கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் மலையடிவார பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை கர்ப்பமாக இருந்ததும், அதன் வயிற்றில் 10 மாத குட்டி யானை இருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. யானை ஒரு வாரமாக நோயுற்ற நிலையில் சுற்றித் திரிந்தது குறித்து தகவல் தெரிந்த நிலையிலும், வனத்துறையினர் கண்டு கொள்ளாததே யானையின் உயிரிழப்புக்குக் காரணம் என சூழலியாளர்கள் குற்றச்சாட்டு.
நெல்லை மாவட்டம் களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அம்பாசமுத்திரம் வனச்சரக பகுதி கல்லிடைக்குறிச்சி அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறி சில நாட்களாக உடல் நலிவுற்ற நிலையில் சுமார் 3 வயது பெண் யானை ஒன்று பொட்டல் பகுதியில் சுற்றி திரிந்து வந்தது. இதுகுறித்து பொது மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். மேலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவத் தொடங்கின. ஆனால் வனத்துறையினர் நலிவுற்ற யானையை மீட்டு அதற்கு சிகிச்சை அளிக்க முன்வரவில்லை.
இந்நிலையில் இன்று காலை அந்த மூன்று வயது பெண் யானை ஒரு தனியார் தோட்டத்தில் இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் தகவல் அறிந்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தாலும் இறந்த யானையை மீட்பதற்கு போதிய உபகரணம் இல்லாததால் சுமார் இரண்டு மணிநேர தாமதத்திற்கு பின் ஜே.சி.பி எந்திரம் வரவழைக்கப்பட்டு பின்னர் யானை மீட்கப்பட்டு மணிமுத்தாறு பகுதிக்கு கொண்டு சென்று அங்கு யானையை கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தனர்.
பின்னர் யானை பாதுகாப்பாக மணிமுத்தாறில் இருந்து மாஞ்சோலை செல்லும் வழியில் புதைக்கப்பட்டது. மேலும் யானை இறப்பு குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . யானை ஒருவாரமாக நோயுற்ற நிலையில் சுற்றித்திரிந்தும் தகவல் தெரிந்த நிலையில் வனத்துறை கண்டு கொள்ளாததே யானையின் சாவுக்கு காரணம் என கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண் யானையை பிரேத பரிசோதனை யில் அதன் பல் மீது ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக உணவு உண்ண முடியாமல் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. மேலும் உயிரிழந்த பெண் யானை வயிற்றில் 10மாத ஆண் யானை குட்டி ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது/