கொரோனாவை ஒடுக்கும் ஆயுதங்கள், கேடயங்கள்!

315

கொரோனா தொற்று இல்லா விடியல் எப்போது?

ஒட்டுமொத்த உலகமும் பதில் தேடி காத்திருக்கிற கேள்வி இது.

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டம்; இன்னொரு பக்கம் அதன் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு; மற்றொரு பக்கம் ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் பறிபோன பரிதாபம். இப்படி ஒன்றா, இரண்டா? எண்ணிலடங்கா பாதிப்புகள்; சொல்லிலடங்கா இழப்புகள்.
இந்தியாவில் கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காக ஊரடங்கு அமல்படுத்தி மூன்று மாதங்கள் நிறைவடைந்து விட்டன. அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி நான்காம் இடத்துக்கு வந்துவிட்டது.

முடிவு தெரியாத போராக தொடரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? கொரோனா பரவலைத் தடுப்பதில் நீடிக்கும் சிக்கல்கள் என்ன? கொரோனாவை கட்டுப்படுத்த புதிய உத்திகள் தேவைப்படுகின்றனவா? மருத்துவர்கள் சிலரிடம் இக்கேள்விகளை எழுப்பினோம்.

‘ஊர்தோறும் கொரோனா தனி சிகிச்சை மையம் அமைக்க வேண்டும்’!

அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா கூறும்போது, ‘’கொரோனா தொற்று என்பது பெரும்பாலும் 90% அறிகுறிகளற்று இருப்பதாலும் நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு சில நாட்கள் முன்பிருந்து வைரஸ் பிறருக்கு பரவ வாய்ப்புள்ளதாலும் நாம் பரிசோதனைகளை துரிதப்படுத்துவது மூலம் நோயை கண்டறிய முடியும்.
பரிசோதனைகளை அதிகமாகவும் வேகமாகவும் செய்வதன் மூலம் நோயாளியைக் கண்டறிந்து அவரையும் அவரது குடும்பத்தையும் தனிமைப்படுத்திட முடியும். நோய் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையை தொடர்பு கொண்டு பரிசோதனை செய்து கொள்பவருக்கு சன்மானமாக சிறு ஊக்கத்தொகை வழங்கலாம்.

தங்களை முறையாக தனிமைப்படுத்திக்கொண்ட குடும்பத்தினரை ஊக்குவிக்கும் விதமாக ‘தனிமைப்படுத்தப்பட்ட வீடு’ என்று போஸ்டர் ஒட்டிய அதே வீட்டில் அதற்கு மேல் ‘கொரோனாவை வெல்ல தங்களை முறையாக தனிமைப்படுத்திக்கொண்டு நாட்டுக்கு உதவிய குடும்பம்’ என்ற போஸ்டரையும் ஒட்டலாம். அந்த குடும்பத்திற்கு சன்மானமாக தொகை வழங்கலாம். இது இன்னும் பலரையும் ஊக்குவிக்கும்.

தற்போது கொரோனா என்றாலே ஒரு மக்கள் மனதில் ஒரு அருவருப்பும் பீதியும் நிலவுகிறது. அதை நாம் சரிசெய்தாக வேண்டும். கொரோனா பாதிப்பது என்பது இயல்பானது. அதில் இருந்து மீள்வதும் இயல்பானது. கொரோனா தொற்றுக்குள்ளான 90 சதவீத பேருக்கு எந்த அறிகுறிகளும் இன்றி அந்த பிரச்சனை விடைபெற்று சென்று விடுகிறது.

நூற்றில் ஒருவர் மட்டுமே மரணம் அடைகிறார். எனவே கொரோனா தொற்று அறிகுறி இருந்தால் தாராளமாக வெளியே கூறி சிகிச்சை எடுப்பது நல்லது என்ற எண்ணத்தை மக்கள் மனதில் தொடர் விழிப்புணர்வு மூலம் விதைக்க வேண்டும்

மிகவும் மலிவான விலையில் முகக்கவசம் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அந்த முகக்கவசங்கள் கொரோனா தொற்றை காக்கும் வகையில் முறையாக தயாரிக்கப்படுகின்றனவா என்பதை சோதிக்க வேண்டும். அனைவரும் மூன்று தடுப்பு முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். துணிக்கவசம் என்றாலும் அதில் மூன்று தடுப்பு துணிகள் இருக்க வேண்டும். மூன்று தடுப்பு முகக்கவசங்களை எளியோரும் வாங்கும் விலைக்கு விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். அதன் உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஊருக்கும், கிராமத்திற்கும் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கு என சிகிச்சை செய்ய தனி மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். தற்போது நகரங்களில் அரசு நடத்தும் பிரத்யேக கோவிட் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பவர்கள் நேரடியாக அந்த பிரத்யேக மையங்களை அணுகுமாறு செய்ய வேண்டும்.

காய்ச்சல், தொண்டை வலி, இருமல் இருப்பவர்கள் மற்ற மருத்துவமனைகளை நாடுவதில் இருந்து தடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் கோவிட் தொற்று பிற நோயாளிகளுக்கு பரவுவதை கனிசமான அளவு குறைத்திட முடியும்’’ என்கிறார் அவர்.

‘நீண்டகால திட்டம் வகுத்து செயல்பட வேண்டும்’!

மருத்துவர் சென்பாலன் கூறும்போது, ‘’உலகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கென்றே செய்து வைத்தாற்போல ஒரு தேசம் உண்டென்றால் அது இந்தியா தான். வைரஸ் பரவலுக்கு தேவையான மக்கள் தொகை அடர்த்தியும், சமூக இடைவெளியை நடைமுறை வாழ்க்கையில் கடைபிடிக்க இயலாத வறிய மக்களும், அதிகபட்ச மக்கள் தொகையும், ஒரே மாதிரி நிர்வகிக்க சிரமத்தை ஏற்படுத்தும் பெரிய நிலப்பரப்பும் கொரோனா வைரஸின் சொர்க்கபுரியாக இந்தியாவை மாற்றியுள்ளன.

நான்கு லட்சம் உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் எனும் எண்ணிக்கையைப் பார்க்கும் போது பாலில் கலந்த நஞ்சைப்போல கொரோனா வைரஸ் பிரித்தெடுக்க முடியாத வண்ணம் நம் மக்களிடையே கலந்துவிட்டதாகத்தான் தோன்றுகிறது.

தற்போது ‘காண்டாக்ட் டிரேசிங்’ முறையில் நோயைக் கட்டுப்படுத்த முனைந்தால் சென்னை போன்ற நகரங்களில் மொத்த மக்களையுமே தனிமைப்படுத்த வேண்டிய சூழல். அதேநேரம் ஊரடங்கையும் எந்த அளவு முடியுமோ அந்த அளவு பயன்படுத்திவிட்டோம். கொரோனா தடுப்புப் பணிகளில் உள்ள சுகாதாரத்துறை, காவல்துறை, நிர்வாகத்துறையின் மனித வளங்களை தேவைக்கு அதிகமாகவே மூன்று மாதங்களில் உறிஞ்சிவிட்டோம். இத்தனை முயற்சிகளையும் மீறி கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

ஆரம்ப காலங்களில் பரிசோதனைகளில் ஏற்பட்ட தொய்வு, காண்டாக்ட் டிரேசிங் முறைகளின் குறைபாடுகள், பயனளிக்காத ஊரடங்கு, தொழிலாளர்களின் இடப்பெயர்வு போன்ற காரணங்களால் நோயை இந்தியாவில் கட்டுப்படுத்த இயலவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் நாம் தோல்வியடைந்து விட்டோம் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இனி வாய்ப்புகளையும் வளங்களையும் கவனமாகப் பயன்படுத்துவதன் மூலமே கொரோனா எதிர்ப்புப் போரில் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியும். எனவே நோயைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதில் வளங்களின் பெரும் பகுதியை செலவளிக்காமல் இறப்புகளைக் குறைப்பதற்குப் பயன்படுத்த வேண்டும்.

கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற தடுப்பு முறைகளில் மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு, நோயின் தீவிரத்தை உணரும் வண்ணம் உண்மையான தகவல்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். மூன்று நாட்களில் கொரோனா ஓடிவிடும் போன்ற தவறான நம்பிக்கைகள் மக்களிடம் அலட்சியத்தன்மையைத் தான் உண்டாக்கும். தடுப்புமுறைகளில் மக்களின் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம் அரசின் கவனம் முழுவதையும் சிகிச்சையின் பக்கம் செலுத்தலாம்.

அதிக பரிசோதனைகள் செய்தல், எந்த இடத்தில் இருந்தாலும் உடனடி ஆம்புலன்ஸ் வசதி கிடைக்கச் செய்தல், மருத்துவமனைகளில் படுக்கைகளை உறுதி செய்தல், ஆக்ஸிஜன் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையின்றி கிடைக்குமாறு செய்தல், போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்குமாறு செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் இறப்புகளைப் பெருமளவு குறைக்கலாம். இறப்பு அதிகம் நிகழும் பிரிவினருக்கு (சர்க்கரை, இரத்த அழுத்த நோயாளிகள், வயதானோர் போன்றோருக்கு) சிகிச்சைகளில் சிறப்பு கவனம் அளிக்கப்பட வேண்டும்.

புதிய சிகிச்சை முறைகள், ஆராய்ச்சிகளில் உள்ள மருந்துகளை தகுந்த வழிகாட்டுதலின்படி பயன்படுத்தலாம். தடுப்பூசி ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கலாம். மூன்று மாதங்களாக கொரொனா தவிர மற்ற நோய்களுக்கு சிகிச்சை கிடைப்பதில் தடங்கல்கள் உள்ளன. படிப்படியாக அவற்றையும் களைய முயற்சிக்கவேண்டும். கொரொனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் இறப்புகளைக் குறைக்க ஒரு நீண்டகாலத் திட்டம் வகுத்து செயல்படுவதே சிறந்த உத்தியாக இருக்கும்’’ என்கிறார் அவர்.

‘சித்த மருந்து ஆராய்ச்சிகளை அதிகப்படுத்த வேண்டும்!

அரசு மருத்துவர் ராதா கூறும்போது, ‘’கொரோனா கட்டுப்படுத்தவை தென்கொரியா என்ன செய்தது என்று பார்க்கலாம். இத்தாலிக்கு அடுத்து தென்கொரியாவில் இந்த மாதிரி கொரோனா எண்ணிக்கை அதிகமாகும் போது யார் யாருக்கு எல்லாம் அதிகமாகிறது என்று வயது வாரியாக பிரிக்கும் போது இளம் வயதினருக்கு அதிக அளவில் தாக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இவர்களுக்கு எந்த பிரச்சினையும் செய்யாமல் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு இவர்கள் மூலம் பரவுவது தெரிய வந்தது. இவர்கள் இரண்டு பேரையும் பிரித்து தனியாக வைத்தனர். இந்த மாதிரி அதிகம் நோய் பரப்பும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களது நடமாட்டம் கட்டுப்படுத்துவதன் மூலம் நோய் பரப்பும் விகிதம் குறைக்கப்பட்டது.

இந்த கருத்தின் அடிப்படையில் அகமதாபாத்தில் நடைபெற்ற பரிசோதனைகளில் ஒரு சிலருக்கு மட்டும் உடலில் அதிக அளவில் இந்த வைரஸ் கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டது. Virus Load Measurement பரிசோதனையின் கண்டறியலாம்.

பரிசோதனை செய்த மொத்த மக்களில் 7 முதல் 8 சதவீத மக்களுக்கு இந்த மாதிரி அதிக அளவு எண்ணிக்கையில் இந்த கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களை ‘Super Spreader’ என்று அறியப்பட்டார்கள். இந்த மாதிரி ஆட்களை இனம் கண்டு தனிமைப்படுத்துவதின் மூலம் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது ஒருவருக்கு கொரானா இருக்கிறதா இல்லையா என்பது உடல் வெப்பநிலை அளப்பதன் மூலம் மட்டுமே பரிசோதிக்கப்படுகிறது. இந்த மாதிரி ஹாட்ஸ்பாட் இடங்களில் மாஸ் ஸ்கீரினிங் எனப்படும் மொத்த சோதனைக்கு ரேபிட் கிட் பரிசோதனைகள் ஐ.சி.எம்.ஆர். அமைப்பால் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இந்த ரேபிட் கிட் பரிசோதனைகளை மீண்டும் துவங்க வேண்டும். பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே நேரத்தில் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி வைத்தியம் செய்வதன் மூலம் மேலும் நோய் பரவாமல் கட்டுப்படுத்த இயலும்.

சித்த மருந்துகள் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகப்படுத்த வேண்டும். வைரஸ் பாதிப்பு குறைந்த அளவில் உள்ள நோயாளிகளை குணப்படுத்தும் சித்த மருந்துகள் மீது விரைந்து அறிவியல் ரீதியாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’’ என்கிறார் அவர்.

‘வீட்டிலேயே சிகிச்சை அளிக்கும் நடைமுறையை கொண்டு வரலாம்!

மருத்துவ எழுத்தாளர் ஷாஜகான் கூறும்போது, ‘’இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் இப்போது ஏறிக்கொண்டே போகிறது. எனவே, மருத்துவ கவனிப்பு முறையில் இப்போது மாற்றம் தேவை. கோவிட் பரிசோதனைகள், பாசிடிவ் வந்தால் எங்கிருந்து தொற்று ஏற்பட்டது என்று சோர்ஸைக் கண்டறிதல் இது போன்ற வேலைகளைச் செய்கிற காலம் கடந்து விட்டது. இனி இன்னும் விரைவாகப் பரவும். எனவே, மற்ற நாடுகளில் என்ன செய்கிறார்களோ, அதையே நாமும் செய்ய வேண்டும்.

அதாவது, தொற்று ஏற்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும். மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற தீவிர அறிகுறிகள் வரும்போது மட்டுமே மருத்துவமனைக்கு வர வேண்டும்.

அரசு செய்ய வேண்டியது, இறப்பு விகிதம் அதிகரிக்காமல் இருக்க மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையையும் ஆக்சிஜன் உள்ளிட்ட உயிர்காப்பு சாதனங்களையும் அதிகரிப்பதுதான். ஊரடங்கு காலத்தில் அரசு செய்திருக்க வேண்டியதும் அதுதான். ஆனால் இந்த அரசோ, டிரையல்-அண்ட்-எர்ரர் முறையிலும், வந்தபின் நடவடிக்கை என்ற போக்கிலும்தான் இதுவரை செயல்பட்டு வந்திருக்கிறது.

மிக அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்து வந்த நாடுகளில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. இங்கே அதிகரித்து வருகிறது. தினமும் வருகிற எண்ணிக்கைகள், சமூகப் பரவல் துவங்கி பல நாட்களாகி விட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஏன் இதைப்பற்றி அரசு பேசவே இல்லை என்பதன் காரணம் புரியவில்லை. கிடக்கட்டும்.

‘டெல்லியில் கோவிட் பாசிடிவ் என கண்டறியப்பட்டவர்கள் 5 நாள் கண்டிப்பாக மருத்துவமனை குவாரன்டீனில் இருந்தாக வேண்டும்’ என்று அம்மாநில லெப்டினன்ட் கவர்னர் தன்னிச்சையாக உத்தரவு போட்டார். அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது அரசுத் தரப்பிலிருந்து. எதிர்ப்பு நியாயம்தான்.

தினமும் சுமார் 3,000 புதிய கேஸ்கள் வருகின்றன. எல்லாரையும் மருத்துவமனையில் வைக்க வேண்டும் என்றால் நிரம்பி வழியும். ரயில் பெட்டிகளை மருத்துவமனைகளாக மாற்றிய கதையெல்லாம் பயனில்லை. அதில் வெயில் தாங்க முடியவில்லை. தற்காலிகக் கூடாரங்களில் பல ஆயிரம் படுக்கைகள் ஏற்பாடு செய்தாலும், அங்கேயும் வெயில் கொடுமை.

இதன் விளைவு சந்தேகம் உள்ளவர்களும் ஆஸ்பத்திரிக்குப் போக பயந்து பரிசோதனைக்கு வராமல் இருந்து விடுவார்கள். எனவே, யார் யாருக்கு நோயின் தொல்லைகள் குறைவாக இருக்கிறதோ, யாருக்கு வீட்டில் தனியாக இருக்கும் வசதி இருக்கிறதோ அவர்கள் வீட்டிலேயே இருக்கட்டும். அவர்களை முறையாக கண்காணித்தால் போதும். தீவிர சிக்கல் வந்தால் மட்டும் அவர்கள் மருத்துவமனைக்கு வரட்டும் என்பது அரசுத்தரப்பின் முடிவு. இதுதான் ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறது.

என்னது… ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிறதா என்று வியப்படைய வேண்டாம். எங்கள் கட்டிடத்தில் (டெல்லியில்) தமிழக இளைஞர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, தனிமையில் இருக்கிறார். அவருக்காக எங்கள் கட்டிடமோ எங்கள் பகுதியோ அடைக்கப்படவோ, கன்டெயின்மென்ட் செய்யப்படவோ இல்லை. இது நடந்து பத்து நாட்கள் ஆகின்றன. இதுபோல கோவிட் நோயின் சிறிய அறிகுறிகளுடன் தில்லியில் சுமார் 10 ஆயிரம் பேர் வீட்டிலேயே தனிமையில் / சிகிச்சையில் இருக்கிறார்கள்.

நாடு முழுவதற்கும் இந்த நடைமுறைதான் சாத்தியம். தனித்திருக்க வசதி / வீடு இல்லாதவர்கள் மட்டும்தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால், மருத்துவமனைகளின் மீது பளு கூடிக்கொண்டே போகிறது. மருத்துவப் பணியாளர்கள் எண்ணிக்கை கூடவில்லை. மருத்துவப் பணியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதர நோய்களுக்கும் மருத்துவமனைகளின் சேவை வாய்ப்புகள் குறைந்து கொண்டே போகின்றன. இத்தனை நாட்களும் எப்படியோ தாக்குப்பிடித்த இதர நோயாளிகளுக்கு, மருத்துவ சிகிச்சை சரிவரக் கிடைக்காமல் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகி வருகின்றன.
இனியும் ஊரடங்கை நீட்டிக்கொண்டே போவதில் அர்த்தமில்லை.

வேலை / தொழில் இழந்தவர்களுக்கு வாழ்வாதாரத்தை மறுப்பது முறையில்லை. ஒரு வீட்டில் இருப்பவருக்கு கொரோனா வந்தால், தெருவையே அடைத்து வைக்கும் வேலைகள் தேவையில்லை. இதுவரையில் கொரோனா குறித்த அறிவுரைகள் விதிகள் எல்லாம் மேலிருந்தே திணிக்கப்பட்டன. விதிகளைப் பொருட்படுத்தாமல் மக்கள் சுற்றிக் கொண்டிருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

கலெக்டரும் காவல்துறையும் மட்டுமே எல்லாவற்றையும் சமாளித்துவிட முடியாது. “சென்னையிலிருந்து வந்தவர்களை ஊருக்குள் அனுமதிக்காதீர்கள். அப்படி அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது கலெக்டர் உத்தரவு” என்று தண்டோரா போடுகிறார்கிறார்கள். அனுமதிக்காதீர்கள் என்றால் அத்தனை பேரையும் அள்ளிக்கொண்டு போய் அடைத்து வைக்க மருத்துவமனைகள் இருக்கிறதா? இதென்ன அபத்தமான உத்தரவு? தொற்றே இல்லாமல் ஊருக்கு வந்த பெண்ணை உள்ளே வர அனுமதிக்காமல், அவர் கோயில் திண்ணையில் படுத்துக் கிடக்க, மருத்துவமனையினர் வந்து அவரை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்று தங்க வைத்த கதைகள் உண்டு.

உள்ளூர் அமைப்புகளுக்குப் பயிற்றுவித்து அறிகுறிகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி, சந்தேகம் இருப்பவர்கள் பரிசோதனைக்கு வாருங்கள் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

அறிகுறிகளே இல்லாமல் நோய்த் தொற்றுடன் இருக்கக்கூடுமே, அவர்களை அப்படியே விட்டுவிட முடியுமா என்று கேட்டால், ஆமாம். அறிகுறிகள் இல்லாமலும் நோய்த்தொற்றுடன் இருக்கலாம்தான். ஆனால் அப்படிப்பட்டவர்கள் சென்னையில் மட்டும்தான் இருந்தாக வேண்டும் என்பதில்லை.

ஒவ்வொரு ஊரையும் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒவ்வொரு மாநிலத்தையும் வேலி போட்டுத் தடுத்துவிட முடியாது. மக்கள் புலம்பெயர்வு நிகழத்தான் செய்யும்; நோய்த்தொற்றுடனும் அவர்கள் வரத்தான் செய்வார்கள்.

ராண்ட்ம் டெஸ்டிங், டெஸ்டிங் அதிகப்படுத்தல் இதெல்லாம் இனி பயன்படாது. செலவுதான் அதிகமாகும். சந்தேகம் இருப்பவர்களை டெஸ்ட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துவதே அவசியம்.

ஒரு வாரத்துக்கு முன்பு இறப்பு விகிதம் 6.8 ஆக – (Death Per Million) இருந்தது. இன்று 10. இது குறைவுதான் என்பதில் ஐயில்லை. ஆனால் ஒரே வாரத்தில் மூன்று புள்ளிகள் ஏறியிருக்கிறது. இது இன்னும் ஏறும்.
ஓரளவுக்குள் தனிமைப்படுத்தி வைப்பது மட்டுமே சாத்தியம். மருத்துவ சேவைக் கட்டமைப்பை பலப்படுத்தி வைத்துக்கொள்வதே அவசியம். மக்கள் தரப்பில் கூடியவரையில் சுய பாதுகாப்பை உறுதி செய்து கொள்வது அவசியம்’’ என்கிறார் அவர்.

படங்கள்: ஜாக்சன் ஹெர்பி

இதையும் படிக்க: சொல்ல மறந்த கதை! | கொரோனா மருத்துவர்கள் எதிர்கொள்ளும், சவால்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here