பசுமை செறிந்த மலைத்தொடர்கள், மலையினைப் பிளந்து செல்லும் சாலை, திகைப்பூட்டும் மலை வளைவுகள், திகிலூட்டும் சாலையோர பள்ளத்தாக்குகள், பெயர் தெரியா பெருமரங்கள், எவ்வளவோ முயன்றும் தாக்கமுடியாமல் தோற்றுப்போகும் வெயில், வாகன நடமாற்றம் அதிகமில்லா அடர்வனச் சாலையில் படகைப் போல ஆட்டியெடுத்து நம் வாகனம் பயணிக்க, 3500 அடி உயரத்தில் அமைந்த மாஞ்சோலையை அடைந்தோம்.
சமவெளியிலிருந்து துண்டிக்கப்பட்டு தனித்தீவு போன்று இருக்கிறது மாஞ்சோலை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை விரித்துப் போட்ட பச்சைப் போர்வையென தேயிலை தோட்டங்கள்; நடுநடுவே சாக்கு அணிந்து வெடவெடக்கும் குளிரில் தேயிலை பறிக்கும் பெண்கள்.
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறில் இருந்து 22 கி.மீ. தொலைவில் இருக்கிறது மாஞ்சோலை எஸ்டேட். அதற்கடுத்து காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி என மொத்தம் உள்ள ஐந்து எஸ்டேட்களில், ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
தேயிலை தோட்டங்களை ரசித்தபடி, சுற்றிலும் பிரமிப்பூட்டும் மலைத் தொடர்களையும், பரவசமூட்டும் இயற்கைக் காட்சிகளையும் பார்த்து ரசிக்க அருமையான இடம். கட்டுப்பாடான வன மேலாண்மையால் இயற்கை எழில் குறையாத மலைப்பிரதேசமாக காட்சியளிக்கிறது மாஞ்சோலை.
ஆனால் ஊட்டி, கொடைக்கானல் போன்று மாஞ்சோலை வழக்கமான சுற்றுலாத்தளம் அல்ல. களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாஞ்சோலை அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கு சுற்றுலா மற்றும் வாகனப் போக்குவரத்து முறைப்படுத்தப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு பத்து தனியார் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி. அதற்கும் அம்பை வனச்சரக அலுவலகத்தில் முன்கூட்டியே எழுத்துப்பூர்வ அனுமதி கடிதம் பெறவேண்டும். திருநெல்வேலி, தென்காசி, அம்பை பகுதிகளிலிருந்து சிறிய ரக அரசுப் பேருந்துகள் நான்கு முறை மாஞ்சோலைக்கு ஏறி இறங்குகின்றன.
காலை 6 மணி முதல் மாலை 4.30 மணி வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதி நேரம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட மிகக்குறுகலான, சிக்கலான மலைப்பாதை என்பதால் 20 கி.மீ தூரத்தைக் கடக்கவே இரண்டு மணி நேரமாகிறது. அதனால் காலையில் சீக்கிரமாக கிளம்பி மாஞ்சோலையை அடைந்தால் கூடுதல் நேரம் செலவழிக்கலாம். சாப்பிட சிறிய உணவுக்கடைகள் சில உள்ளன. பி.எஸ்.என்.எல். தவிர வேறெந்த மொபைல் சிக்னலும் கிடைக்காது. மாஞ்சோலையில் தங்குவது என்றால் அதற்கும் வனத்துறை அலுவலகத்தில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். வனத்துறைக்கு சொந்தமான விடுதிகள் தவிர, தனியார் விடுதிகள் எதுவும் கிடையாது. மற்றபடி பார்த்துவிட்டு ஆறு மணிக்கு முன்னதாக மாஞ்சோலையை விட்டு வெளியேறி விடவேண்டும்.
கோடை நெருப்பு, பரபரப்பான வாழ்க்கையை துறந்து இயற்கையோடு குதூகலிக்க அருமையான நேட்ச்சர் ஸ்பாட் மாஞ்சோலை. ரசிப்பதற்கு பல இடங்கள் உள்ளது என்பதைவிட, பார்க்கும் இடங்களை எல்லாம் ரசிக்கலாம் என்பதே மாஞ்சோலையின் சிறப்பு.