கொரோனா ஊரடங்கினால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதை வியாபாரிகள் முதல் ரிசார்ட் நடத்துபவர்கள் வரை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.
அருவிகளின் தலைநகரமாகக் கொண்டாடப்படும் குற்றாலத்தில் வழக்கமாக ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரையில் பிரதான சீசன் காலங்களாகும். இந்நேரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் பொழியும் பருவமழை அள்ளிக்கொண்டு வரும் நீரானது, மூலிகைக் காடுகளின் வழியாக தவழ்ந்து வந்து பற்பல அருவிகளாக சமவெளியில் கொட்டுகிறது.
பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலி அருவி, சிற்றருவி, செண்பகாதேவி அருவி, தேனருவி, பழத்தோட்ட அருவி, கரடி அருவி என ஒன்பது அருவிகள் இங்கு உள்ளன. ஆனால் இவற்றில் முதல் ஐந்து அருவிகளில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவர். மற்ற அருவிகள் வனப்பகுதிக்குள் அமைந்திருப்பதால் அனுமதி கிடையாது.
சீசன் காலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் இந்த அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆராவாரத்துடன் குளித்து மகிழ்வார்கள். குறிப்பாக விடுமுறை தினங்களில் அலைமோதும் கூட்டத்தால் குற்றாலமே விழாக்கோலம் போன்று காட்சியளிக்கும். மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் சாரல் திருவிழா இங்கு மிகவும் பிரசித்தமானது.
இந்த நான்கு மாதங்களில் மட்டும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்வதால் நடைபாதை வியாபாரிகள் முதல் ரிசார்ட் உரிமையாளர்கள் வரை எல்லோருடைய காட்டிலும் அடைமழை தான். ஆனால் நிகழாண்டில் கொரோனா குற்றாலத்தையே தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டது.
ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் சுற்றுலாத் தலங்களுக்கு தளர்வு அளிக்கப்படவில்லை. இதன் காரணமாக குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் வரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. குளிக்கத்தான் யாருமில்லை. அனைத்து அருவிகளிலும் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் குற்றால சீசன் கால வருவாயை மட்டுமே நம்பியே வாழும் ஆயிரக்கணக்கான மக்கள், தங்களின் பிழைப்பில் மண் விழுந்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
குற்றாலத்தில் தங்கும் விடுதி நடத்திவரும் தெனாலி கூறுகையில், ‘’ஜுன், ஜூலை, ஆகஸ்ட் இந்த மூன்று மாத வருமானங்களை வைத்து தான் மீதமுள்ள ஒன்பது மாத காலத்திற்கு சம்பளம் மற்றும் இதர பராமரிப்பு செலவுகளை லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகள் பராமரிப்பு பணிகளை செய்ய முடியும்.
தென்மேற்குப் பருவமழை சீசனுக்கு அடுத்தபடியாக சபரிமலை ஐயப்பன் சீசன் நேரத்திலும் குற்றாலம் களைகட்டும். ஆனால் கொரோனாவால் இந்த ஆண்டு சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது சந்தேகம்தான் எனத் தெரிகிறது. ஆக மொத்தத்தில் ஒரு வருடம் பின்னோக்கி நகர்ந்துள்ளோம்.
குற்றாலத்தை சுற்றியுள்ள கிராமங்கள் பெரும்பாலும் குற்றால சீசன் சுற்றுலா வர்த்தகத்தையே நம்பியுள்ளது. வருடம் முழுவதும் சீசன் இருக்காது. ஆறு மாதம் சீசன். மீதி ஆறு மாதம் செலவுக்கு கூட தேறாது. சீசன் இல்லாத காலங்களில் கடன் வாங்கி அதனை சீசனில் அடைக்கும் ஏராளமானோர் உண்டு. இதனால் சுற்றுலா வருவாயை மட்டுமே நம்பியிருந்த வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், ரிசார்ட்/உணவக பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோரின் தங்களின் வாழ்வாதாரத்தை முழுவதுமாக இழந்து தவித்து வருகின்றனர்’’ என்கிறார் அவர்.