அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பியது

2026

அடவி நயினார் அணை மீண்டும் நிரம்பியது

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் அடவி நயினார் அணை மீண்டும் நிரம்பியது. இதனால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை குறைவாகவே பெய்தது. ஆகஸ்ட் மாதம் மழை தீவிரம் அடைந்தது. அணைகள், குளங்களுக்கு நீர் வரத்து ஏற்பட்டது. மாவட்டத்தில் உள்ள 5 அணைகளும் வேகமாக நிரம்பின.

ஒரு மாதத்துக்குப் பின்னர், மீண்டும் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக அடவிநயினார் அணையில் 40 மி.மீ மழை பதிவானது. கருப்பாநதி அணையில் 18 மி.மீ., குண்டாறு அணையில் 9 மி.மீ., ராமநதி அணையில் 5 மி.மீ., செங்கோட்டையில் 2 மி.மீ மழை பதிவானது.

நீர்மட்டம் உயர்வு

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 72.60 அடியாக இருந்தது.

ராமநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 78 அடியாக இருந்தது. கருப்பாநதி அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 67.14 அடியாக இருந்தது. குண்டாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது.

அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 129.50 அடியாக இருந்தது. நேற்று முழு கொள்ளளவான 132.22 அடியை எட்டியது. இதனால், அணைக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டது. அடவிநயினார் அணை நிரம்பியதால் அச்சன்புதூர் காவல் நிலையம் மற்றும் உள்ளாட்சித்துறை மூலம் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது விவசாயிகளை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் சாகுபடி பணிக்கு விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அருவிகளில் குளிக்க தடை நீடிக்கிறது. இதனால் குற்றாலத்துக்கு வந்த மக்கள் அருவிகளை தூரத்தில் நின்று பார்த்து, குளிக்க முடியாத ஏக்கத்துடன் சென்றனர்.

பாபநாசத்தில் 8 மி.மீ. மழை

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

பிற அணைப்பகுதிகள் மற்றும் இடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

சேர்வலாறு- 4, மணிமுத்தாறு- 1, கொடுமுடியாறு-5, அம்பாசமுத்திரம்- 1, சேரன்மகாதேவி- 1, நாங்குநேரி- 5, களக்காடு- 3.

பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலையில் 82.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,454 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,404 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 65.70 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 433 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 680 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 33.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 75 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.
நம்பியாறு அணை நீர்மட்டம் 8.85 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை நீர்மட்டம் 10.25 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 88.45 அடியாகவும் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here