தென்காசியில் சுகாதார துணை இயக்குநர் அலுவலக ஊழியர்கள் 12 பேருக்கு கரோனா
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 29 ஆயிரத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்படுள்ளன.
மாவட்டத்தில் நேற்று வரை 859 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் 509 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த சில நாட்களாக கரானா தொற்று அதிகரித்து வருகிறது.
மருத்துவர்கள், காவல்துறையினர், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர் என முன்களப் பணியாளர்கள் பலரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மேலும் 11 ஊழியர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டது.
இதனால், ஒரு பள்ளியில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் அலுவலகம் தற்காலிகமாக செயல்படுகிறது.
இதேபோல், துணை வட்டாட்சியர் ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டதால் கடையநல்லூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் கிருமிநாசினி தெளித்து மூடப்பட்டது.