பழைய குற்றாலத்தில் திடீர் வெள்ளத்தில் சிக்கி 17 வயது சிறுவன் பலி.. அரை கி.மீ தூரத்தில் மீட்கப்பட்ட சடலம்!
தென்காசி: பழைய குற்றால அருவியில் இன்று ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அரை கிலோ மீட்டர் தொலைவில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதுமே கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கோடை விடுமுறையை ஒட்டி, பலரும் குளிர் பிரதேசங்களை நோக்கிப் படையெடுத்து வந்தனர். தென்காசி மாவட்டத்திலும் வெயில் வாட்டி வதைத்த போதும், குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தந்துகொண்டிருந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், குற்றாலத்தில் இதமான சூழல் நிலவியது. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் சீராகக் கொட்டியது. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்திற்கு அதிகளவில் வருகை தந்தனர். தமிழகத்தில் மே 20ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தென்காசி மாவட்டத்திற்கு கொடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பழைய குற்றால அருவியில் இன்று திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளத்தால் அருவியில் திடீரென நீர்வரத்து அதிகமாக இருந்ததால், சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓடினர்.
நெல்லையை சேர்ந்த அஸ்வின் (17) தனது குடும்பத்தினருடன் பழைய குற்றால அருவியில் குளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளத்தில் சிக்கி சிறுவன் மாயமாகியுள்ளார். காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்துள்ளனர். குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் வெள்ளத்தில் சிக்கிய 17 வயது சிறுவன் அஸ்வின் மாயமான நிலையில், அவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில், அருவியில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் சிறுவன் அஸ்வினின் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்