தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு மனு அளிக்க நேரில் வருவதை தவிர்க்கும் பொருட்டு புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பொதுமக்களின் குறைகளை தீர்க்க மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 94436 20761 என்ற அலைபேசி எண்ணில் Whatsapp மூலமாகவும், collector.grievance@gmail.com என்ற இமெயில் மூலமாகவும், மேலும் https://gdp.tn.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.
புகார் மனுக்களை கண்காணிக்க ஒவ்வொரு வட்டத்திற்கும் துணை ஆட்சியர் அளவிலான ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். பெறப்படும் மனுக்கள் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் துணை ஆட்சியாளர்களால், வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து பெறப்பட்டு மனுக்களுக்கு உரிய முறையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை திங்கள்கிழமை தோறும் ஆய்வு மேற்கொள்வார்கள்.
பொதுமக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே மனுக்களை அளிக்கலாம் என்பதற்கு பதிலாக, அனைத்து வேலை நாட்களிலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மனுக்களை வழங்கலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் மனுக்களுக்கு எவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதோ, அதே போன்று வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் மனுக்கள் மீதும் துணை ஆட்சியர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே மனுக்களை அளிக்கலாம் என்பதற்கு பதிலாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.