புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 11 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக புளியங்குடி மாறியிருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதி 7 மண்டலங்களாக பிரித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.
புளியங்குடி நகரமே தனிமைப்படுத்தப்பட்டு எல்லைகள் சீல் வைக்கப்பட்டன. கிட்டத்தட்ட நகரமே துண்டிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற முடியாதவாறு செய்யப்பட்டன. அதேநேரத்தில் அவர்களின் தேவைகள் வீடு தேடிச் செல்கிற அளவுக்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. அரசு எந்திரம் 24 நேரமும் முகாமிட்டு கொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொண்டதன் விளைவாக புளியங்குடியில் ஜூன் மாதத்திற்கு பின் கொரோனா தொற்றுப் பரவல் மட்டுப்படுத்தப்பட்டது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், ஒரு மாதத்திற்கு பிறகு புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மீண்டும் கொரோனா தலைதூக்க ஆரம்பித்துள்ளது. நேற்று மட்டும் புளியங்குடியில் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளது. கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் தடுப்புகள் அமைத்து சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.