கேரள அரசின் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் தென்காசியை சேர்ந்த லாட்டரி வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்தது. விற்பனையாகாத சீட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து வருகிறது. இந்த நிலையில் கிறிஸ்துமஸ் – புத்தாண்டையொட்டி முதல் பரிசு ரூ.12 கோடி என்ற அறிவிக்கப்பட்டு லாட்டரி விற்பனை மும்முரமாக நடந்து வந்தது.
இதற்கிடையே கடந்த 17-ந் தேதி அன்று குலுக்கல் நடைபெற்றது. அப்போது எக்ஸ்ஜி.358753 என்ற எண்ணுக்கு முதல் பரிசு ரூ.12 கோடி விழுந்தது. கொல்லம் மாவட்டம் ஆரியங்காவில் விற்ற சீட்டுக்கு ரூ.12 கோடி கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிர்ஷ்டசாலி யாரென்பது தெரியவில்லை.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் தென் மாவட்டமான தென்காசியை சேர்ந்த ஷரபுதீன் என்பவர் அந்த லாட்டரி சீட்டை வைத்திருந்தது தெரிய வந்தது. அதாவது, கேரளாவில் லாட்டரி சீட்டு வாங்கி அதனை ஷரபுதீன் விற்று வந்ததாகவும், புத்தாண்டு பம்பர் லாட்டரி வாங்கியதில், விற்பனையாகாத சீட்டுக்கு பரிசு விழுந்ததும் தெரியவந்தது.
இதனை அறிந்த ஷரபுதீன் இன்ப அதிர்ச்சிக்குள்ளானார். நேற்று திருவனந்தபுரம் சென்ற அவர், கேரள லாட்டரி தலைமையகத்தில் இயக்குனர் கார்த்திகேயனை நேரில் சந்தித்து ரூ.12 கோடி விழுந்த லாட்டரி சீட்டை அவரிடம் ஒப்படைத்தார். மேலும் அதற்கான அத்தாட்சி சான்றிதழையும் பெற்று கொண்டார்.
ரூ.12 கோடி பரிசு விழுந்த உற்சாகத்தில் ஷரபுதீன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது தாய், தந்தை கேரளாவை சேர்ந்தவர்கள். நான் எனது மனைவி குழந்தைகளுடன் தென்காசியில் வசித்து வருகிறேன். வழக்கமாக தமிழ்நாடு எல்லையான ஆரியங்காவு பகுதியில் லாட்டரி சீட்டுகளை வாங்கி விற்பனை செய்து வந்தேன். இந்த முறையும் அதே போல் லாட்டரி சீட்டுகளை வாங்கினேன்.
லாட்டரி சீட்டு வாங்கும் போது எப்போதாவது விற்பனையாகாத சீட்டுக்கு சிறிய பரிசுகள் விழுந்துள்ளன. ஆனால் எனக்கு முதல் பரிசான ரூ.12 கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்பதை தற்போது வரை சிந்திக்கவில்லை” என்று அவர் கூறினார்.