தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கீழப்பாவூர் பகுதியில் சுமார் 450 ஏக்கர் நிலத்தில் பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் பயிரிடப்பட்ட வெங்காயத்தில் 50 சதவீதத்திற்கு மேல் முளைக்காமல் வீணாகப் போனதால் மிகப்பெரிய இழப்பை விவசாயிகள் சந்தித்தனர்.
இந்நிலையில் தற்போது விளைந்த வெங்காயத்தினை கிலோவுக்கு ரூ. 6 முதல் 7 வரை மட்டுமே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் விலையானது நிகழாண்டு வீழ்ச்சியடைந்துள்ளது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு ஏக்கர் நிலத்தில் வெங்காயம் பயிரிட விதை வாங்கி, வரப்பு போடுதல், உரம், மருந்து அடித்தல், தண்ணீர் பாய்ச்சுதல், பறி கூலி உள்ளிட்டவைகளுக்கு சுமார் ரூ.65 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவாகியுள்ள நிலையில், விலை வீழ்ச்சி காரணமாக ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது என்றும், இதனால் அரசு வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்கின்றனர் விவசாயிகள்.
கடந்த ஆண்டு டிசம்பரில் வெங்காயம் தட்டுப்பாடு ஏற்பட்டு, எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து பாவூர்சத்திரம், கீழப்பாவூர் பகுதிக்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு ரூ.150 முதல் ரூ.200 வரை விற்பனையான நிலையில், உள்ளுரில் விளைவித்த வெங்காயத்திற்கு விலை இன்றி இருப்பது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.