் முடிந்தவுடன் மதுரை வரை நீட்டிப்பு செய்யப்படும் என்று உறுதி அளிதிருந்தனர்.
இருக்கைகள் காலி:
இந்த குருவாயூர் புனலூர் பயணிகள் ரயிலில் பெரும்பாலான நாட்களில் இருக்கைகள் காலியாகவே செல்கின்றன. புனலூரில் இருந்து மதுரை வரை நீட்டிக்க பட்டால்தான் பயணிகளின் பயன்பாடு அதிகரிக்கும். ரயில்வே வருமானமும் அதிகரிக்கும்.
மேலும் சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில், கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார மக்கள் புனலூர், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர் போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு பேருதவியாக இருக்கும். அது மட்டுமின்றி இந்த மதுரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் பல கோவில் நகரமான மதுரை மீனாட்சி, திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், தென்காசி, புனலூர் (சபரிமலை) மற்றும் குருவாயூர் ஆகிய இடங்களை இணைக்கிறது.
பொங்கி வழியும் பாலருவி :
திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம் கடையம் பாவூர்சத்திரம் தென்காசி கொல்லம் வழியாக பாலக்காடு வரை இயங்கும் பாலருவி விரைவு ரயிலில் தமிழகப் பகுதிகளில் இருந்து ரயில் பயணிகள் முன்பதிவு நிரம்பி வழிகிறது.
சுற்றுலா மற்றும் ஆன்மிக ஏற்பாடு:
மீனாட்சி அம்மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், ஆரியங்காவு, சபரிமலை ஐயப்பன், குருவாயூர் போன்ற அனைத்து கோயில்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் பக்தர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
மேலும் சுற்றுலாவிற்கு குற்றாலம் மற்றும் அதை சுற்றி உள்ள அருவிகள், கேரளாவில் உள்ள பாலருவி , தென்மலை போன்ற சுற்றுலாத்தலங்கள், 13 கண் பாலம் என பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வதற்கு வசதியாக இருக்கும்.
இதனால் சரக்கு போக்குவரத்து பயணிகள் போக்குவரத்து சுற்றுலா ஆகிய அனைத்தும் மேம்படும். ரயில்வேக்கும் நல்ல வருமானம் ஈட்டித் தரும்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, இந்த மதுரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் பகல் 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 06.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். குருவாயூரில் இருந்து வரும்போது கொல்லத்தில் இருந்து மதியம் 11.30 க்கு புறப்பட்டு இரவு 06.30 மணிக்கு மதுரையை சென்றடையும்.
எனவே இந்த ரயில் மதுரை மற்றும் கொல்லம் இடையே உள்ள வழித்தட மக்களுக்கு பகல்நேர இன்டர்சிட்டி ரயில் போல செயல்படும். தமிழ்நாடு மற்றும் கேரளா மக்களுக்கு இந்த ரயில் மிகவும் பேருதவியாக இருக்கும். எனவே ரயில்வே வாரியம் உடனடியாக இந்த ரயிலை இயக்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.