‘காடுகளின் உண்மையான பாதுகாவலர்கள் பழங்குடிகளே’ – சி.கே.ஜானு

660

இந்திய பழங்குடி மக்களின் உரிமை போராட்ட வரலாற்றில் பிப்ரவரி 19 முக்கியமான நாள். 2001-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளாவின் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த நிலமில்லா பழங்குடி சமூகத்தினர், தங்களுக்கு விவசாயத்திற்கு ஏற்ற நிலத்தை தரக் கோரி தலைமைச் செயலகம் முன்பு போராட்டத்தை தொடங்கினர். 48 நாட்கள் தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு பழங்குடியினருக்கு நிலத்தை பகிர்ந்தளிக்க அப்போதைய கேரள முதலமைச்சர் ஏ.கே.அந்தோணி ஒத்துக் கொண்டார். ஆனால் கொடுத்த வாக்குறுதியை ஒரு வருடம் ஆகியும் நிறைவேற்றாத காரணத்தால் மறுபடியும் தங்கள் போராட்டத்தை தொடங்கினர் பழங்குடியினர். ஜனவரி 2003-ம் ஆண்டு போராட்டத்தின் ஒரு வடிவமாக முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்திற்குள் குடிசைகளை அமைத்தனர் பழங்குடியினர். இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் பழங்குடி பெண்ணான சிகே ஜானு.

அந்த வருடம் பிப்ரவரி மாதம் போராட்டக்காரர்களை காட்டிற்குள் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியாக அனைத்து குடிசையும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. நடந்த கலவரத்திற்கும் தங்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்ததற்கும் காரணம் வனத்துறை அதிகாரிகளே என குற்றம் சுமத்தினர் பழங்குடியினர். அவர்களுக்கு எதிரான வன்முறையும் கைதும் தொடர்ந்தன. இதன் உச்சமாக பிப்ரவரி 19 அன்று போராட்டத்தின் மையமாக திகழ்ந்த இடத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர் ஒருவரும் போலீஸ் அதிகாரி ஒருவரும் ஒருவரும் பலியானார்கள். பழங்குடியினர் பலர் படுகாயமடைந்தனர். சி.கே.ஜானு உள்ளிட்ட பழங்குடியினர் தங்களுக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளுக்காக போராடி வருகின்றனர். அவரிடம் பேசினோம்.

இன்றும் இந்தியாவில் பழங்குடியினர் சந்திக்கிற பிரச்சனை என்ன?

காட்டில் நாங்கள் வாழ்ந்து வரும் நிலங்களை வனத்துறையினரும் கடத்தல் கும்பல்களும் கைப்பற்றுகின்றனர். இப்போதெல்லாம் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள் எங்களுக்கு வேலை தருவதில்லை. இதன் விளைவாக பழங்குடியினர் வறுமையில் தள்ளப்பட்டு பசி பட்டினியில் இறக்கின்றனர். எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. ஆயிரக்கணக்கான பழங்குடியினர் பல நோய்களில் சிக்கி தவிக்கின்றனர்.

சாராயத்தையும் சுத்தமற்ற குடிநீரையும் குடிப்பதாலேயே பழங்குடியினர் இறப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் உண்மையில் வறுமையே காரணம். பயிர் செய்ய ஒரு அங்குலம் நிலம் கூட எங்களுக்கு இல்லாதபோது எப்படி நாங்கள் சாப்பிட முடியும்?

ஐம்பது வருடங்களுக்கு முன்பும் இதே நிலைமை தான். அப்போது பழங்குடியினர் கொத்தடிமைகளாக இருந்தனர். மனிதர்களாகவே அவர்கள் நடத்தப்படவில்லை. வனத்துறையும் எங்களை மோசமாக நடத்தினர். பழங்குடியினரை பொதுச் சமூகம் ஒருபோதும் மனிதர்களாக அங்கீகரிக்க விரும்பவில்லை.

எங்கள் நிலம் திருடப்பட்டது என்ற உணர்வு 1940, 50-களில் கூட எங்களுக்கு இருந்தது. என் பெற்றோரும் தாத்தா, பாட்டியும் இதை என்னிடம் கூறியுள்ளனர். ஆனால் யாரும் அப்போது போராடவில்லை. 80-களுக்குப் பிறகே நிலைமை மாற ஆரம்பித்தது. 80-களில் பழங்குடியிருக்காக பேச சில சிறு குழுக்கள் எழுந்தன. வேறு வழியின்றி வாக்கு வங்கி அரசியலுக்காகவாது பழங்குடியின பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் பேச தொடங்கினர். பழங்குடியின பிரச்சனைகளை பழங்குடி பிரச்சனைகளாக இந்த அரசியல் கட்சிகள் அணுகவில்லை. அவர்களின் அரசியல் திட்டங்களில் நாங்கள் பகடைக்காயாக நடத்தப்பட்டோம்.

சிறுமியாக இருக்கும்போதே என் பெற்றோருடன் ஊர்வலங்களில் நடந்து சென்று சத்தமாக முழக்கமிடுவேன். முழக்கங்களின் அர்த்தம் அந்த வயதில் எங்களுக்கு தெரியாது. பெரும்பாலும் இஞ்சி அல்லது மிளகுக்கு விலை உயர்வு கோரி இந்த ஊர்வலங்கள் நடைபெறும். ஆனால் ஊர்வலத்தில் முழக்கமிடும் எந்த பழங்குடியினரிடமும் இந்த பயிர்களை விளைவிக்க ஒரு இன்ச் நிலம் கூட இருக்காது. மற்ற சமயங்களில் சம்பள உயர்வு கோரி போராட்டம் நடைபெறும். இறுதியில் கட்சி தலைவர்கள் விவசாயிகளிடம் சமரசம் செய்து கொண்டு பழங்குடியினரை கைவிட்டுவிடுவார்கள்.

நிலங்களில் எங்களுக்கு உரிமை இல்லாதபோது உயிர் வாழ்வேதே கடினம் என்பதை நாங்கள் இப்போது தெரிந்து கொண்டோம். எங்கள் கோரிக்கை எளிமையானது: நாங்கள் பிறந்த நிலத்தில் வாழ்வதற்கும் இறப்பதற்கும் உரிமை வேண்டும். இதுவே பழங்குடியினரின் அடிப்படை உரிமை. பொது சமூகத்தில் உள்ள மக்களுக்கு வேறு வாய்ப்புகள் உள்ளன. பொது சமூகத்தில் வாழ்பவர்களோடு எங்களை ஒப்பிட்டு பார்ப்பது தவறானது.

ஒருமுறை எங்கள் நிலத்திலிருந்து எங்களை அப்புறப்படுத்திவிட்டால், அதன்பிறகு நாங்கள் அடிமையாகவோ அல்லது கூலியாகவோ தான் இருப்போம். முன்பு தண்ணீர் தேவைக்காக நிலத்தை தோண்டிய எங்கள் மக்கள் இன்று குழாயில் தண்ணீர் பிடிக்க போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இதெல்லாம் ஏன் நடக்கிறது என்றால் அரசாங்கம் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களால் நாங்கள் வாழும் முறையும் நிலமும் அழிந்துள்ளன.
ஒவ்வொரு வருடமும் பழங்குடி பகுதிகளில் நூற்றுக்கணக்கான சாலைகள் போடப்படுகின்றன. ஆனால் ஆதிவாசிக்கு சொந்தமாக ஒரு சைக்கிள் கூட இருக்காது.

எங்கள் முன்னோர்கள் இயற்கையிடம் இருந்து பல விஷயங்களை கற்றனர். எங்கள் விவசாய நடைமுறைகள், பாத்திரங்கள், குடிசைகள் என நாங்கள் பயன்படுத்தும் அனைத்தும் எங்களால் உருவாக்கப்பட்டது. நிலம் மற்றும் காடுகள் மீது எங்களுக்கு உரிமை இருக்கும் வரை தான் இதெல்லாம் சாத்தியம். இப்போது மையநீரோட்ட சமூகத்தில் வாழும் மக்களோடும் போராட வேண்டியுள்ளது. இதில் நாங்களே தோல்வியாளர்கள்.

எங்கள் சமூகத்திற்கு சொந்தமாக சுடுகாடு வேண்டும் என்று போராடியதே வயநாட்டில் நில உரிமைக்காக நாங்கள் நடத்திய முதல் போராட்டம். இது 80-களில் நடைபெற்றது. எங்கள் சமூகத்திற்கு சொந்தமான சுடுகாட்டை அருகிலுள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த நிலத்துக்காரர் ஆக்கிரமித்திருந்தார். இதை தெரிந்த நாங்கள் கூட்டமாக சென்று எங்கள் நிலத்தை மீட்டோம். உடனடியாக அவர் போலீசை அழைக்க, எங்கள் மக்கள் பலரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இதை அறிந்து கோடாலி மற்றும் மண்வெட்டியோடு காவல்நிலையம் சென்ற பெண்கள், அடைத்து வைத்திருந்த ஆண்களை விடுவித்தனர். அப்போதிருந்து போராட்டத்தின் மூலம் எங்களுக்கு சொந்தமான பல நிலங்களை மீட்டுள்ளோம். ஆனால் இது இன்னும் முழுதாக முடியவில்லை. எங்களின் உரிமையை யாரும் விசாரிக்கவும் இல்லை, அதை தீர்க்கவும் இல்லை.

அரசியலில் எப்போது நுழைந்தீர்கள்? எந்தப் பிரச்சனை உங்களை அரசியல் களத்தை நோக்கி செல்ல வைத்தது?
அறிவொளி திட்டத்தின் மூலம் களப்பணியில் நுழைந்தேன். அதன் பின் கம்யூனிஸ்ட் ஊர்வலங்களில் பங்கெடுத்து விவசாய தொழிலாளர் சங்கத்தில் உறுப்பினர் ஆனேன். ஆனால் போராட்டத்தில் முழுங்குவதை தவிர எங்கள் மக்களுக்கு வேறு எந்த பங்கும் இல்லை. அரசியல்வாதிகளின் விளையாட்டில் நாங்கள் வெறும் பகடைகாய்கள். கட்சி தலைவர்கள் உள்ளூர் முதலாளிகளாகவும் உயர் சாதியினராவும் இருந்தனர். அவர்கள் எங்கள் குடிசைகளுக்கு வருவதில்லை. ஆனால் ஊர்வலத்திற்காக மட்டும் எங்களை தேடுவார்கள். எப்போதாவது எங்கள் பிரச்சனையை எழுப்பும் போது, இவையெல்லாம் கொள்கை சார்ந்த பிரச்சனைகள், உயர்நிலை கமிட்டி தான் முடிவு செய்ய வேண்டும் என உள்ளூர் தலைவர்கள் கூறிவிடுவார்கள். இறுதியில் கட்சியை விட்டு விலகினேன். பின்னர் பாஜகவில் சேர்ந்தேன். பாஜகவும் பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்கு வேட்டு வைத்ததும் அதிலிருந்து விலகிவிட்டேன். இப்போது நான் எந்தக் கட்சியிலும் இல்லை. பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிகளுமே பழங்குடிகளையும், தலித்துகளையும் குடிமக்களாகவே கருதுவதில்லை.

யாரையாவது பார்த்து உத்வேகம் பெற்றதாலோ அல்லது யாருடைய கதையாவது வாசித்து விட்டோ நான் அரசியலுக்கு நுழையவில்லை. என்னைச் சுற்றியுள்ள பழங்குடி மக்களின் நிலைமையை கண்டே போராட்ட களத்திற்கு வந்தேன். எங்களிடமிருந்து பிடுங்கப்பட்ட நிலத்தை மீட்பதற்காக பல போராட்டங்களை நாங்கள் நடத்தியுள்ளோம். இந்த போராட்டங்கள் இனியும் தொடர்ந்து நடைபெறும்.

நில அபகரிப்பு என்பது பழங்குடி மக்களின் பிரச்சனைகள் மட்டுமல்ல. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்து பிரிவினரின் பிரச்சனை இது. தலித், மீனவர்களுக்கும் வளங்களின் மீது உரிமை உள்ளது. அதை பாதுகாக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அது உண்மையான ஜனநாயகமாக இருக்காது.

பழங்குடி மக்களின் பிரதான கோரிக்கை எது?

எங்கள் முதல் கோரிக்கை இந்தியா எங்கும் வனத்துறை கலைக்கப்பட வேண்டும். எல்லா வனப்பகுதிகளிலும் ஆதிவாசி கிராம பஞ்சாயத்து உருவாக்கப்பட்டு காடுகளை மேலாண்மை செய்யும் பணியை அவர்களிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். எங்கள் மக்கள் காடுகளை நன்றாக பாதுகாத்து கொள்வார்கள். இதற்கு உலக வங்கியின் உதவியெல்லாம் தேவையில்லை. காடுகளின் உண்மையான பாதுகாவலர்கள் ஆதிவாசிகளே.
ஆதிவாசியும் சுற்றுச்சூழலும் வேறு வேறு அல்ல, ஒன்று தான். இந்த இரண்டையும் பிரிக்க முடியாது. தங்கள் சொந்த நன்மைக்காக இயற்கையை பழங்குடியினர் பயன்படுத்தி கொள்கின்றனர் என பொது சமூக மக்கள் நினைக்கின்றனர். எங்கள் மக்கள் இயற்கையை பாழாக்கவில்லை. மாறாக அதன் ஒரு பகுதியாகவே இருக்கிறோம். அதேப்போல், ஒவ்வொரு ஆதிவாசிக்குள்ளும் இயற்கை குடி கொண்டுள்ளது.

அரசியலமைப்பிலும் மற்ற சட்டங்களிலும் பழங்குடி மக்களுக்கு போதிய சட்டப் பாதுகாப்பு உள்ளதா?

அரசியலமைப்பிலும் சட்டத்திலும் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிற சட்டப் பாதுகாப்பு என்பது வெறும் மாநிலங்கள் தங்களை பாதுகாத்து கொள்ளவே. சமூக சூழல் தங்களுக்கு ஆபத்தாக மாறும் போது தான் அரசாங்கம் இதுபோன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும். மேலும் பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்காக இயற்றப்பட்ட பல சட்டங்கள் கண்டுகொள்ளப்படாமலும், நாட்டின் பல பகுதிகளில் முழுதாக நிறைவேற்றாமலோ உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here