புயல் எச்சரிக்கையை அடுத்து தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை

850
tirunelveli-district-collector-vishnu
Puravi Cyclone
Puravi Cyclone

புயல் எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகை: தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை

தென்மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் பட்டாலியனில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இன்று திருநெல்வேலிக்கு வந்தனர்.

இதனிடையே தாமிரபரணி ஆற்றில் குளிக்க 2 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

புரெவி புயல் தென்மாவட்ட கடற்பகுதியில் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

tamirbarani-river

அதன்படி அரக்கோணம் பட்டாலியனில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் தலைமையில் திருநெல்வேலிக்கு இன்று வந்தனர். ஒரு குழுவுக்கு 20 பேர் வீதம் 3 குழுக்களில் உள்ள 60 பேர் இங்குவந்து பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டரங்கில் தங்கியுள்ளனர்.

புயல், வெள்ள மீட்பு பணிகள் குறித்து துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் கூறும்போது, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கு தேவையான மீட்பு படகுகள், சாலைகளில் விழும் மரங்கள் வெட்டி அகற்றுவதற்கான உபகணங்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.

தாமிரபரணியில் குளிக்க தடை:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி மாவட்டத்தில் 87 தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு தாலுகாவுக்கு ஒரு துணை ஆட்சியர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனமழை, வெள்ளம் காரணமாக யாரும் தாமிரபரணி ஆற்றில் வரும் 2 நாட்களுக்கு குளிக்க செல்ல வேண்டாம். இதை குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை.

பாபநாசம், மணமுத்தாறு, சேர்வலாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய 6 அணைகளும் கண்காணிக்கப்படுகிறது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் வருவாய்த்துறை, வனத்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவினர் மாஞ்சோலை மலைப்பகுதியை கண்காணிக்கின்றனர்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற ராட்சத மோட்டார்கள் மற்றும் மரங்கள் விழுந்தால் அறுத்து அகற்ற தேவையான இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை குளங்களில் உடைப்பு ஏற்பட்டால், அவற்றை அடைப்பதற்கான மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.

திருநெல்வேலிக்கு வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளுக்கு செல்ல இவர்கள் சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். இவர்களை தவிர மாநில பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்த 60 பேரும், போலீஸாரும், தீயணைப்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டத்தில் கடலோர கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்குள் மீன்டிபிடிக்க செல்ல 2 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. கடலோர கிராமங்கள் முழுவதும் கண்காணிப்பில் உள்ளது. மீனவர்களை தங்க வைக்க 7 பல்நோக்கு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்கள் செல்லவில்லை.

இங்குள்ள மீனவர்கள் நாட்டுப்படகுகளில் சென்று மீன்பிடிப்பவர்கள். எனவே கரை திரும்பாத மீனவர்கள் இங்கு இல்லை. கூடங்குளம் அணுமின் நிலையத்தை பொருத்தவரை மழை, வெள்ள காலங்களில் அவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அவர்கள் பின்பற்றுவார்கள். புயல், வெள்ளம் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.

நன்றி: தி இந்து தமிழ் திசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here