பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக கொடைக்கானலில் தனியார் பேக்கரி ஒன்று, சுய சேவையாக பொதுமக்களே ரொட்டி பாக்கெட்களை எடுத்துக் கொண்டு, உரிய பணத்தை அங்குள்ள டப்பாவில் வைத்துச் செல்லும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கரோனா ஊரடங்கு காரணமாக கொடைக்கானலில் பேக்கரி கடைகளைத் திறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் ஏழு ரோடு அருகே உள்ள பேக்கரி ஒன்றில் எப்போதும் கிடைக்கும் வகையில் தினமும் 300-க்கும் மேற்பட்ட ரொட்டி பாக்கெட்களை தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.
கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடைகள் முழு நேரம் இயங்குவதில்லை. இதையடுத்து மாலையில் அடைக்கப்படும் பேக்கரி முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ரொட்டி பாக்கெட்களை வைத்துவிட்டு பணம் செலுத்த டப்பா ஒன்றையும் வைத்துவிட்டுச் செல்கின்றனர்.
ஊழியர்கள் இல்லாமல் சுய சேவை என்ற அறிவிப்புடன் பேக்கரி இயங்குகிறது. ரொட்டி பாக்கெட் தேவைப்படுவோர் தேவையானவற்றை எடுத்துக் கொண்டு உரிய பணத்தை டப்பாவில் போட்டுச் செல்கின் றனர். இதுகுறித்து பேக்கரி நிர்வாகத்தினர் கூறுகையில், கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சுயசேவை வசதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறது. என்றார். இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
நன்றி: தி இந்து தமிழ் திசை