வீடுகளுக்கே சென்று உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை: ஒத்துழைப்பு அளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் கோரிக்கை
வரும்முன் காப்பதன் அவசியம் கருதி அனைத்து உள்ளாட்சிகளிலும் உடல் வெப்பநிலை மற்றும் ரத்த ஆக்ஸிஜன் அளவு கண்டறியும் எளிய வலியற்ற பரிசோதனை வீடுகளிலேயே வந்து நடத்தப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்களின் நலன் கருதி பொது சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனையம், பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி மூலம் நுரையீரலின் செயல்பாட்டை காட்டும் ஆக்ஸிஜன் அளவு பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.
கொரோனா நோய்த் தொற்று முதலில் நுரையீரலைத் தாக்கி பாதிப்பதால் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையத் தொடங்குகிறது. வழக்கமாக ஆரோக்கியமான நபர்களுக்கு ரத்த ஆக்ஸிஜன் அளவு 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருக்கும்.
நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அளவு 95 சதவீதத்தை விட குறைவாக இருக்கும். ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையக்குறைய உடலின் பிறபாகங்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் அவை செயலிழக்க தொடங்குகின்றன. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
கரோனா நோய்த் தொற்றால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்க்க தென்காசி மாவட்டத்தில் தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு மருததுவமனைகளில் நாசி உயர் ஓட்ட உயிர் வளிக் கருவி மற்றும் வைரஸ் அளவைக் கட்டுப்படுத்த உயிர் காக்கும் அதிக விலையுள்ள மருந்துகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
நோயின் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே உரிய பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை மேற்கொண்டு நலம் பெற இயலும். உயிரிழப்புகளை முற்றிலுமாகத் தவிர்க்கலாம்.
வரும்முன் காப்பதன் அவசியம் கருதி அனைத்து உள்ளாட்சிகளிலும் உடல் வெப்பநிலை மற்றும் ரத்த ஆக்ஸிஜன் அளவு கண்டறியும் எளிய வலியற்ற பரிசோதனை வீடுகளிலேயே வந்து நடத்தப்படும்.
இந்த முயற்சிக்கு அனைத்து தரப்பினரும்; ஆதரவு தருவதுடன் தங்களது பகுதிகளில் உள்ள முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நீண்ட நாள் உடல் உபாதையுள்ளவர்கள் இந்த எளிய பரிசோதனையை மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.