கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் வரலாற்று சிறப்புமிக்க நகரம் சுல்தான் பத்தேரி. திப்பு சுல்தான் இங்கே ஒரு கோட்டையைக் கட்டியதால் இப்பெயர். சுல்தான் பத்தேரி அதன் சரித்திர சிறப்புகளை தாண்டி பிரம்மாண்ட மலைக்குன்றுகளால் சூழப்பட்டிருக்கும் பேரழகை நாட்பூராவும் ரசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் இந்த கட்டுரை சுல்தான் பத்தேரி நகரம் எவ்வளவு அழகாக இருப்பது பற்றி அல்ல, இங்குள்ள மக்கள் எவ்வளவு அழகாக நகரத்தை பராமரிக்கிறார்கள் என்பதை பற்றியது.
சுல்தான் பத்தேரி நகரின் தெருக்களில் சின்ன குப்பையை கூட உங்களால் பார்க்க முடியாது. சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு முகம் சுழிக்கும் சம்பவம் உங்களுக்கு இங்கு ஏற்படாது. தூய்மையாகவும் சாலையோரத்தில் பூச்செடிகளும் இருப்பது சுற்றுலாவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
தொடர்ந்து கடந்த சில வருடங்களாக கேரளாவின் தூய்மையான நகரம் என்ற விருதை இந்த நகரம் பெற்று வருகிறது. இந்த தூய்மைக்கு முழுமுதற் காரணம் சுல்தான் பத்தேரியின் சேர்மன் சி.கே. சதாசிவம். நகரை அழகுபடுத்த பல புதுமையான முயற்சிகளையும் குப்பைகளை அகற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிகளையும் தான் பதவியில் இருக்கும்போது எடுத்துள்ளார்.
சிகே சகாதேவன் பதவியேற்றதும், முதல் வேலையாக நகரத்திலிருந்து குப்பையை முழுவதுமாக அகற்றும் திட்டம் தொடங்கப்பட்டது. நகரம் முழுவதும் இருந்த வடிகால்களில் கடந்த 30 வருடங்களாக அகற்றப்படாமல் இருந்த கழிவுகளை முதலில் சுத்தப்படுத்த தொடங்கினர். இதோடு சேர்த்து, சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் ஆபத்துகளை அறிந்து நகராட்சி முழுவதும் பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டது.
அதுமட்டுமல்ல, நகரத்தை அழகுபடுத்துவதற்காக சாலையோரங்களில் மரங்கள், செடிகள் கவாத்து செய்யப்பட்டன. தெருவெங்கும் அலங்கார செடிகள், புல்வெளி அமைக்கப்பட்டன. அழகுபடுத்துவது எளிமையானது, ஆனால் அதை பராமரிப்பது கொஞ்சம் சிக்கலானது. இந்த முயற்சியில் எந்த தடங்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என கவுன்சிலர்களும் நகராட்சி ஊழியர்களும் கண்ணும் கருத்துமாக உள்ளனர்.
இரவு நேரத்தில் யாராவது பொது இடங்களில் குப்பையை கொட்டிவிக்கூடாது என்பதால் முழு நேரமும் விழிப்போடு இருக்கிறார்கள். இதற்கு உள்ளூர் மக்களும் ஆதரவு அளித்ததால் விரைவிலேயே குப்பை தொந்தரவு முடிவுக்கு வந்தது. நகரத்தின் தூய்மை கெடாமல் பராமரிப்பதற்காக, நகராட்சியின் பணியாற்றும் ஒன்பது ஊழியர்கள் தங்கள் வண்டிகளை எடுத்துக்கொண்டு தினமும் அதிகாலை 4 மணிக்கு சுத்தப்படுத்த செல்கின்றனர். எந்நேரமும் நகரம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக மதியவேளையிலும் சாலையில் கிடக்கும் சிறு சிறு குப்பைகளையும் இலைகளையும் அவர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.
நகராட்சியில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின் விளைவாக, எந்தவொரு நிகழ்ச்சியோ அல்லது அரசியல் கூட்டங்களோ நடந்து முடிந்த 24 மணி நேரத்திற்குள் அனைத்து விளம்பர தட்டிகள், கொடிகள் வெற்றிகரமாக அகற்றப்படுகின்றன.
இவையெல்லாவற்றையும் விட முக்கியமான முன்னெடுப்பாக இருப்பது என்னவென்றால், பொதுக் கழிப்பறைககளுக்கும் பொதுமக்களின் கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும் மிகச்சில நகரங்களில் இதுவும் ஒன்று. மக்களுக்கு நல்லவிதமாக சேவைகள் வழங்குவதற்காக அவர்களிடமிருந்து கருத்துகளும் பரிந்துரைகளும் பெற வேண்டி வருகையாளர் புத்தகம் பராமரிக்கப்படுகிறது.
கடைசியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான அவர்களின் கழிவு மேலாண்மை பற்றி சொல்லியே ஆக வேண்டும். வீடுகள் மற்றும் கடைகளிலிருந்து பெறப்படும் குப்பைகளுக்கு நகராட்சி நிர்வாகம் பணம் கொடுக்கிறது. இவை உரங்களாகவும் மின்சாரமாகவும் மாற்றப்படுகிறது. இதற்காக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் கழிவு மேலாண்மை ஆலை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
தூய்மையான இடமாக மட்டுமல்லாமல் மக்களுக்கு நட்புறவான இடமாகவும் சுல்தான் பத்தேரி மாறியுள்ளது. சுகாதார மையத்திலிருந்து ஐந்து கிமீ சுற்றளவில் வசிக்கும் செவிலியர்கள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இ-ரிக்சாவில் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது.