தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக 14-வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் அரசு போக்குவரத்து கழக டெப்போக்கள் மொத்தம் 18 உள்ளது. இந்த 18 டெப்போக்களில் இருந்தும் இன்று அதிகாலை 4 மணி முதலே பஸ்கள் இயக்கப்படும். ஆனால் இன்று அதிகாலை எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து அந்தந்த போக்குவரத்து டெப்போ அதிகாரிகள் விரைந்து சென்று காலை 5 மணி முதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். முதல் கட்டமாக காலையில் 20 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.
இதனால் கிராமப்புறங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள், முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரூட் பஸ்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு இயக்கப்பட்டது. ஆனால் தனியார் பஸ்கள் வழக்கம் போல் 100 சதவீதம் இயக்கப்பட்டது.
இதனால் காலையில் பயணம் செய்யும் பஸ் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளியூர்களுக்கு வேலைக்கு செல்லும் பயணிகள், விசேஷ நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள், கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு தனியார் வாகனம், ஷேர் ஆட்டோ போன்றவைகளில் நகர் பகுதிகளுக்கு சென்று பஸ் ஏறினர்.
நகர பகுதியான நெல்லை, பாளை, தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், அம்பை, வள்ளியூர் பகுதியில் உள்ள பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்த கொரோனா காலத்திலும் பயணிகள் சமூக விலகலை மறந்து முன்டியதுத்து ஏறி நெருக்கி நின்று பயணம் செய்தனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ் போன்ற தொழிற்சங்க ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக அனைவரும் பணிக்கு வரவில்லை.
இதைத்தொடர்ந்து முக்கிய போக்குவரத்து அதிகாரிகள் அரசுக்கு ஆதரவான தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் தற்காலிக டிரைவர்- கண்டக்டர்கள் மூலமும் கூடுதல் பஸ்களை இன்று காலை 8 மணிக்கு பிறகு இயக்கப்பட்டது.
இதுகுறித்து நெல்லை மண்டல போக்குவரத்து பொதுமேலாளர் சரவணன் கூறியதாவது:-
தற்போது நெல்லை மண்டலத்தில் 50 சதவீத பஸ்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது. பயணிகள் தேவைக்கு ஏற்ப பஸ் நிலையங்களில் அதிகாரிகள் பஸ்களை இயக்க உத்தரவிட்டுள்ளனர். போராட்டம் தொடர்ந்தால் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள் பாதிக்காதவாறு பஸ்கள் இயக்கப்படும்.
போக்குவரத்து தொழிற் சங்க கூட்டமைப்பின் போராட்டங்களை தொடர்ந்து 50 சதவீத பஸ்கள் அந்தந்த பஸ் டெப்போக்களில் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டு இருந்தன. பஸ்களை இயக்க வரும் டிரைவர், கண்டக்டர்களை யாரும் பணி செய்யவிடாமல் தடுக்க கூடாது என்று பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சென்னை மற்றும் வெளியூர்களில் இருந்து இன்று காலை நெல்லை வந்து சேரும் அனைத்து விரைவு பஸ்களும் இன்று வழக்கம்போல் நெல்லை வந்து சேர்ந்தன. நெல்லையில் இருந்து இன்று வெளியூர்களுக்கு புறப்பட்டு செல்லும் விரைவு பஸ்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் புறப்பட்டு சென்றன.
குறிப்பிட்ட நேரத்துக்கு பஸ்களில் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகள் பஸ் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்து அனுப்பி வருகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் உள்ள 18 டெப்போக்களிலும் வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
மேலும் நெல்லை தற்காலிக பஸ் நிலையங்கள், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், தென்காசி, செங்கோட்டை, கடைய நல்லூர், சங்கரன்கோவில், வள்ளியூர், அம்பை, சேரன்மகாதேவி, சிங்கை, ஆலங்குளம் பஸ் நிலையம் உள்பட அனைத்து பஸ் நிலையங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. முக்கிய நெடுஞ்சாலைகளிலும் போலீஸ் ரோந்து வாகனம் இன்று அதிகரிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிக்க: ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட விருப்பம்: சரத்குமார் அறிவிப்பு