தென்காசியில் பிரதான சாலையில் உள்ள மர அறுவை ஆலை உரிமையாளர் வீட்டுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகுந்த 2 மர்ம நபர்கள், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டுவிட்டு, 100 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அந்த வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், அந்த சாலையில் உள்ள மற்ற கட்டிடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
இதில் சந்தேக நபர்கள் 2 பேர் இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அவர்களில் ஒருவர் ஹெல்மெட் அணிந்திருந்தலாலும், மற்றொருவர் பர்தா அணிந்திருந்தலாலும் முகத்தை அடையாளம் காண முடியவில்லை. கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், தென்காசி நகரின் முக்கிய வீதிகளில் பாதுகாப்புக்காகவும், குற்றச் செயல்களை கண்காணிக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது தொடர்பாக வியாபாரிகளுடன் தென்காசி நகர காவல்துறையினர் நேற்று ஆலோசனை நடத்தினர். தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமை வகித்தார்.
அவர் கூறும்போது, “தென்காசியில் சமீபத்தில் கொள்ளை நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா இல்லை. இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த வீட்டில் புகுந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு திருட்டு வழக்கு ஒன்றில் குற்றவாளியை கைது செய்து விசாரித்தபோது, வீட்டில் கண்காணிப்பு கேமரா இருக்கிறதா என்பதை நோட்டம் விட்டு, கேமரா இல்லாத வீட்டில் திருடியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
குற்றங்களை குறைக்கலாம்
வசதியானவர்கள் வீடுகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்காமல் உள்ளனர். இது திருடுபவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. கண்காணிப்பு கேமராக்கள் வைத்தால் குற்றங்களை குறைக்கலாம். கண்காணிப்பு கேமராவின் அவசியத்தை பொதுமக்கள் உணர்ந்து, தங்கள் வீடு, நிறுவனங்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும்.
நகர்ப் பகுதியில் தற்போது முதல் கட்டமாக 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தென்காசியில் அனைத்து பகுதிகளிலும் சுமார் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
தென்காசி ஹவுசிங் போர்டு பகுதியில் குடியிருப்போர் சங்கங்களிடம் பேசி, 18 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
நன்றி: தி இந்து தமிழ் திசை