தென்காசியில் ஆட்சியர் அலுவலகம் கட்டுவற்கு இடம் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகம் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு அலுவலகங்களுடன் கூடிய கட்டடத்திற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கியது. ஆனால், தென்காசி மாவட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை
அதாவது செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியர் அலுவலகங்கள் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய, அரசாணை வெளியிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.119 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பத்தூரில் ஆட்சியர் அலுவலகம் கட்ட ரூ.109 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்நிலையில், தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஆட்சியர் அலுவலகம் கட்ட, இடம் தேர்வு செய்யப்படாததால், நிதி ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. புதிதாக ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கான இடம் தோ்வு நடைபெற்று வந்த நிலையில், கொரோனா தடுப்பு பொது முடக்கத்தால் அப்பணியில் தொய்வு ஏற்பட்டது.
இந்த இழுபறிக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும், ஆளும்கட்சி அரசியல்வாதிகளுக்கும் இடையே நடக்கும் பனி போர்தான் காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து, தென்காசி எம்.எல்.ஏ. மோல்வமோகன்தாஸ் பாண்டியனிடம் கேட்ட போது, ‘தென்காசியில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கட்டுவதற்கு ரூ. 116 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அதற்கான அரசாணை இரு தினங்களில் வெளியாகும்’ என்றாா் அவா்.