குற்றாலத்தில் இன்னும் சில நாட்களே சீசன் எஞ்சியிருக்கும் என்பதால், அருவிகளில் குளிப்பதற்கான தடையை நீக்கி அனுமதிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும். தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை சாரல் சீஸன் களைகட்டும். இக்காலத்தில் அரசு சார்பில் சாரல் விழா நடத்தப்படும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் தொடங்கப்பட்டது. தனி மாவட்டமான பின்னர் முதல் சாரல் விழா இந்த ஆண்டில் நடைபெறும் என , சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் ஆவலுடன் இருந்தனர்.
ஆனால், இந்த ஆண்டு சாரல் சீஸனில் குற்றாலம் அருவிகளில் குளிக்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டபோது, சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டன. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து ஏற்பட்டது. அதற்கு முன்பும் கோடை மழையால் அருவிகளில் அவ்வப்போது நீர் வரத்து ஏற்பட்டது. இருப்பினும் ஊரடங்கு உத்தரவு காரணமாக குற்றாலம் அருவிகளில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, கடந்த 1-ம் தேதி முதல் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
இருப்பினும் குற்றாலத்தில் தொடர்ந்து தடை நீடிப்பதால், களையிழந்து காணப்படுகிறது. இதனால், குற்றாலம் வியாபாரிகளும், விடுதி உரிமையாளர்களும், ஆட்டோ ஓட்டுநர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அருவி களில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகளும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
இதுகுறித்து குற்றாலம் சுற்றுவட்டார பகுதி மக்கள் கூறும்போது, “ஊரடங்கு உத்தர வில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப் பட்டிருந்தாலும் குற்றாலத்தில் முழு ஊரடங்கு நீடிப்பதுபோலவே நிலைமை உள்ளது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாடுகளை விதித்து சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு கெடுபிடிகள் குறைந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏராளமான மக்கள் குளித்துச் செல்கின்றனர். ஆனால், குற்றாலத்தில் தொடர்ந்து தடை நீடிப்பது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
சாரல் சீஸனில் சுற்றுலாப் பயணிகள் வருகையை நம்பியிருக்கும் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், விடுதி உரிமை யாளர்கள், வீடு வாடகைக்கு விடுவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, குற்றாலத்தைச் சுற்றியுள்ள மேலகரம், தென்காசி, நன்னகரம், குடியிருப்பு, காசிமேஜர் புரம், வல்லம், இலஞ்சி உட்பட 20-க்கும் மேற்பட்ட ஊர்களைச் சேர்ந்தோருக்கும் குற்றாலம் சீஸன் காலத்தில் சுற்றுலா பயணிகளால் வியாபாரம் நன்றாக இருக்கும். ஊரடங்கில் பெரும்பாலான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கடந்த 1-ம் தேதி முதல் அனைத்தும் இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டன.
இன்னும் சில நாட்களே சீஸன் எஞ்சியிருக்கும் என்பதால், குற்றாலத்தில் தடையை நீக்கி, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்றனர்.