265 நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளித்த சுற்றுலாப் பயணிகள்..

1207

குற்றாலத்தில் 265 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க கடந்த மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இருப்பினும் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீண்ட காலமாக நீடித்து வந்தது.

இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்பேரில் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் குளிக்க இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.


குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலையில் அருவிக்கு சிறப்புப் பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை அலுவலர்கள் குழு பாதுகாப்பு வழிமுறைகளை கண்காணித்தல் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அருவிக்கரையில் சுற்றுலாப் பயணிகள் இடைவெளி விட்டு நிற்க வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. இடைவெளி விட்டு அருவிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் வரிசைப்படுத்தி அனுமதிக்கப்பட்டனர். குறைவான எண்ணிக்கையிலான நபர்கள் மட்டும் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

சிறிது நேரம் குளித்த பின்னர் அவர்களை வெளியேற்றிவிட்டு வரிசையில் நிற்பவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.


குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் குளிக்க வந்திருந்தனர். பெண்கள் கூட்டம் குறைவாகவும், ஆண்கள் கூட்டம் அதிகமாகவும் இருந்தது.

அருவியில் தண்ணீர் குறைவான அளவில் விழுந்தது. பனிப்பொழிவு காரணமாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வியாபாரிகள் கடைகளைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

அருவிகளில் குளிக்க வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here