நெல்லையில் இருந்து திருச்செந்தூர், தென்காசி மின்மயமாக்கல் பணிகள் 2022ல் நிறைவடையும்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்
நெல்லை: நெல்லை- திருச்செந்தூர் மற்றும் தென்காசி மின்மயமாக்கல் பணிகள் வரும் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு பெறுமென தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தெற்கு ரயில்வே ஒவ்வொரு வழித்தடத்தையும் மின்மயமாக்கி வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள வழித்தடம் மின்சாரமயமாக்கப்பட்டு மின்சார இன்ஜின்கள் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால் பயண நேரம் மிகவும் குறைந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்கள் தென்மாவட்டங்களுக்கு குறித்த நேரத்தில் வந்து சேருகின்றன. இந்நிலையில் தெற்கு ரயில்வே சிறிய நகரங்களுக்கான வழித்தடங்களிலும் மின்மயமாக்கல் பணிகளை விரைந்து நடத்திட திட்டமிட்டுள்ளது. அதன்படி நெல்லை- திருச்செந்தூர், நெல்லை- தென்காசி வழித்தடங்களுக்கான மின்மயமாக்கல் பணிகள் தற்போது தயார் நிலையில் உள்ளன. இவ்வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் வருகிற 2022 அக்டோபருக்குள் நிறைவுறும் என தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை முதல் புனலூர் வழித்தடத்திற்கு மதிப்பீடுகள் இன்னமும் அனுமதிக்கப்படவில்லை. இப்பணிகள் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் மேற்கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளன. புனலூர்- கொல்லம் வழித்தடமும் மதிப்பீடுகள் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது காணப்படுகிறது. மதுரை- மானாமதுரை வழித்தடத்தில் தற்போது மின்கம்பங்கள் நடும் பணிகளும், பள்ளம் தோண்டும் பணிகளும் நடந்து வருகின்றன. அதற்கான பணிகள் வரும் 2021 மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெற உள்ளன. மானாமதுரை- ராமேஸ்வரம் மின்மயமாக்கல் பணிகளும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து பாவூர்சத்திரம் ரயில் பயணிகள் சங்க தலைவர் பாண்டியராசா கூறுகையில், ‘‘தென்மாவட்டங்களில் மின்மயமாக்கல் பணிகள் சில நகரங்களில் எப்போது நிறைவுபெறும் என்பதை தகவல் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தோம். அதில் செங்கோட்டை- விருதுநகர் ரயில்பாதை மற்றும் விருதுநகர்- மானாமதுரை ரயில்பாதைகள் வரும் 2022க்குள் நிறைவு ெபறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை- தென்காசி, நெல்லை- திருச்செந்தூர் வழித்தடங்கள் வரும் 2022 அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு பாதைகளுக்கும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுவிட்டது. திட்டவரைவு, அளவீட்டு பணிகள் நடந்து வருகின்றன.
மானாமதுரை- ராமேஸ்வரம் மின்மயமாக்கல் பணிகள் வரும் 2021 மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதில் நெல்லை- தென்காசி, நெல்லை- திருச்செந்தூர், தென்காசி- விருதுநகர் என பல மின்மயமாக்கல் திட்டங்கள் திட்ட வரைவு நிலையிலே உள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் ரயில் போக்குவரத்து குறைவாக உள்ளது. தற்போது பணிகளை தொடங்கி பணிகளை விரைந்து முடிக்கலாம். தெற்கு ரயில்வே அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.’’ என்றார். நெல்லையை மையமாக கொண்டு மெமு ரயில்கள் வருங்காலத்தில் இயக்கப்பட்டால், அதற்கு மின்மயமாக்கப்பட்ட வழித்தடங்கள் பயனுள்ளதாக காணப்படும்.
இதையும் படிக்க: பண்பொழி திருமலைக் குமாரசாமியின் கதை
கனவாகிப் போன குற்றால அருவி குளியல்: