
அதிகளவில் வாகனங்கள் அணிவகுப்பு சிவகிரி செக்போஸ்டில் ஊழியர்கள் திணறல்
சிவகிரி செக்போஸ்ட் வழியாக அதிகளவில் வாகனங்கள் வந்ததால் ஊழியர்கள் திணறினர்.
தென்காசி மாவட்டம் சிவகிரியில் செக்போஸ்ட் அமைக்கப் பட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு வரும் வாகனங்கள் விபரம் செக்போஸ்ட் பதிவேட்டில் பதிவு செய்யப் படுகிறது.
வெளியிடங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிவகிரி செக்போஸ்ட்டில் சப்-இன்ஸ்பெக்டர், 4 காவலர்கள், வருவாய் ஆய்வாளர் , கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (24ம் தேதி) முகூர்த்த நாள் என்பதால் செக்போஸ்ட் வழியே வரும் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. ஆனால் செக்போஸ்ட் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வில்லை.
இதனால் செக்போஸ்ட் ஊழியர்கள் வாகனங்களின் பதிவெண்களை பதிவு செய்து, அவர்களிடம் விபரம் கேட்டு பதிவேடுகளில் குறிப்பிடுவதற்கு சிறிது நேரம் ஆனதால் எண்ணற்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் அவ்வழியே ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்கு கூட மிகவும் சிரமப்பட்டது.
கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு தனி பதிவேடும், மற்ற இடங்களில் வருபவர்களுக்கு தனி பதிவேடும் பராமரிக்கப்பட்டு பதிவு செய்யப் படுகிறது.
இதனால் கூடுதல் நேரம் ஆகிறது. ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாததால் முகூர்த்த நாட்களில் செக்போஸ்ட்டில் பணியாற்றும் ஊழியர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர்க்க முகூர்த்த நாட்களில் சிவகிரி செக்போஸ்டில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும், வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை தவிர்க்கவும் உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.