அதுவொரு கரடுமுரடான மலைப்பாதை. 10 முதல் அதிகபட்சமாக 15 அடி அகலமே உள்ள மலைப்பாதை. வளைந்து நெளிந்து மேல் நோக்கிச் செல்லும் காட்டுப்பாதை. வழியெங்கும் சிறியதும் பெரியதுமான கற்கள், பாறைகள். நடந்து செல்வது என்பதே சற்று கடினமான செயல்தான். வழுக்கும் கற்கள்.
நாம் சாதாரணமாய் பயணிக்கும் டூவீலரிலோ அல்லது காரிலோ இப்பாதையில் பயணிப்பது என்பது இயலாத காரியம். டூவீலர் நிச்சயம் நம்மைக் கீழே தள்ளி விட்டுத், தள்ளி நின்று சிரிக்கும். கார் என்றால் வழியிலேயே அச்சு முறிந்து, வலி தாங்காமல் அழத் தொடங்கிவிடும்.
ஜீப் மட்டுமே, மூச்சைப் பிடித்துக் கொண்டு, தள்ளாடித் தள்ளாடி மலையேறுகிறது. நானும், எனது ஆறு நண்பர்களும் ஒரு வாடகை ஜீப்பில் மெல்ல மெல்ல, மேலே மேலே மலைப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
வழியெங்கும் கற்பாறைகள். இடது புறம் சாய்ந்த ஜீப், நாம் சுதாரிப்பதற்குள் வலது புறம் வேகமாய் சாய்கிறது. வலப்புறம் கைகளை வலுவாய் ஊன்றினால், திடீரென்று பள்ளத்திற்குள் இறங்கி, நம்மை முன்னே தள்ளுகிறது.
கொஞ்சம் அசந்தாலும் நம் மூக்கு உடைபட்டு உதிரம் நிச்சயமாய் வெளியே வந்து எட்டிப் பார்க்கும். பேசும்போது கூட கவனமாய் பேச வேண்டியிருக்கிறது. திடீரென பள்ளத்தில் வண்டி இறங்கும்போதும், தொடர்ந்து குலுங்கிக் குலுங்கியேச் செல்லும் போதும், நம்மையறியாமல் நமது நாக்கினை நமது பற்களே, பதம் பார்த்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆட்டம் என்றால் அப்படி ஒரு ஆட்டம், குலுக்கல் என்றால் அப்படி ஒரு குலுக்கல். உடல் களைத்துத்தான் போய்விட்டது. ஒரு நிமிடம், ஒரு நொடி, இருக்கையில் நிம்மதியாய் அமர முடியவில்லை. முன்னும், பின்னும், இடதும், வலதுமாய் விழுகிறோம். ஆங்காங்கே நீர் நிரம்பியோடும் சிற்றாறுகள் குறுக்கிடுகின்றன. தண்ணீரில் வேகமாய் இறங்கி, குலுங்கிக் கரையேறுகிறது வண்டி.
ஊட்டி, கொடைக்கானல் என உயரமான, பல மலைகளில் காரில் பயணிக்கும் போது கிடைக்காத ஒரு புது அனுபவம் இம்மலையில் நிச்சயமாய் கிடைக்கும். மலைப்பாதையில் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமில்லை, ஐந்து அல்லது ஆறு கிலோமீட்டர்கள்தான். பயணிக்கும் நேரம் அதிக பட்சம் ஒரு மணி நேரம். ஆனாலும் மறக்க இயலாத பயணமாய் இப்பயணம் அமையும்.