குற்றாலத்தில் குளியல் முடித்த சுற்றுலா பயணிகள் ஊருக்கு புறப்படும் முன்பு செல்லும் இடம் பெரும்பாலும் பழக்கடையாகத்தான் இருக்கும்.
குற்றாலத்தின் கடை வீதிகளில் வண்ண வண்ண நிறங்களில் துரியன், மங்குஸ்தான், ரம்புட்டான், முட்டை பழம், ஸ்டார் புரூட், பன்னீர் கொய்யா, நாவல், சப்போட்டா, பேரிக்காய், வால்பேரி, பப்பாளி, பேரீச்சை, திராட்சை, ஆப்பிள், பிளம்ஸ், மா, பலா, வாழை, கொய்யா, ஆரஞ்ச், மாதுளை என வகைவகையான பழங்கள் விற்பனைக்கு வைக்கப்படும். இதில் சுற்றுலா பயணிகளிடம் மங்குஸ்தான், ரம்புட்டான் பழங்களுக்கு அதிக வரவேற்பு இருக்கும்.
பொதுவாக குற்றாலம் தெற்கு மலை எஸ்டேட், ஊட்டி மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் விளையும் இந்த மலைத்தோட்ட பழங்கள் ஜூன் துவக்கத்தில் விற்பனைக்காக குற்றாலம் வந்தடையும். இதை சில்லறை வியாபாரிகள் மொத்த விலைக்குப் பழங்களை வாங்கிச் செல்வார்கள். வாரத்திற்கு சுமார் நூறு டன் பழங்கள் விற்பனையாவது வழக்கம்.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் எதிரொலியால் குற்றாலத்தில் சீசன் துவங்கியும் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் சுற்றுலாப்பயணிகள் வரத்து அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. குற்றாலத்திற்கு சென்றடைய வேண்டிய மலைத்தோட்டப் பழங்கள், விற்பனை வாய்ப்புகள் இல்லாததால் அறுவடை செய்யப்படாமல், மரங்களிலேயே அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் குற்றாலத்திற்கு அதிகளவில் பழங்களை சப்ளை செய்யும் குற்றாலம் தெற்கு மலை எஸ்டேட், கண்ணுப்புளிமெட்டு, ஊட்டி மற்றும் கேரளாவைச் சேர்ந்த மலைத்தோட்ட விவசாயிகள் பெரு நஷ்டத்தை சந்தித்துள்ளனர். ஊரடங்கு காரணமாக, பிற மாவட்டங்களுக்கு பழங்கள் செல்வது தடைபட்டுள்ளது; உள்ளூர் சந்தைகளிலும், தேவை குறைவாகவே உள்ளது. இதனால், அறுவடைக்கு தயராக இருந்தும், பழங்களை அப்படியே மரங்களில் விட்டு, அவை அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என கவலை தெரிவிக்கின்றனர் அவர்கள்.