துள்ளாத மனமும் துள்ளும்!

825

அது வெறும் வழித்தடம் மட்டுமல்ல, தமிழக – கேரள எல்லையோர மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும் நினைவுத்தடம். 114 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ‘செங்கோட்டை – புனலூர் ரயில் வழித்தடம்’, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது!

ரயில் பயணம் என்றாலே அது ஒரு சுகமான அனுபவம்தான். ஆனால், நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து கேரளாவின் கொல்லம் மாவட்டம் புனலூர் செல்லும் இந்த ரயிலில் பயணித்தவர்களுக்கு மட்டுமே, அது ஓர் அற்புதமான பேரனுபவம் என்பது தெரியும்.

1904-ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடருக்கு ஊடாக அமைக்கப்பட்டதுதான் இந்த செங்கோட்டை – புனலூர் ரயில் பாதை. வழியெங்கும் சிதறிக்கிடக்கும் இயற்கை எழிலையும், ரயில் பாதையின் அக்கால தொழில்நுட்பத்தையும் பார்த்து ரசிக்கவே சுற்றுலாப் பயணிகள் விரும்பி பயணம் செய்வார்கள். இந்த ரயில் பயணிப்பதற்கு என்று இரு மாநிலங்களிலும் ரசிகர் பட்டாளமே உண்டு. பசுமையான மலையினுள் வளைந்து நெளிந்து செல்லும் அழகும், மலைக்குகைப் பாதைகளுக்குள் புகுந்து வரும் ரம்மியமும், மலை மீது தவழ்ந்து செல்லும் அற்புதமும்… என மூன்று மணி நேரம் பயணிகளுக்கு கண்கவர் விருந்துகள் படைத்து வந்தன.

இந்திய அளவில் இயற்கை எழில் கொஞ்சும் ரயில் பாதைகளில் இதுவும் ஒன்று. தமிழகத்துக்கும், கேரளத்துக்கும் இடையேயான முக்கியமான வர்த்தக வழித்தடமாகவும் விளங்கி வந்தது. மீட்டர்கேஜ் பாதையாக இருந்ததை அகல ரயில் பாதையாக மாற்றும் பொருட்டு, இந்த வழித்தடத்தில், 2010-இல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. 3 ஆண்டுகளில் முடிவடைய வேண்டிய பணிகள் 8 ஆண்டுகளாக நடைபெற்றன.

இதுகுறித்து ரயில்வே பொறியாளர் ஒருவர் கூறும்போது, ‘’செங்கோட்டை – புனலூர் வழித்தடம், தமிழக எல்லைப் பகுதிக்குள் 13 கி.மீ., கேரள மாநிலத்துக்குள் 36.38 கி.மீ. என மொத்தம் 49.38 கி. தூரம் உடையது. அகல ரயில் பாதை பணி துவங்கியபோது, மூன்றாண்டுகளில் முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்தப் பாதை அமைந்துள்ள பகுதி கடினமான நிலப்பரப்பு கொண்டது என்பதால் நிறைய சிரமமும், கால தாமதமும் ஏற்பட்டுவிட்டன. மலைக்குகை வழிகளையும், கல் பாலங்களையும் அகல ரயில் பாதைக்கு ஏற்றதாக மாற்றியமைப்பதில் பெரிய சவால்கள் நிலவின. மேலும், நிதி ஒதுக்கீடு செய்வதில் ஏற்பட்ட காலதாமதம், கேரளாவில் பருவமழைக் காலங்களில் ஏற்பட்ட பணிகள் தொய்வு ஆகியவையும் சேர்ந்துகொண்டன. அதனால் இந்தப் பகுதியில் மிகப்பெரிய பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.

செங்கோட்டை – புனலூர் மீட்டர் கேஜ் பாதை, ஆங்கிலேயேரால் 1900-இல் துவங்கி, 1902-இல் முடிக்கப்பட்டது. தொழில்நுட்ப வசதி, நிதியுதவி, வாகனப் போக்குவரத்து அதிகமாக இல்லாத நிலையில், மனித உழைப்பை அதிகம் பயன்படுத்தி, இரண்டு ஆண்டுகளில் இப்பாதை அமைக்கப்பட்டது. ஆனால் நவீன தொழில்நுட்ப வசதிகள், நிதி ஒதுக்கீடுகள் இருந்தும், அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணியை முடிக்க 8 ஆண்டுகள் ஆகிவிட்டன.

செங்கோட்டை – புனலூர் ரயில் பாதைக்கு புகழ் சேர்க்கும் இரண்டு அதிசயத்தக்க சிறப்பம்சங்கள் உண்டு. ஒன்று, மலைக்குகைப் பாதைகள். மற்றொன்று 13 கண் பாலம்.

மலைக்குகைகள்

செங்கோட்டை – புனலூர் ரயில் பாதையில் பயணிகளை பிரமிக்க வைக்கும் 5 குகைகள் அமைந்து உள்ளன. ரயில் பாதையை நிர்மாணித்த அப்போதைய ஆங்கிலேயப் பொறியாளர்கள் குகை அமைக்கும்போது தொலைநோக்குப் பார்வையுடன் குகையை அகலமாக அமைத்துள்ளார்கள். 5 குகைகளிலும் அகல ரயில்கள் கடந்து செல்லும் வகையில் குகைக்குள் அகலம் போதுமானதாக இருக்கிறது. ஆனால், உயரம் போதுமானதாக இல்லை. இதையடுத்து குகைகளை அகல ரயில் பாதைக்கு ஏற்ப உயரப்படுத்தி இருக்கிறார்கள். கேரளாவில் தென்மலையை அடுத்து பெரும் சிக்கலாக இருந்த வளைவுக்குத் தீர்வாக 200 மீட்டர் தூரத்துக்கு புதிய குகை அமைத்துள்ளார்கள். இதனால், இந்த வழித்தடத்தில் குகைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

இதில் தமிழகத்தின் பகவதிபுரம் மற்றும் கேரளாவின் ஆரியங்காவு பகுதிகளுக்கு நடுவில் அமைந்துள்ள 894 மீட்டர் நீளமுடைய ஒரு மலைக்குகைப் பாதை குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. இந்தக் குகை இரு மாநில எல்லையை இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. குகையில் பாதி தமிழக எல்லையிலும், மீதிப் பாதி கேரள மாநில எல்லைக்குள்ளும் இருக்கின்றன. இந்தக் குகையில் நுழையும்போது ரயிலில் இருந்து ஒலிக்கும் ஹார்ன் சப்தமும், தண்டவாளத்தில் சக்கரங்கள் தடதடக்கும் ஓசையும், பயணிகளின் ஆரவார சத்தங்களும், விசில்களும் குகைகளின் சுவர்களில் மோதி எதிரொலித்து அமானுஷ்ய உணர்வை உண்டுபண்ணும்.

13 கண் பாலம்

செங்கோட்டை – புனலூர் ரயில் பாதையில் மற்றுமொரு சிறப்பம்சம், இரு மலைகளை இணைக்கும் வகையில் கட்டப்படுள்ள கல் பாலங்கள். இந்த வழித்தடத்தில் 23 பெரிய பாலங்களும், 150-க்கும் மேற்பட்ட சிறிய பாலங்களும் உள்ளன. இவற்றில் பெரும்பாலான பாலங்கள் மலைகளை இணைக்கும் பாலங்கள். இதில் பிரபலமானது கழுதுருட்டி எனும் பகுதியில் அமைந்துள்ள 13 கண் பாலம். இந்தப் பாலத்தில் ரயில் ஊர்ந்து செல்வதைக் காண்பதே கண் கொள்ளாக்காட்சி. இப்பாதையில் ரயில் செல்லும்போது அனைத்துப் பெட்டிகளை ஓட்டுநரும், கடைசிப் பெட்டியில் இருக்கும் கார்டும் பார்க்க முடியும்.

இரண்டு மலைக்குன்றுகளை இணைப்பதற்காக போடப்பட்ட இப்பாலம், மொத்தம் 150 மீட்டர் நீளம் உடையது. 13 பிரமாண்டமான தூண்களைக் கொண்ட இந்தப் பாலத்தின் ஒவ்வொரு தூணும் 60 அடி உயரம் கொண்டவை. பாலத்தின் அடிப்புறத்தில் உள்ள சாலையிலிருந்து பார்த்தால், ஒட்டுமொத்தப் பாலத்தின் கம்பீரத்தையும் காணமுடியும். நூறாண்டுகளைக் கடந்தும் பாலத்தின் உறுதித் தன்மை சற்றும் குறையவில்லை.

அகல ரயில் பாதை பணிக்காக, இப்பாலத்தை இடிக்க ரயில்வே துறை முடிவு செய்தபோது, ‘பழைமையான இந்தப் பாலத்தை இடிக்க கூடாது…’ என்று கேரள மக்கள் கொதித்தெழுந்து, தொடர் போராட்டங்கள் நடத்தினர். பின்பு பாலத்தின் உறுதித்தன்மையை சோதித்துப் பார்த்ததில், இன்னும் ஓர் நூறு ஆண்டுகளுக்குக் கூட இப்பாலம் உறுதியாய் இருக்கும்; இடிக்க வேண்டிய அவசியமில்லை என்று ‘ரிசல்ட்’ வந்தது. அதன் விளைவு, பாலம் இடிக்கப்படாமல் பாலத்தின் பழைமை மாறாமல் புனரமைக்கப்பட்டது.

358 கோடி ரூபாய் செலவில், செங்கோட்டை – புனலூர் அகல ரயில் பாதைப் பணிகள் அனைத்தும் கடந்த ஆண்டு நிறைவுபெற்று, சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செங்கோட்டை – புனலூர் இடையிலான ரயில் சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என தமிழக – கேரள மாநில மக்கள் பல ஆண்டுகளாக வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். இந்தச் சூழலில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லம் வரை சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. செங்கோட்டை வந்தடைந்த ரயிலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரயில் நிலையத்தில் கேக் வெட்டி, இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

படம்: ஜலீல் புனலூர்  

நன்றி: ‘புதிய தலைமுறை’ வார இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here