பாட்டியும், ஒன்றரை வயது பேத்தியும் கொலை செய்யப்பட்டது தென்காசி வட்டாரத்தில் பீதியைக் கிளப்பியிருக்கிறது.
தென்காசி மாவட்டம், கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். ராணுவ வீரரான முருகன், காஷ்மீரில் பணிபுரிந்துவருகிறார். அவர் மனைவி சீதாலட்சுமி. இந்தத் தம்பதியருக்கு மனிஷ் என்ற 6 வயது மகனும் உத்ரா என்ற சாக்க்ஷி என்னும் ஒன்றரை வயது மகளும் இருக்கிறார்கள்.
முருகன் வெளிமாநிலத்தில் பணியில் இருப்பதால் மனைவியைத் தன் பெற்றோரிடம்விட்டுச் சென்றிருக்கிறார். மகன் மனிஷைத் தன்னுடன் வைத்திருந்த சீதாலட்சுமி, மகள் உத்ராவை தன் தாய் கோமதியம்மளிடம் கொடுத்து வளர்த்து வந்தார்.
கோமதியம்மாள், தென்காசி கீழப்புலியூர் பகுதியில் வசிக்கும் சிலருக்குக் கடன் கொடுத்து அதில் கிடைக்கும் வட்டியின் மூலம் வாழ்க்கை நடத்திவந்திருக்கிறார். அவரின் பராமரிப்பில் உத்ரா வளர்ந்து வந்தார். இந்தநிலையில், ஜனவரி 12-ம் தேதிக்குப் பின்னர் கோமதியம்மாளும், அவரிடம் வளர்ந்துவந்த உத்ராவும் காணாமல் போய்விட்டார்கள். அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது பற்றி யாருக்கும் தெரியவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் பாட்டியையும் பேத்தியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
பல இடங்களிலும் தேடியும் கோமதியம்மாளையும் உத்ராவையும் பற்றி எந்தத் தகவலும் கிடைக்காததால் கவலையடைந்த உறவினர்கள், தென்காசி காவல் நிலையத்தில் இருவரையும் காணவில்லை எனப் புகார் அளித்தார்கள். போலீஸார் இருவரின் புகைப்படத்துடன்கூடிய போஸ்டர்களை ஒட்டித் தேடிவந்தனர்.
பாட்டியும் பேத்தியும் மாயமான சம்பவத்தில் எந்தத் துப்பும் கிடைக்காததால் போலீஸார் இது பற்றிப் பெரிதாக விசாரிக்கவில்லை. இந்தநிலையில், மகள் உத்ராவையும் பாட்டியையும் காணவில்லை என்ற தகவல் கிடைத்ததும் ராணுவத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்கு வந்த முருகன், பல இடங்களில் தேடினார். எந்தத் துப்பும் கிடைக்காததால் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
முருகன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, பாட்டியும் பேத்தியும் மாயமானது குறித்து விசாரித்து விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தென்காசி போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து போலீஸார் தீவிரமாகத் தேடினார்கள். கோமதியம்மாளுடன் செல்போனில் தொடர்புகொண்டவர்களின் லிஸ்ட் எடுத்து விசாரணையைத் தொடங்கினார்கள், அப்போது கடைசியாக கீலப்புலியூர் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டியம்மாள் என்பவருடன் அவர் பேசியது தெரியவந்தது.
வீரபாண்டியம்மாளிடம் போலீஸார் விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாகப் பேசியிருக்கிறார். அதனால் அவரை வழக்கமான பாணியில் விசாரித்தபோது கோமதியம்மாளிடம் ரூ.20,000 வட்டிக்குப் பணம் வாங்கியதாகவும் அதற்கு ரூ.20,000 வட்டியாகச் செலுத்திய பிறகும் பணத்தைக் கேட்டு தொந்தரவு கொடுத்ததுடன் அவதூறாகப் பேசியதால் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
கோமதியம்மாளைக் கொலை செய்த பின்னர், அவருடைய பேத்தியை வெளியே கொண்டு சென்றால் உண்மை தெரிந்துவிடும் என்பதால் ஒரு வயதேயான உத்ராவையும் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். இந்தக் கொலையை வீரபாண்டியம்மாளின் மகன் சுரேஷ், மகள் மகேஷ்வரி மற்றும் உறவினரான பூதத்தான் ஆகியோர் செய்தது தெரியவந்தது. அதனால் நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்தனர்.
கொலை செய்ததை ஒப்புக் கொண்ட வீரபாண்டியம்மாள் அளித்த வாக்குமூலத்தில், “கடன் வாங்கிய பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்த கோமதியம்மாள் வாய்க்கு வந்தபடி பேசினார். என் மகன், மகள் முன்னிலையில் என் நடத்தை பற்றி அவதூறாகப் பேசியதால் அவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் வீட்டுக்கு அழைத்து திட்டத்தை நிறைவேற்றினேன்.
குழந்தையையும் கொலை செய்த பின்னர் இருவரது உடல்களையும் சாக்கு மூட்டையில் கட்டி காட்டுப் பகுதியில் முட்புதருக்குள் வீசிவிட்டு வந்தோம். அந்தச் சமயத்தில் கனமழை பெய்ததால், நாங்கள் உடல்களை வீசிய இடம், உயிரிழந்த விலங்குகளை வீசக்கூடிய பகுதி என்பதால் யாரும் சந்தேகம் அடையவில்லை. இவ்வளவு நாளுக்குப் பிறகு போலீஸிடம் மாட்டிக்கொள்வோம் என நினைத்துக்கூட பார்க்கவில்லை” எனக் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
வீரபாண்டியம்மாள் காட்டிய இடத்தில் இரு சாக்கு மூட்டைகள் கிடந்தன. 40 நாள்கள் ஆகிவிட்டதால் அதில் இருந்த உடல்கள் அழுகிவிட்டதால் அதே இடத்தில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கிடையே கோமதியம்மாள், குழந்தை உத்ரா கொலையில் வீரபாண்டியம்மாளின் மற்றொரு மகளான கோமதியம்மாள் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால் அவரும் கைது செய்யப்பட்டார்.
தென்காசி சட்டமன்றத் தொகுதி.. ஓர் சிறப்பு பார்வை