‘எனக்கு கிடைச்ச ஆசீர்வாதம்’ – நிவேதா தாமஸ் நெகிழ்ச்சி பேட்டி

352
‘எனக்கு கிடைச்ச ஆசீர்வாதம்’ – நிவேதா தாமஸ் நெகிழ்ச்சி பேட்டி

தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாக உருவெடுத்துள்ளார் நிவேதா தாமஸ். ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நிவேதா, இப்போது ‘ படத்தில் தர்பார் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து இந்திய திரையுலகின் கவனத்தையே ஈர்த்துள்ளார். அவரிடம் பேசியதிலிருந்து..

‘பாபநாசம்’ படத்துக்குப் பிறகு ‘தர்பார்’. ஏன் இவ்வளவு பெரிய கேப்?

‘பாபநாசம்’ படத்துக்குப் பிறகு பப்ளிக் எக்ஸாம்ல மும்முரமாகிட்டேன். அதுக்கப்புறம் டைரக்டர் மோகன் கிருஷ்ணா சார்ட்ட இருந்து அழைப்பு வந்தது. முதல்ல தமிழ் படம்ன்னு தான் நினைச்சேன். ஆனால் அது தெலுங்கு படம். தெலுங்குல பல நல்ல படங்களில் நடிக்க சான்ஸ் வந்தாலும், தமிழ் படத்துல நடிக்கணும் என்கிறதுக்காகதான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

‘தர்பார்’ பட சூட்டிங் ஆரம்பிக்கிற வரையிலும் ரஜினி சார நேர்ல பார்த்ததே கிடையாது. கமிட் ஆகுறதுக்கு 3 மாசத்துக்கு முன்னாடி கூட, ‘ரஜினி சார மீட் பண்ண அப்பாயின்மென்ட் கேட்டுப் பாருங்களேன்’னு என்னோட மேனேஜர்கிட்ட சொல்லிட்டு இருந்தேன். கமலுக்கு மகளாக நடிச்ச பிறகு ஏற்பட்ட இடைவெளி, ரஜினி மகளாக நடித்து தான் முடியணும்னு உண்மையிலே நான் எதிர்பார்த்திராதது.

தமிழ் படங்களை செலக்ட் பண்ணிதான் நடிக்கிறீங்களா?

முதல்ல படம் என்ன சொல்ல வருதுன்னு பார்ப்பேன். அப்புறம் ஒரு நடிகையாக சேலஞ்சான கேரக்டர எதிர்பார்ப்பேன். தமிழ் சினிமாவில் இருந்து நான் விரும்பி ஒதுங்கி இருக்கல. கோலிவுட் எனக்கு ஃப்ரெண்ட்லியான இண்டஸ்ட்ரீ. இது எனக்கு நிறைய கொடுத்துருக்கு. நிஜமாவே சொல்றேன். தமிழ்ல நல்லா பேசணும் என்கிறதுக்காகதான் இங்க பல திரைக்கதைகள தேடிட்டு இருக்கேன்.

பல மொழிகள்ல வெளியாகும் படங்கள்ல நடிக்க ஆசைப்படுறேன். பெங்காலி படத்தில் நடிக்க கூட ஆர்வமாக உள்ளேன். நம்மளோட பழக்கவழக்கமும் நடத்தைகளும் மொழிக்கு மொழி மாறுபடுகின்றன. அந்த சவாலை நான் சந்திக்க விரும்புறேன்.

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களின் மகளாக நடிப்பது எப்படி இருக்கிறது?

கமல் சார், மோகன்லால் சார், ரஜினி சார் இவங்ககூட சேர்ந்து நடிச்சது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம். சினிமா மீது மோகன்லாலுக்கு இருக்கும் பேரார்வம் மற்றும் திரையில் எல்லாம் முழுமையாக கச்சிதமாக வரவேண்டும் என்று கமலுக்கு இருக்கும் ஆசை ஆகியவற்றை பார்த்து எனக்கே மயக்கம் வந்துவிட்டது.

‘பாபநாசம்’ படத்துல நடிச்ச போது, படத்தில் வரும் தோற்றத்தில் தான் முதலில் கமல் சாரை பார்த்தேன். அதனால இதுபோன்ற பெரிய நடிகரோடு சேர்ந்து நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் ஏற்படவில்லை. ஆனால், தர்பார் படத்தோட போஸ்டர் ஷூட்டின் போது தான் முதலில் ரஜினி சாரை பார்த்தேன்.

சூட்டிங்ல முதல் ஷாட் எடுத்து முடிச்சதுக்கு அப்புறம், எங்களுக்குள்ள எதிர்பாராத நல்ல தொடர்பு ஏற்பட்டது. ‘அடடே, அருமையா நடிக்கிறாளே இந்தப் பொண்ணு’ன்னு சொன்னார்.

ரஜினி சார் ஒரு எனர்ஜிட்டிங் பெர்சன்; ஜாலியான மனுஷர். அவர் கைகுலுக்குறது கூட உறுதியாக இருக்கும். தேர்ந்த பயிற்சியாளர் உதவியோடு தினமும் ரெண்டு முறை எக்சர்சைஸ் பண்றதோடு, கண்டிப்பான டயட்டையும் ஃபாலோ பண்றார். இதை எல்லாம் பார்க்கிறப்போ, நாமும் ஒவ்வொரு படத்துக்கும் கடுமையாக உழைக்கணும் தோணுச்சு. மும்பையின் நெருக்கடி மிகுந்த பகுதியான மரைன் டிரைவில் படப்பிடிப்பு நடந்த போது கூட்டம் கூடுவதை பற்றி கவலைப்படாமல் நன்றாக ஒத்துழைத்தார்.

தன்னைச் சுற்றி நடப்பவற்றை அமைதியாக கவனிப்பார் ரஜினி சார். உணவு குறித்து நாங்கள் இருவரும் அதிகமாக விவாதிப்போம். அவரோடு இருக்கும்போது நாமும் ஆன்மீகம் பத்தி சிந்திக்க தொடங்கி விடுவோம். சாந்தமாக இருந்தாலும் அவர் பேசும்போது நமக்கு பாசிட்டிவ் என்ணம் உருவாகும்.

சில கேள்விகளை அவர் தவிர்க்கிறார்ன்னு பலர் சொல்றாங்க. கரெக்ட்டுன்னு தான் நினைக்கிறத அவர் சொல்றதாகவே நான் நினைக்கிறேன். தான் சொல்றது யாரையும் காயப்படுத்தி விடக்கூடாது என்கிறதுல அவர் கவனமாக இருப்பதை பார்த்து எனக்கு வியப்பா இருந்துச்சு.

நயன்தாரா என்ன சொன்னாங்க?

அவரோடு அதிக காட்சிகள் நடிக்காவிட்டாலும், ‘சினிமாத் துறையில் ஒரு பெண்ணாக நல்ல வழியை வகுத்தது நீங்கள் தான்’ன்னு அவர்கிட்ட சொன்னேன். குறிப்பிட்ட இமேஜில் சிக்காமல் இருப்பதில், தான் கவனமாக இருப்பதாக சொன்னாங்க.

ஐந்து வருடம் படத்தில் நடிக்காமல் இருந்தாலும் மீண்டும் சினிமாவில் உங்கள் இடத்தை தக்க வைச்சிருக்கீங்களே?
முதல் படம் நடிச்ச பிறகு ஒரு சின்ன கேப் எடுத்துக்கிட்டேன். நான் திரும்பி வரும்போது அதுகுறித்து யாரும் என்னிடம் கேட்கவில்லை. தெலுங்கில் கூட ‘ஜெய் லவ குசா’ படத்திற்குப் பிறகு வேறு படத்தில் நடிக்கவில்லை. ஆனாலும் மக்கள் என்னை மறக்கவில்லை. இது எனக்கு கிடைத்த ஆசிர்வாதமா என எனக்கு தெரியவில்லை.

உங்களைப் பொருத்தவரை ‘தர்பார்’ எப்படியிருக்கிறது?

ரஜினி சாரை கொண்டாடக் கூடிய படம் தர்பார். படத்தின் டிரெயிலர் எப்படியிருக்குதுன்னு எல்லார்கிட்டயும் நான் கேட்டபோது, காக்கி உடையில் ரஜினியை பார்ப்பது சந்தோஷமாக இருக்குதுன்னு சொன்னாங்க. நானும் இந்த படத்தில் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்கிறத நம்ப முடியல. உங்களை உணர்ச்சிவசப்படுத்தும் அருமையான படம் தர்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here