பண்பொழி திருமலைக் குமாரசாமியின் கதை

பண்பொழி திருமலைக் குமாரசாமியின் கதை

நெடுவயல் பெரிய பண்ணை முத்துச்சாமித் தேவர் என்றால் தென்காசி சுற்றுவட்டாரத்தில் பிரசித்தம். 230 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.

முத்துச்சாமித் தேவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நிலபுலன்கள், வீடுவாசல்கள், சொத்துக்கள் ஏராளம். அவர்களிடம் வேலைபார்த்த சங்கிலி மாடன்தான், குழந்தை சிவகாமியைத் தூக்கி வளர்த்தார். கன்று காலிகளையும், வயல் வரப்புகளையும், கருமேகக் கூட்டங்களையும் சங்கிலி மாடனின் தோளிலிருந்தபடி கண்டு குதூகலித்தாள் சிவகாமி.

அதே ஊரைச் சேர்ந்த கங்கமுத்துத் தேவருக்கு வாழ்க்கைப்பட்டாள் சிவகாமி. சிவகாமியின் மனம் பராபரமாக நாட்டம் கொண்டது. குழந்தையின்மைக்காக வாலர் மஸ்தானைப் போய்ப் பார்த்தார்.

வாலர் மஸ்தான் கண்ணை இடுக்கிக்கொண்டு அத்தம்பதியைப் பார்த்துச் சிரித்தார். அதன் பின்னர், வாலர் மஸ்தானுக்குப் பணிவிடை செய்யத் தொடங்கினார் சிவகாமி அம்மாள். ஒருநாள் சிவகாமியைப் பார்த்து, ‘குழந்தை உனக்குக் கிடைக்கப் போகிறது. கிடைத்துவிட்டது என்றே வைத்துக்கொள்ளேன்’ என்று வாலர் மஸ்தான் சொன்னார்.

‘எங்கே? எங்கே?’ என்று பரபரப்புடன் கேட்டாள் சிவகாமி.
‘திருமலைக்குப் போ! சங்கிலி மாடன் துணைக்கு வரட்டும்!’
சங்கிலி மாடன் துணைக்கு வரப் புறப்பட்டாள் சிவகாமி. காடு கழனிகளைக் காட்டியவன் கடவுளையும் காட்டட்டுமே. மிகக் கடினமான மலைப்பாதை. புதர்களும், முள் புதர்களும் மண்டிய பாழடைந்த கோயில். பந்தள மகாராசா கட்டியது.

மன்னர் குடும்பம் நொடித்ததால், குமரன் பாலமுருகனாய் நின்றான். அழுக்கும் புழுதியும் அப்பிய கோலத்தில் ஏழையாய் நின்றான். குமரன் முகத்தில் மாறாத குழந்தைச் சிரிப்பு.
பார்த்த உடனேயே சிவகாமிக்குப் பதறிவிட்டது. ‘மகனே உனக்கா இந்த நிலை? மகன்தான், நீ என் மகனேதான்!’. வாரியணைத்துக் கண்ணீர் உகுத்தாள் சிவகாமி. வாலர் மஸ்தான் வந்த வேலை முடிந்தது. வானம் நோக்கி ‘ஏ அல்லா’ என்று தொழுதுவிட்டு கிராமத்தை விட்டு நீங்கினார். அதற்குப் பிறகு அவரைக் கண்டாரில்லை.

குமரனைக் குழந்தையாய் ஏற்றுக்கொண்டால் ஆச்சா? ‘பந்தள மகாராசா எழுதிவைத்த சொத்துக்கள் நில புலன்கள் ஆகியவற்றை மீட்டாக வேண்டுமே. என் குழந்தை குமரன் குடியிருக்க ஏற்றதொரு கோவில் வேண்டுமே.’ திருமலையின் அடிவாரத்தில் வண்டாடும் பொட்டல் எனுமிடத்தில் சிவகாமி தங்கிவிட்டாள். சிவகாமி, சிவகாமி பரதேசி ஆனார்.

கங்கமுத்துத் தேவருக்குப் புரிந்து போயிற்று. சிவகாமியின் உள்ளிருந்து ஆட்டுவிப்பது வெறும் குழந்தை ஆசை இல்லை; வேல் முருகனின் விளையாட்டு இது. காவி உடுத்தி நின்ற சிவகாமிக்கு முன்னால் பணிவேண்டி பணிந்து நின்றான் கணவன் கங்கமுத்துத் தேவன். அவ்வளவுதான். உலகப் பற்றுகள் ஒழிந்தன. சிவகாமி, சிவகாமி பரதேசியார் ஆனார்.

கோயில் நிலபுலன்களை அபகரித்தோரிடமிருந்து குமரனின் சொத்துக்களை மீட்பது என்பதே அல்லும் பகலும் அவர் நினைவாயிற்று. சிவகாமி அம்மையாருக்கு கங்கமுத்துத் தேவர், குடும்ப சொத்துக்களை விற்று கொண்டு வந்தார். விசாலமான வசந்த மண்டபம் எழுந்தது.

குழந்தை குமரன் வீற்றிருக்கும் திருமலையில் இருந்து ஒரு கல்லும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டார் சிவகாமி பரதேசி. சிவகாமியின் கட்டளையை ஏற்று ஊர் மக்கள் பக்கத்து மலையிலிருந்து கற்களைக் கொண்டுவந்தனர். மனித முயற்சியால் சாத்தியமில்லாததை அகத்தின் பேராற்றலைக் கொண்டு சாதித்தார்.

குறுநில மன்னர்கள் உதவி

சிவகாமி பரதேசியார் முயற்சிக்கு சொக்கம்பட்டி, வீரகேரளம்புதூர் முதலான இடங்களின் குறுநில மன்னர்கள், செல்வந்தர்கள், நிலக்கிழார்களின் உதவி தாராளமாக கிடைத்தது. பண்பொழி கிராமத்தில் குமாரு பரதேசியும், அச்சன்புதூர் பழனி மூப்பனாரும் திருப்பணியில் கூடவே நின்றார்கள். வண்டாடும் பொட்டலில் அன்னதானக் கூடம் எழுந்தது. ‘பால்சோறு இருக்கு. பசிக்கிறவங்க வாங்க, வந்து சாப்பிட்டுப் போங்க’ என்று அழைப்பது சிவகாமி பரதேசியாரின் வழக்கம். சிவகாமி பரதேசியாரின் மறக்குல வீரமும் துணிவும் பக்தியின் மடைதிறந்து பாய்ந்தது ஆச்சரியமே.

வழக்கிலே வெற்றி

புளியறை கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான 160 ஏக்கர் நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க, திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். சொத்துக்கு ஆதாரமாக மண்ணில் புதைந்திருந்த செப்புப் பட்டயம் கிடைத்தது.

சாமர்த்தியம், சமயோஜிதம், சாதனை ஒன்றுதிரண்ட உருவம் சிவகாமி பரதேசியார். திருவனந்தபுரம் நீதிமன்றத் திண்ணையில் உட்கார்ந்து மரச்சீனிக் கிழங்கையும் சுட்ட நேந்திரங்காயும் உண்டு, சீவிக்கும் சிவகாமி பரதேசியாரை வெள்ளைக்கார நீதிபதி வியப்புடன் பார்த்துச் செல்வார். வியப்பே தீர்ப்பானது. பட்டயத்தில் உள்ளபடி நிலங்கள் யாவும் கோயிலுக்கே சொந்தம் என்று தீர்ப்பை எழுதினார்.

மீட்ட நிலங்களில் உழவு மாடு கொண்டு சிவகாமி பரதேசியாரே காளை ஏர்பூட்டி உழுது செல்ல அவரைத் தொடர்ந்து கங்குத் தேவனும், சங்கிலி மாடனும் ஏர்களைச் செலுத்தினர். ஊர் மக்களும் தத்தமது ஏர் கலப்பையுடன் மாடு பூட்டி நிலங்களை உழுவதற்கு தலைப்பட்டனர்.

வறண்ட பூமியில் வயல் செழித்தது. கோவில் எழுந்தது. மண்டபம் நின்றது. கடமை முடிந்தது. இடுப்பில் ஏற்றிய பாலமுருகனை சிவகாமி பரதேசியார் இறக்கி வைத்துவிட்டார்.
சிவகாமி அம்மையார் கட்டிவைத்த எந்த கற்றூணிலும் மண்டபத்திலும், தன் பெயர் பொறிக்கப்படாது பார்த்துக்கொண்டார்.

வண்டாடும் பொட்டலில் முன்னரே தனக்காக கட்டிக்கொண்ட சமாதியில், குறித்த நாளில், நேரத்தில் இறங்கி சீவன் முக்தர் ஆனார் சிவகாமி பரதேசியார்.

நன்றி : தி இந்து தமிழ் திசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here