தென்மேற்கு பருவமழை போக்கு காட்டி வருவதால் நீர்வரத்து குறைந்து கடையம் ராமநதி அணை குட்டையாக காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராமநதி அணை அமைந்துள்ளது. இந்த அணையை 1974-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி விவசாயம் மற்றும் குடிநீர் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த அணையின் மூலம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட தெற்கு கடையம், கீழக்கடையம், மேலக்கடையம், ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், கோவிந்தபேரி, மந்தியூர், ராஜாங்கபுரம், பிள்ளையார்குளம், வீராசமுத்திரம், மீனாட்சிபுரம், வாகைகுளம், பாப்பான்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும் சுற்று வட்டார கிராமங்களின் சுமார் ஒரு லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் ராமநதி அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் கார் பருவ நெல் சாகுபடி மற்றும் மற்ற பயிர்களுக்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைத்தது. இதன் மூலம் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு உற்சாகத்துடன் தொடங்கினாலும் அதன்பிறகு மழை பெய்யாமல் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டது என்றே கூறலாம். அவ்வப்போது தமிழகத்தையொட்டி உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சாரல் மழை பெய்து வந்தது. இதனால் வறண்டு கிடந்த ராமநதி அணைக்கு தண்ணீர் வரத்து இருந்தது. கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெயில் கொளுத்தி வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. வினாடிக்கு 18 கன அடி நீர்வரத்து இருப்பதாக கூறப்படுகிறது. அணையில் குறிப்பிட்ட அளவு நீர் இருந்தால் தான் கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது அணையில் நீர் மட்டம் குறைவாக இருப்பதால் கார் பருவ நெல் சாகுபடி கேள்விகுறியாகி உள்ளது.