சொர்க்கம் பக்கத்தில்!

அருவிகளில் தண்ணீர் விழாவிட்டால் குற்றாலத்தை ரசிப்பதற்கும், பார்ப்பதற்கும் ஒன்றுமில்லை என்ற ஏக்கம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. இப்போது இல்லை. குற்றாலத்தை ஆண்டு முழுதும் ரசிக்க இருக்கவே இருக்கிறது, சுற்றுச்சூழல் பூங்கா.

குற்றாலம்… எழுதும்போதே ‘சிலுசிலு’வென இருக்கிறது. அருவிகளின் பேரிரைச்சலும், ‘குளுகுளு’ காற்றும் மனதில் நிழலாடி வருடிச் செல்கிறது. தென்மாவட்ட மக்களுக்கு குற்றாலம்தான் ஊட்டி, கொடைக்கானல் எல்லாம். ஆனாலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு ஏக்கம் உண்டு. ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் மட்டுமே குற்றால சீசன் காலம். இம்மாதங்களில் அலைமோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் குற்றாலம் களைகட்டும். மற்ற மாதங்களில் மழை பெய்து அருவிகளில் தண்ணீர் கொட்டினால் மட்டுமே செய்தியறிந்து சிலர் வருவார்கள். அருவிகளில் தண்ணீர் இல்லாத நாட்களில் குற்றாலம் வெறிச்சோடி காட்சியளிக்கும்.

குற்றாலம் ஐந்தருவிக்கு மேலே, இரண்டு மலை முகடுகளுக்கு நடுவே, 37 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பசுமைப் படர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது சுற்றுச்சூழல் பூங்கா. தமிழகத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காக்களில் பெரியது இதுவே. வாட்டி வதைக்கும் வெயிலுக்கு மத்தியில் இதமான சூழல் நம்மை கவ்வி வரவேற்கிறது. ஒவ்வொரு பகுதியையும் நாள்முழுதும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள்.

நீரோட்ட நடைபாதையில் சலசலக்கும் காட்டு ஓடையின் ஓசையைக் கேட்டுக்கொண்டே நடப்பது மனதை இதமாக்குகின்றது. வண்ணத்துப்பூச்சி பூங்காவில் வண்ணச்சிறகை விரித்து அசைந்தாடும் பட்டாம்பூச்சிகள் உள்ளத்தை வசியப்படுத்துகிறது. பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து மேற்கு நோக்கி பார்த்தால் மேற்குத்தொடர்ச்சி மலையின் சொட்டும் பேரழகும், கிழக்கே நோக்கினால் குற்றாலத்தை சுற்றியுள்ள பசுமையான கிராமங்களும், வயல்வெளிகளும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

சாகசப் பிரியர்களுக்கு தீனி போடும் சாகச விளையாட்டுத் திடல், காட்டுப் பூக்கள் பூத்துக்குலுங்கும் மலர் வனம், ஆங்காங்கே வனத்துக்கு நடுவே தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலித்து நிற்கும் சிற்பங்கள், ஜாதிக்காய், கிராம்பு, மிளகு உள்ளிட்ட நறுமணப் பயிர்கள் விளைந்துக் கிடக்கும் நறுமணத் தோட்டம், பெரணி பூங்கா, மூங்கில் தோட்டம், இயற்கை ஓவியப் பதாகைகள், குழந்தைகள் விளையாட்டுப் பூங்கா, தாழ்தள தோட்டம், நீர் விளையாட்டுத் திடல், பசுமைக் குடில்… என சொக்கவைக்கும் அம்சங்கள் எக்கச்சக்கம். ஒவ்வொன்றும் கண்களுக்கு இதமும், மனதுக்கும் புத்துணர்ச்சியும் அளித்து அனுப்புகின்றன. அனைத்தையும் கண்டு ரசித்துவிட்டு திரும்புகையில் அற்புதமான சுற்றுலா அனுபவத்தை உணரமுடிகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக சென்று இயற்கையை தரிசித்து மகிழ ஏற்ற இடம்.

குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவை தோட்டக்கலைத் துறை பராமரித்து வருகிறது. குற்றால சீசன் காலத்தின் போது இங்கு காய்கறி மற்றும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. ரம்புட்டான், மங்குஸ்தான், துரியன் போன்ற பலவகை பழச்செடிகள், மூலிகைச் செடிகள், அலங்கார தாவரங்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதுமண தம்பதிகளுக்கு அவுட்டோர் போட்டோகிராபி, சினிமா பாடல் காட்சிகள் படமாக்கும் ‘ஸ்பாட்’ ஆகவும் ‘எகோ பார்க்’ திகழ்கிறது.

நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.30, சிறியவர்களுக்கு ரூ.15, கேமரா ரூ.50 வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங் கட்டணம் தனி. இயற்கை அழகு ததும்பும் சொர்க்கபுரியாக திகழும் சுற்றுச்சுழல் பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்கு கண்கவர் விருந்து படைக்க காத்திருக்கிறது.

நன்றி: ‘புதிய தலைமுறை’ வார இதழ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here