தேர்தல் ராஜதந்தரி பிரசாந்த் கிஷோர்

329

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக தயாராகி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக இந்தியாவின் பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் கரம் கோர்த்துள்ளது தி.மு.க. நரேந்திர மோடி தொடங்கி நிதிஷ் குமார், அமரிந்தர் சிங், ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரின் ஆட்சி அரியணை கனவுகளை நனவாக்கியதன் பின்னணியில் பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

யார் இந்த பிரசாந்த் கிஷோர்? என்ன மாதிரியான வியூகங்களை அரசியல் கட்சிகளுக்கு வகுத்துக் கொடுகிறது இவரின் ஐ-பேக் நிறுவனம்? எந்தவொரு அரசியல் கட்சியையும் இந்நிறுவனத்தால் வெற்றி பெற வைக்க முடியுமா? பாரம்பரியமிக்க அரசியல்கட்சியாக உள்ள தி.மு.க., ஒரு கார்ப்பரேட் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது அவசியமா?

சில வளர்ந்த நாடுகளில் வாக்காளர்களின் மனவோட்டத்தை ஆராய்ந்து அதற்கேற்ப அரசியல் கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுப்பதற்கும், சமூக ஊடகங்களின் வழியே பிரச்சாரம் செய்வதற்கும் என்றே அரசியல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் இத்தகைய மார்க்கெட்டிங் நிறுவனத்தை முதன்முதலில் தொடங்கியவர்தான் பிரசாந்த் கிஷோர். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஐக்கிய நாடுகள் சபையில் சில ஆண்டுகள் பொது சுகாதார ஆய்வாளராக பணியாற்றினார். பின்பு அந்த வேலையை உதறிவிட்டு இந்தியா திரும்பியவர், இன்று இந்தியாவில் யார் ஆட்சியைப் பிடிக்க வேண்டும்? யார் அதிகாரத்தை இழக்க வேண்டும் என்பதை உட்கார்ந்த இடத்தில் இருந்தே முடிவு செய்யும் நவீன அரசியல் சாணக்கியராக திகழ்கிறார்.
கிஷோரின் அரசியல் வியூகங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு அவரது அமைப்பின் அரசியல் சார்பற்ற தன்மையும் வாக்காளர்களின் உளவியலை தெளிவாக கிரகித்துக் கொள்ளும் ஆற்றலுமே முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் முதன்முதலாக ராஜீவ்காந்தி தான் அரசியல் வியூக நிபுணர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தினார். அவருக்குப் பிறகு பெரிய அளவில் தொழில்முறை நிபுணர்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியவர் நரேந்திர மோடி. 2012-ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது, மோடிக்கு எதிராக வீசிய அலையை வெற்றியின் திசையில் மடைமாற்றியது இந்த பிரஷாந்த் கிஷோர் தான். அதன் பிறகு 2014-இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைத்தது. இதற்கு பின் நின்றது பிரஷாந்த்தின் ஐபேக். அப்போது முதல் மோடிக்கு நெருக்கமான நபராக வலம் வந்தார் இந்த பிரசாந்த் கிஷோர்.

அரசியல் பார்வையாளர் ஸ்ரீதர் சுப்ரமணியம் கூறும்போது, ‘’பிரசாந்த் கிஷோருடையது போல நிறைய நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் இவர் போல தொடர்ந்து வெற்றிகரமாக வேறு நிறுவனங்கள் இயங்கி வருகின்றனவா என்று தெரியவில்லை. 2011ல் குஜராத்தில் மோடிக்கு, 2014ல் நாடாளுமன்றத் தேர்தலில் மோடிக்கு, 2015ல் பீகாரில் நிதிஷ் குமாருக்கு, 2016ல் பஞ்சாப்பில் காங்கிரசுக்கு, 2019ல் ஆந்திராவில் ஜகன் மோகன் ரெட்டிக்கு என்று கைவைத்த இடங்களில் எல்லாம் வெற்றியை நாட்டி இருக்கிறார். 2020ல் தில்லி தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வேலை செய்திருக்கிறார். எக்சிட் போல் வைத்துப்பார்க்கும் பொழுது அங்கேயும் தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு சாதகமாக வரும் போல்தான் தெரிகிறது.

வெற்றியடையாத ஒரே ப்ராஜக்ட் 2017ல் உத்திரப்பிரதேசத்தில் காங்கிரசுக்கு பணிபுரிந்த பொழுதுதான். ஆனால் அதுகூட ஒரு பரிசோதனை முயற்சி என்றுதான் கொள்ள வேண்டும். உபியில் காங்கிரசுக்கு வாய்ப்பே இல்லை என்பது பிரஷாந்த் கிஷோருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். ஆனால் தங்களது உத்திகளை, அவற்றின் வலிமையை பரிசோதித்துப் பார்க்கும் முயற்சியாகவே அதனை பிரஷாந்த் அணுகினார் என்று நான் நம்புகிறேன்.
எனவே அப்படி ஒரு வெற்றிப்பின்னணி உள்ள நிறுவனம் திமுகவுடன் கைகோர்க்கும் பொழுது, அது பெரும் வலிமையை சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியத் தேர்தல்களில் சர்வதேச அணுகுமுறைகளை ஐ-பேக் நிறுவனம் கொண்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்க தேர்தல்களில் பிரச்சாரங்கள் எப்படி மக்களை சென்றடைகின்றன, எப்படிப்பட்ட பிரச்சாரங்கள் பயனளிக்கின்றன, எவை வேலை செய்வதில்லை போன்ற விஷயங்களில் பெரும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆய்வுகளை வைத்து தேர்தலை இவர் நிறுவனம் அறிவியல் பூர்வமாக அணுகுகிறது. அவை தொடர்ந்து பலனளிப்பதன் காரணம் இதுதான். நவீன உத்திகளை பல்வேறு முன்னேறிய தேசங்களில் இருந்து அறிந்து கொண்டு அவற்றை இந்தியாவுக்கு ஏற்றபடி முன்னெடுக்கும் பொழுது ரிசல்ட் வருகிறது. போலவே நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூக ஊடகங்களை மற்றும் இதர ஊடகங்களில் பரப்புரை செய்ய முடிகிறது. இப்படிப்பட்ட தொழில்நுட்ப அறிவும் ஆலோசனையும் இன்றி எந்தக்கட்சியும் இன்றைக்கு வெற்றிகரமாக பிரச்சாரம் செய்ய இயலாது.

எனவே இவர் திமுகவுக்கு தேவையா, அவர்களுக்கு தொண்டர் படை இல்லையா, பூத் லெவல் கட்டமைப்புகள் இல்லையா என்றெல்லாம் கேள்வி கேட்பது அவசியமற்ற கேள்விகள். ரஜினி படத்துக்கு முன்னணியில் இருக்கும் ஆடை வடிவமைப்பாளர்கள், இசை அமைப்பாளர்கள், காமிராமேன்கள் எல்லாம் ஏன் தேவை? அவர் சும்மா நடித்தாலே போதாதா என்று கேட்டால் எப்படி இருக்கும்?

அது போலத்தான் இதுவும். இப்போதைக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கும் வாய்ப்புள்ள கட்சி திமுகதான். அந்த வாய்ப்பை உறுதிப்படுத்திக்கொள்ள தேவைப்படும் எல்லா நடவடிக்கைகளையும் அந்தக்கட்சி எடுக்கவே செய்யும். செய்ய வேண்டும். எனவே பிரஷாந்த் கிஷோர் நிறுவனத்துடன் கைகோர்த்ததை புத்திசாலித்தனமான முடிவாகவே கருதுகிறேன். அது பலன் அளிக்கும் என்றும் நம்புகிறேன்’’ என்கிறார் அவர்.

கடந்த 5 ஆண்டுகளாக சுனில் என்பவர் தலைமையிலான ஓ.எம்.ஜி. என்கிற நிறுவனம், திமுகவுக்காக அரசியல் திட்டமிடல் குழுவை உருவாக்கி அதை வழி நடத்தி வந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலில் ‘நமக்கு நாமே’ என்ற முழக்கத்துடன் மு.க.ஸ்டாலினை தமிழகம் முழுவதும் சுற்றி வர வைத்ததும் இந்நிறுவனத்தின் ஐடியாதான்.

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஓ.எம்.ஜி. நிறுவனம் திமுக உடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டது. இச்சூழலில்தான் 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பணியாற்ற பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது திமுக. மார்ச் முதல் வாரத்திலிருந்து திமுகவுக்கான தேர்தல் பணிகளை ஐ-பேக் தொடங்கும் என கூறப்படுகிறது.

ஐ-பேக் எப்படி பணியாற்றுகிறது? அந்நிறுவனம் தரப்பில் கூறும்போது, ‘’கொடுக்கப்பட்டுள்ள மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் ஐ-பேக்-ற்கு பல எண்ணிக்கையிலான களப் பணியாளர்கள் உள்ளார்கள். ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும் எங்களது பொறுப்பாளர்கள் இருப்பார்கள். அவர்கள் உள்ளூர் வேட்பாளரிடம் சேர்ந்து பணியாற்றுவார்கள். இது அடையாளப்பூர்வமான உறவு மட்டுமே. இதேப்போல் ஒவ்வொரு மக்களவை தொகுதியிலும் பொறுப்பாளர்கள் இருப்பார்கள். இவர்கள் அனைவரும் பிராந்திய தலைவரிடம் அறிக்கை சமர்பிப்பார்கள். அவர் தலைமை அலுவலகத்திடம் சமர்பிப்பார். இங்கு சங்கிலி தொடர்பு போன்ற கட்டளைகள் பின்பற்றப்படுகிறது.

ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகளை அடையாளம் கண்டு, களத்தில் பணியாற்றும் உறுப்பினர்களிடம் உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்படும். இந்த பணிகள் அனைத்தையும் கட்சியுடன் சேர்ந்துதான் இந்த நிறுவனம் செயல்படுத்தும்.

மேலும் எங்களிடம் சமூக ஊடக குழு, ஆய்வுக்குழு, அரசியல் உளவுத்துறை பிரிவு மற்றும் சிறப்பு திட்டங்களை கையாளும் லாஜிஸ்டிக்ஸ் குழுக்களும் உள்ளன. அரசியல் கட்சிகளின் ப்ரமோசனுக்காக வாங்கும் கட்டணம் குறைந்தது 150 கோடி ரூபாய்’’ என்கிறார்கள் அவர்கள்.

ஆந்திராவில் பிரசாந்த் கிஷோர் வியூகம் வென்ற பின்னணி..

2019 சட்டப்பேரவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஆந்திராவில் வேலையை ஆரம்பித்தது ஐ-பேக் நிறுவனம். ஜெகன் என்னதான் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராக இருந்தாலும் அவர் மீதிருந்த சொத்துக் குவிப்பு வழக்குகள், கட்சி சார்பற்ற பொதுமக்கள் மத்தியில் அவருடைய இமேஜை பாதித்திருந்தது. இதனால் ஜெகன்மோகன் ரெட்டியின் இமேஜை தூக்கி நிறுத்துவதற்கான வேலைகளில் முதலில் கவனம் செலுத்தினார் பிரசாந்த் கிஷோர். ஜெகன்மோகன் ரெட்டியின் முகத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக ‘பிரஜா சங்கல்பா யாத்ரா’ என்ற பாதயாத்திரைக்கான ஐடியா கொடுத்தது பிரசாந்த் கிஷோர்தான்.

இதன்மூலம் 15 மாதங்களில் ஆந்திராவின் மூலைமுடுக்கெல்லாம் நடந்து சென்று சுமார் 2 கோடி மக்களை சந்தித்தார் ஜெகன்மோகன் ரெட்டி. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரத்துக்காக “ராவாலி ஜெகன்.. காவாலி ஜெகன்” (ஜெகனை நாங்கள் விரும்புகிறோம்.. ஜெகன் வர வேண்டும்..”) என்ற தீம் பாடல் வெளியிடப்பட்டது. சுமார் இரண்டரை கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்ட தேர்தல் தீம் சாங் என்கிற பெருமையை பெற்றது இந்தப் பாடல். இதன் பின்னணியில் இருந்ததும் சாட்சாத் பிரசாந்த் கிஷோரேதான். ஜெகன் இமேஜை பூஸ்ட் செய்ததோடு, சந்திரபாபு நாயுடு இமேஜ்க்கு வேட்டும் வைத்தார் அவர்.

‘உங்களை நாங்கள் நம்பமாட்டோம் சந்திரபாபு நாயுடு’ என்கிற பொருள்படும் கோஷத்தை உருவாக்கினார். ‘பை-பை பாபு’ என்கிற கோஷமும் இவர் கைவண்ணம்தான். இதுவும் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது.
‘ஒரு பீகார் வழிப்பறி கொள்ளையன் ஆந்திராவின் அரசியலை தீர்மானிப்பது சரியா’ என்று சந்திரபாபு நாயுடு பிரசாந்த் கிஷோரை காட்டமாக விமர்சனம் செய்ததிலேயே தெரிந்து கொள்ளலாம் பிரசாந்த் கிஷோரின் தாக்கம் எப்படியிருந்தது என்று. எதிர்பார்த்தது போலவே தெலுங்கு தேசம் கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி, ஆந்திராவின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் ஜெகன்மோகன் ரெட்டி.

மேற்கு வங்கத்தின் ராஜமாதாவாக இருந்த மம்தா பானர்ஜிக்கு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. 18 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற்று அசைக்க முடியாத சக்தியாக வலம்வரும் பாஜக, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதனைத் தொடர்ந்து பாஜகவை சமாளிப்பதற்கு பிரசாந்த் கிஷோரின் உதவி வேண்டும் என்பதை உணர்ந்துகொண்ட மம்தா பானர்ஜி அவரது ஐ-பேக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளார்.

சமீபகாலமாக மம்தா பானர்ஜி கையிலெடுத்திருக்கும் மண்ணின் மைந்தன் அரசியலுக்கு சூத்திரதாரி பிரசாந்த் கிஷோர்தான். ‘குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் எங்களின் இரண்டாம் சுதந்திர போராட்டம்’ போன்ற மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு காத்திரமான பரப்புரைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளார் அவர். வங்கத்து மக்கள் அனைவரையும் இந்துக்கள் என்கிற குடையின் கீழ் கொண்டுவர திட்டமிடும் பாஜகவிற்கு பதிலடி கொடுப்பதற்கு ரவீந்திரநாத் தாகூரையும், காளி தெய்வத்தையும் முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்யுமாறு மம்தாவுக்கு கச்சிதமாக வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here