செங்கோட்டை வாரச் சந்தைக்கு புகழ் பெற்ற நீண்டதொரு பயணம் உண்டு.
செங்கோட்டை அரசு மருத்துவமனை எதிர்புறம் வாரச்சந்தை அமைந்து இருக்கிறது. என் அன்னையுடன் சந்தைக்கு செல்வது என்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். செவ்வாய் கிழமை என்றாலே தனி உற்சாகம் பிறக்கும். காய்கனிகள் இறக்குவதும் ஏற்றுவதும் என காலையில் நிறைய வேடிக்கை பார்க்கலாம். காலையில் பள்ளி செல்லும் போதும் மாலை வீடு திரும்பும் போதும் பார்த்து மகிழ்ந்து கொண்டே செல்வேன். அது ஒரு கனாக்காலம்.
செவ்வாய்க்கிழமை என்றால் சுற்று வட்டார வணிக பெருமக்கள் தங்கள் மளிகை பொருட்கள் மற்றும் காய்கனிகள் விவசாய பொருட்களை இங்கு வாரச்சந்தையில் கடை அமைத்து வியாபாரம் செய்வது வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பொதுமக்கள் கூட்டம் காலை முதல் மாலை வரை ஆரவாரமாக இருக்கும். ஏழை பணக்காரர், இருப்பவர் இல்லாதவர் என அனைவரும் திருப்தியாக காய்கறிகள் வாங்கி செல்வர்.
என் சிறு வயதில் சந்தை அடைக்கப்பட்டு இருக்கும் நாட்களில் உரிய அனுமதி பெற்று அந்த நாட்களில் எனது குடும்பத்தினர் எங்கள் நஞ்சை புஞ்சை நிலங்களில் விளைந்த நெல், எள் போன்ற தானியங்களை உலர வைப்போம். என் அன்னை எங்கள் வயலில் விளைந்த நெல் அவித்து இங்கு சந்தை உள் உள்ள சிமெண்ட் தரையில்தான் உலர வைப்பார். அப்போது எல்லாம் விவசாய பெருமக்கள் தானியங்களை உலர வைக்க இதை நன்றாக பயன்படுத்தி கொண்டிருந்தனர். இப்போது அப்படி பார்க்க முடியவில்லை.
செங்கோட்டை வாரச் சந்தையானது வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை செயல்படுவது வழக்கம். அதுபோல் பண்டிகை நாட்களான பொங்கல், தீபாவளி, சரஸ்வதி ஆயுத பூஜை என இது போன்ற முக்கிய விஷேஷ நாட்களில் சிறப்புச் சந்தை பண்டிகைக்கு முந்தைய நாள் சிறப்பாக செயல்படும். பண்டிகை நாட்களில் மக்கள் கூட்டம் சாரை சாரையாக மகிழ்ச்சியுடன் காய்கறி, மளிகை பொருட்களை வாங்கி சென்று பண்டிகைகளை இறை பக்தியுடன் சிறப்பாக கொண்டாடி மகிழ்வர். சந்தையில் கிடைக்காத பொருட்களே இல்லை அனைத்தும் கிடைக்கும். இந்த பாரம்பரியம் இன்றளவும் சிறப்புடன் செயல்படுகிறது. பண்டிகை நாட்களில் சிறப்பு சந்தைகள் வணிகர்கள், பொதுமக்கள் என மன மகிழ்ச்சியுடன் ஆரவாரமாக இருக்கும்.
செங்கோட்டை வாரச்சந்தை பெரிய வணிகர் முதல் சிறு குறு வணிகர்கள் வரை இன்றளவும் பயன்படும் வகையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. செங்கோட்டை பகுதி மக்களுக்கும் சுற்றுவட்டார மக்களுக்கும் காய்கனிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க உதவியாக உள்ளது.
சந்தை கடந்த முப்பது வருடங்களில் சில முறை மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பழைய கட்டிடம்தான் இன்றளவும் காணப்படுகிறது அதே உடைந்த ஓடு உடன். வேறு எங்கும் இல்லாத வகையில் செங்கோட்டை வாரச்சந்தையில் நல்ல நிலப்பரப்பு உள்ளது. ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. மழை பெய்தால் சேறும், சகதியுமாக காணப்படும். மேலும் காய்கனிகள் விற்பதற்கு வசதியாக கூடுதல் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்படவில்லை.
வணிகர்கள் கடைகளை போதிய இடைவெளியின்றி வைத்திருப்பதால் மக்கள் உள்ளே சென்று காய்கனிகள் வாங்கி செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் செயின்பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இனி வரும் காலங்களில் கொரோனாக்கு பின்பு சந்தை முழுமையாக செயல்படும்பொழுது போதிய சமூக இடைவெளி இல்லை என்றால் நோய் தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது. அது விலைமதிப்பில்லாத மனித உயிர்களுக்கே ஆபத்தாகிவிடும். முக்கியமாக கழிப்பறை வசதியும் இல்லை. இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே பொதுமக்களின் நலன்கருதி வாரச்சந்தையை சீரமைக்க செங்கோட்டை நகராட்சிக்கு தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சந்தை சுற்றுபுறம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. அதன் மூலமாகவும் கடைகள் அமைத்து வணிகர்கள் பயன் பெற்று வருகின்றனர். கட்டிடங்கள் பழையதாக காணப்படுகிறது. எனக்கு தெரிந்து சந்தைக்கு கிழக்கு, மேற்கு என இரு நுழைவுவாயில் உண்டு. இரண்டிலுமே பழைய இரும்பு கதவு உண்டு. கடந்த சில மாதங்களாக மேற்கு நுழைவு வாயில் கதவு இல்லாமல் இருந்தது. இதனால் சமூக விரோத செயல்கள் சந்தையின் உள் பகுதியில் நடைபெற்றதாக செய்தி. இதை அறிந்து ஊர் மக்கள் மற்றும் அரசியல் இயக்கங்கள் சார்பாக நகராட்சி நிர்வாகத்திற்கு மனுவும் அளிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இரும்புக் கதவும் போடப்பட்டுள்ளது. ஆனால் இது போதாது. மேலும் நிதி ஒதுக்கி பலர் பயன்படும் வகையில் பழைய கட்டிடங்கள் பதிலாக இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு நவீன முறையில் கட்டிடங்கள், கழிவறைகள், உணவகங்கள் போன்றவை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைக்கிறேன். இதன் மூலம் நகராட்சி நிர்வாகத்திற்கு கூடுதலான வரி வருவாயும் கிடைக்கும். நமது செங்கோட்டை செவ்வாய்கிழமை வார சந்தை பாரம்பரியமும் காக்கப்படும்.